Published:Updated:

`மறுஜென்மம் எடுத்திருக்கேன்; ஒரு விழிப்புணர்வுக்காகச் சொல்றேன்!’ -தேனாண்டாள் ஃபிலிம்ஸ் ஹேமா ருக்மணி

Hema Rukmani
Hema Rukmani ( www.instagram.com/hemarukmani )

``என்ன எண்ணெயில சமைச்சீங்க'ன்னு கேட்டதுக்கு `ரீஃபைண்டு ஆயில்'னு சொன்னாங்க. நான் சூரிய காந்தி ரீஃபைண்டு ஆயில்னு நினைச்சு சாப்பிட்டுட்டேன். ஆனா, அது...''

தமிழ் சினிமாவில், கேமராவுக்குப் பின்புறம் இருக்கிற செலிபிரிட்டிகளில் தேனாண்டாள் ஃபிலிம்ஸின் தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ஹேமா ருக்மணி முக்கியமானவர். வேலை விஷயமாக எப்போதும் பரபரப்பாகச் சுற்றித்திரிந்து கொண்டிருப்பவர். சில நாள்களுக்கு முன்னால், அவருடைய வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில், ' மறுஜென்மம் எடுத்து வந்திருக்கிறேன்' என்ற வார்த்தைகளுடன் வீல் சேரில் அமர்ந்திருக்கிற அவருடைய புகைப்படத்தைப் பதிவேற்றியிருந்தார்.

உடனே போன் செய்தேன்.

Hema Rukmani
Hema Rukmani
www.instagram.com/hemarukmani

``எல்லாம் வேர்க்கடலை பார்த்த வேலை. `நட் அலர்ஜி' வந்து ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். மத்தவங்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தணும்கிறதுக்காக எனக்கு நடந்ததைச் சொல்றேன்'' என்றவர் தொடர்ந்தார்.

``எனக்கு ஏற்கெனவே `கடல் உணவுகள் அலர்ஜி' இருக்கு. முக்கியமாக நண்டு சாப்பிட்டா கைகால், முகமெல்லாம் வீங்கிப் போயிடும். அதனால, நண்டு சாப்பிடறதையே நிறுத்திட்டேன். அதுக்கப்புறம் இதே மாதிரி இன்னொரு தடவை முகம் வீங்கிடுச்சு. நாமதான் நண்டு சாப்பிடலையே. சரியா தூங்காததால முகம் வீங்கியிருக்கும்னு லைட்டா எடுத்துக்கிட்டேன். என்னோட டாக்டர் ஃபிரெண்ட் ஒருத்தங்க, `இல்ல, இது ஒருவகையான அலர்ஜி'ன்னு சொன்னதும் மறுபடியும் செக்கப் செஞ்சு பார்த்ததுல இந்த முறை வேர்க்கடலை சாப்பிட்டதால அலர்ஜி வந்திருக்குன்னு தெரிஞ்சுது. நான் எப்பவுமே ஆரோக்கியத்துல ரொம்பவும் கவனமா இருப்பேன். என்னோட சாப்பாட்டுல தினமும் 300 கிராம் கீரை இருக்கும்னா பார்த்துக்கோங்க. அலர்ஜி வந்ததுக்கப்புறம் இன்னமும் கவனமா இருக்க ஆரம்பிச்சேன்.

இப்போ சமீபத்துல, எங்க ஊர் காரைக்குடியில ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தேன். `என்ன எண்ணெயில சமைச்சீங்க'ன்னு கேட்டதுக்கு `ரீஃபைண்டு ஆயில்'னு சொன்னாங்க. நான் சூரிய காந்தி ரீஃபைண்டு ஆயில்னு நினைச்சு சாப்பிட்டுட்டேன். ஆனா, அது வேர்க்கடலை ரீஃபைண்டு ஆயில். அன்னிக்கு நைட்டே முகம் வீங்க ஆரம்பிச்சிடுச்சு. மறுநாள் காலையில கைகால்களும் வீங்கியிருந்துச்சு. எடை பார்க்கிற மெஷின் ஒரே நாள்ல நான் நாலரை கிலோ அதிகமாகியிருக்கேன்னு காட்டுச்சு. பதற்றமாகி உடனே டாக்டர்கிட்டே போனேன்.

Hema Rukmani
Hema Rukmani
www.instagram.com/hemarukmani

`மறுபடியும் வேர்க்கடலை அலர்ஜிதான். இந்த முறை ரொம்ப சீரியஸா வந்திருக்கு. ஒரே ராத்திரியில உடம்புல எக்கச்சக்கமா தண்ணி கோத்திருக்கு'ன்னு சொல்லிட்டு இன்ஜெக்‌ஷன் போட்டாங்க. உடனே ரத்த அழுத்தம் குறைஞ்சுபோய் மயக்கம் போட்டுட்டேன். அலர்ஜிக்கு சிகிச்சை, உடம்புல இருக்கிற எலக்ட்ரோலைட்ஸ் சத்தெல்லாம் போய் மறுபடியும் மயக்கம், மறுபடியும் சிகிச்சைன்னு மொத்த உடம்பும் ஆடிப்போச்சுங்க.

எனக்கு வந்த இந்தப் பிரச்னைக்குப் பேரு அனப்லேடிக் ஷாக் (Anaphylactic shock). என் கணவரும் பெற்றோரும் பயந்துபோக, என் பிள்ளைங்க, 'நீங்க எங்களுக்கு வேணும்மா'னு அழுது வீடே கலங்கிப்போச்சுங்க. இப்பதான் மெல்ல மெல்ல மீண்டு வந்திட்டிருக்கேன். சரியாகிடுவேன்'' என்று பாசிட்டிவிட்டியுடன் சொன்னவர், ``யாருக்கு, என்ன அலர்ஜி ஏற்பட்டாலும் தாமதிக்காமல் மருத்துவரைப் பாருங்க. கணிப்பு, சுயமருத்துவம் வேண்டாம். அது சிகிச்சையைத் தாமதப்படுத்தி, விளைவுகளை அதிகமாக்கும்'' என்கிறார் அக்கறையுடன்.

டேக் கேர்!

அடுத்த கட்டுரைக்கு