Published:Updated:

'உறுப்புகள வித்தா நிறையா பணம் கிடைக்கும்னு சொன்னாங்க, ஆனா மனசு கேட்கல' - நெகிழும் ராஜா

உயிரோட இருக்கும்போது ஒரு குடும்பத்தைக் காப்பாத்தினவன், இறந்தும் 8 உயிர்களைக் காப்பாத்தியிருக்கான்.

இதய தானம்
இதய தானம்

'உயிரோட இருக்கும்போதே ஒரு குடும்பத்தையே காப்பாத்தினவன்தான் ஶ்ரீகாந்த. இறந்த பிறகும்கூட பல பேரோட குடும்பத்தைக் காப்பாத்திட்டு இருக்கான். இந்தப் பாக்கியம் யாருக்குக் கிடைக்கும். அந்த மனநிறைவுதான் எங்களுக்கு கிடைச்ச ஒரே ஆறுதல்' என்கிறார் ராஜா. மூளைச்சாவு அடைந்த தன் அண்ணன் மகன் ஸ்ரீகாந்த் பற்றி ராஜா நெகிழ்வோடு பேசிய வார்த்தைகள் இவை.

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 13-ம் தேதி உலக உடலுறுப்பு தான தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. உடலுறுப்பைத் தானம் செய்ததன் மூலம் 8 பேரில் குடும்பத்தில் ஒளியேற்றிய இளைஞரைப் பற்றிய பகிர்வு இது.

சென்னை அண்ணாநகர் புது காலனியைச் சேர்ந்தவர் பழனி, பெயின்டராக வேலை பார்க்கிறார், மனைவி மல்லிகா அக்கம் பக்கத்தில் வீட்டு வேலை செய்துவருபவர். இவர்களின் மூத்த மகன் ஶ்ரீகாந்த். ஏழ்மை காரணமாக ஶ்ரீகாந்தால் மேல்படிப்பைத் தொடர முடியவில்லை. பள்ளிப் படிப்பை முடித்த பின்பு, மெடிக்கல் ரெப்பாக வேலை செய்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி மூளைச்சாவடைந்ததால், அவரது உறுப்புகள் பலருக்கும் தானமாக வழங்கப்பட்டுள்ளன.

ஶ்ரீகாந்த் இறந்து இரண்டு வருடங்கள் கடந்தாலும், இன்னமும் அவரது இழப்பை ஈடுசெய்ய முடியாமல் திக்கற்று நிற்கும் குடும்பத்தாரிடம் பேசினோம்.

"என் அண்ணன் மகன்தான் ஶ்ரீகாந்த். ரொம்ப துடிப்பான பையன். கானா பாட்டெல்லாம் அழகா பாடுவான், அதனால எப்பவும் அவன சுத்தி பசங்க கூட்டம் இருந்துட்டே இருக்கும். நிறைய படிக்கணும்னு ஆசைப்பட்டான், குடும்ப கஷ்டத்தில அது முடியாம போச்சு. அவன் அப்பாவுக்கு குடிப்பழக்கம் இருக்கு. அதனால அவன் அம்மாதான் வீட்டு வேலை செஞ்சு குடும்பத்தை நடத்திக்கிட்டு வந்தாங்க. அவங்களால ஶ்ரீகாந்த்தை ப்ளஸ் டூ வரைதான் படிக்க வைக்க முடிஞ்சது. அவனுக்கு அடுத்து தங்கச்சி வேற படிச்சிட்டு இருந்தாள்...

ஶ்ரீகாந்த்தின் சித்தப்பா ராஜா
ஶ்ரீகாந்த்தின் சித்தப்பா ராஜா

குடும்ப கஷ்டத்தை உணர்ந்த ஶ்ரீகாந்த், மேல படிக்காம வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டான். அவன் படிப்பை நிறுத்திட்டாலும் அவன் தங்கச்சியைப் படிக்க வச்சான். சின்ன வயசிலேயே அவ்வளவு பொறுப்பா இருந்தான். கொஞ்சநாள் வீட்டு விஷேசங்களுக்கு பந்தல் போடுறது, பசங்களோட சேர்ந்து தினக்கூலி வேலைக்குப் போறதுனு ஏதாவது ஒரு வேலைக்குப் போய்கிட்டிருந்தான். அவனோட வருமானத்துலதான் குடும்பம் ஓடிச்சு. அவன்தான் குடும்பத்தைக் காப்பாத்துவானு நினைச்சிட்டு இருந்தோம். ஆனா, எங்க நம்பிக்கையெல்லாம் வீணாப்போச்சு" என்று கலக்கத்துடன் பேசத்தொடங்கினார் ஶ்ரீகாந்த்தின் சித்தப்பா ராஜா.

"படிச்சிட்டு ஏன் தினக்கூலிக்கு வேலைக்குப் போறே?'னு சொந்தகாரங்க திட்டினதைக் கேட்டுத்தான் மெடிக்கல் ரெப் வேலையில சேர்ந்தான். ஆனா, அதுவே அவனுக்கு ஆக்ஸிடென்ட் நடக்கக் காரணமாப்போச்சு. வேலையில சேர்ந்து மூணு மாசம்தான் இருக்கும். 2017-ம் வருஷம் டிசம்பர் 20-ம் தேதி காலையில சந்தோஷமா, வீட்டுல இருந்து வேலைக்குக் கிளம்பினவன் திரும்ப வரல. 'பைக் ஆக்சிடென்ட் ஆகி தலையில் அடிபட்டு சேர்க்கப்பட்டிருக்காருனு' ஸ்டான்லி ஆஸ்பிட்டல இருந்து போன்தான் வந்துச்சு. நாங்கெல்லாம் குடும்பத்தோட அடிச்சுபிடிச்சு ஓடுனோம். எப்படியாச்சும் அவனைக் காப்பத்திடணும்னு நினைச்சோம். ஆனா, இரண்டு நாளு ஐசியூவிலேயே வெச்சிருந்தாங்க, திடீர்னு 22-ம் தேதி ராத்திரி 7.30-மணிக்கு அவன் மூளைச்சாவடைஞ்சிட்டதா சொன்னாங்க...

மூளைச்சாவடைந்த ஶ்ரீகாந்த்
மூளைச்சாவடைந்த ஶ்ரீகாந்த்

எப்படியாவது பொழைச்சு வந்துருவானு எதிர்பாத்துக் காத்திட்டு இருந்தோம். நடந்தது ரெம்ப அதிர்ச்சியா இருந்தது. 'ஶ்ரீகாந்தைக் காப்பாத்த முடியாது'னு சொல்லிட்டாங்க. 'நீங்க சம்மதிச்சா அவன் உடல் உறுப்புகளைத் தானமா எடுத்துக்கிறோம். அது மூலமா உறுப்பு கிடைக்காம உயிருக்குப் போராடிட்டு இருக்கிற, எட்டு பேரைக் காப்பத்த முடியும்'னு சொன்னாங்க. ஏற்கெனவே எங்க சொந்தத்தில் ஒரு சின்ன வயசு பையன் கிட்னி ஃபெயிலியராகி தானம் கிடைக்காம இறந்தே போனான். அந்த மாதிரி நெறைய பேரு உறுப்பு தானம் கிடைக்காம இறந்துபோறாங்கனு பேப்பர்ல படிச்சிருக்கோம். 'நம்ம பையன்தான் பொழக்கிறதுக்கு வழியில்ல. அவனால நாலு பேர் உயிரைக் காப்பத்தலாம்'னு முடிவு செஞ்சு, முழு மனசோட உறுப்புகளைத் தானம் கொடுத்தோம்.

அவன் உயிரோட இருக்கும்போதே ஒரு குடும்பத்தையே காப்பாத்தினான். இறந்த பிறகும்கூட பலர் குடும்பத்தைக் காப்பாத்தியிருக்கான். உயிரைக் காப்பாத்துற பாக்கியம் யாருக்குக் கிடைக்கும். அந்த மனநிறைவுதான் எங்களுக்குக் கிடைச்ச ஆறுதல். நாங்க தானம்செய்ய முடிவு செஞ்சதும், 'உறுப்புகளை வித்தா நிறைய பணம் கிடைக்கும்'னு சொந்தக்காரங்க தொடங்கி, பலபேரு சொன்னாங்க. ஆனா, 'அது புள்ளையோட உயிருக்கு விலைபேசுறத்துக்கு சமம்'னு மறுத்துட்டோம்.

வருமானத்துக்கு வழியில்லை. இருந்தாலும், பையன் உறுப்புகளுக்காக காசு வாங்கி அதுல எப்படி வாழ முடியும்? அந்தப் பாவத்தை எப்படி நாங்க கழிக்கிறது. அதனால 'வேணாம்!'னு சொல்லிட்டோம்.
ஶ்ரீகாந்த்தின் சித்தப்பா ராஜா

ஶ்ரீகாந்தோட இதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள், தோல், நுரையீரல்னு மொத்தம் 8 உறுப்புகளைத் தானம் எடுத்துக்கிட்டாங்க. அதை யாருக்குக் கொடுக்குறோம்னு ஆஸ்பிட்டல சொல்லமாட்டாங்க. ஆனா, அதுல, இதயத்தைத் தானம் வாங்கினவரு ஒரு இஸ்லாமியர். அவர் மட்டும் எங்க அட்ரஸை எப்படியோ வாங்கி, இரண்டு முறை எங்கள நேருல வந்து பாத்தாரு. ஶ்ரீகாந்த்தோட அம்மா, அப்பா, தங்கச்சிக்கு டிரெஸ் எல்லாம் எடுத்துட்டு வந்தாரு. 'பண உதவி செய்யவா?'னு கேட்டாரு. ஆனா நாங்க மறுத்துட்டோம். ஒரு பக்கம் பணக் கஷ்டம் இருக்கத்தான் செய்யுது. அவன் தங்கிச்சி இப்போ படிப்பை நிறுத்திட்டா, வருமானத்துக்கு வழியில்லை. இருந்தாலும், பையன் உறுப்புகளுக்காக காசு வாங்கி அதுல எப்படி வாழ முடியும்? அந்தப் பாவத்தை எப்படி நாங்க கழிக்கிறது. அதனால 'வேணாம்!'னு சொல்லிட்டோம். மறுஜென்மம் மேலெல்லாம் எங்களுக்கு நம்பிக்கையில்லை. ஆனா, ஶ்ரீகாந்த மற்றவங்களுக்குள்ள வாழ்ந்துட்டு இருக்கான்கிறதுதான் எங்களுக்கான ஒரே ஆறுதல்" என்கிறார் அவர்.

உடல் உறுப்பு தானம்... மரணத் தருவாயில் இருக்கும் நோயாளிகளுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்; உயிர்காக்கும் உயரிய சிகிச்சை. உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை மூலம் ஒருவரிடமிருந்து 20-க்கும் மேற்பட்ட உறுப்புகளையும் திசுக்களையும் தானமாகப் பெற முடியும். நவீன மருத்துவத்தின் துணையுடன் எண்ணற்ற மனித உயிர்களுக்கு மறுவாழ்வைச் சாத்தியமாக்கியிருக்கிறது உடல் உறுப்பு தானம்.

உறுப்பு தானம்
உறுப்பு தானம்
Vikatan

அதே நேரத்தில் ஶ்ரீகாந்த் போன்று ஒரு குடும்பத்தின் அச்சாணியாக இருக்கக்கூடியவர்களின் இழப்பு என்பது அந்தக் குடும்பத்தினரால் ஈடு செய்ய முடியாததாக இருக்கும். அதனால்தான், 'உடலுறுப்பு தானம் செய்யக்கூடியவரின் குடும்பத்தினர் அல்லது வாரிசுகளுக்கு அரசு சார்பில் நிவாரணம், வேலைவாய்ப்பில் முன்னுரிமை போன்ற சலுகைகளை அளிக்க வேண்டும்' என்ற கோரிக்கைகளை சமூக ஆர்வலர்கள் முன்வைக்கிறார்கள். இதுபோன்ற நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்கும்போது, உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். ஆட்சியாளர்கள் மனது வைப்பார்களா?