அமெரிக்காவில், க்ளீவ்லேண்ட் க்ளினிக்கைச் சேர்ந்த விஞ்ஞானிகள், சமீபத்தில் கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிராக தடுப்பூசிகள் எந்தளவுக்குச் செய்லாற்றுகின்றன என்பதைக் கண்டறிவதற்கான ஆய்வை மேற்கொண்டனர்.
அந்த ஆய்வின்போது, ஏற்கெனவே கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டோர், அதன் பிறகு, தடுப்பூசியை எடுத்துக்கொள்வதன் மூலம் எவ்வித கூடுதல் பாதுகாப்பையும் பெறுவதில்லை என்று கண்டறிந்துள்ளனர். உலகம் முழுக்கவே, கோவிட்-19 தொற்று பாதித்து குணமடைந்தவர்கள், தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாமா என்ற சந்தேகம் நிலவிவருகிறது. இந்நிலையில், சமீபத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் சரி, போடவில்லை என்றாலும் சரி, பாதுகாப்பாகவே இருப்பதாகக் கூறுகிறது.

அமெரிக்காவில், உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு ஃபைஸர் பயோடெக் மற்றும் மாடர்னா ஆகிய இரண்டு தடுப்பூசிகளுக்கு அவசரகால அடிப்படையிலான மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதியளித்துள்ளது. ஆனால், அதிகளவிலான மக்களுக்கு தடுப்பூசி மருந்துகளைக் கொண்டு சேர்ப்பதில் சிக்கல் நிலவுகிறது. அனைவருக்கும் தடுப்பூசி வழங்கும் அளவுக்கு, தடுப்பூசி உற்பத்தி நடைபெறுவதில்லை.
சமூக, பொருளாதார அடிப்படையில் மிகவும் பின் தங்கியிருக்கும் பல நாடுகளில், தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது. அவர்கள் அனைவருக்கும் தடுப்பு மருந்து கிடைக்க வேண்டுமெனில், அதற்கு கொரோனா தொற்றுநோய்க்கு எளிதில் பாதிக்கக்கூடிய வகையில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இந்நிலையில், கோவிட்-19 தடுப்பூசிகள் யாருக்கெல்லாம் முதலில் கொடுக்கப்பட வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள க்ளீவ்லேண்ட் க்ளினிக் விஞ்ஞானிகள் முயன்றனர்.
இன்றைய சூழலில், பல நாடுகள் சுகாதாரத்துறை ஊழியர்கள், முதல் நிலை ஊழியர்கள், முதியவர்கள் போன்றோருக்குத்தான் தற்போது முன்னுரிமை வழங்கிக் கொண்டிருக்கின்றன. அதை இன்னும் விரிவாக ஆராய்ந்து, தெளிவாக யாருக்கெல்லாம் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதைக் கண்டறிய இந்த ஆய்வில் முயன்றார்கள். அதில், ஏற்கெனவே கோவிட் தொற்று பாதிப்புக்கு ஆளானோருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டுமா அவசியமில்லையா என்பதைத் தெரிந்துகொள்வதற்கான முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர்.

இந்த ஆய்வில் 52,238 பேர் பங்கேற்றனர். அதில், இந்த ஆய்வுக்கு முன்பே கோவிட்-19 தொற்றுக்கு ஆளாகி குணமடைந்தோரும் அடக்கம். அனைவருக்கும் ஃபைஸர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளை 28 நாள்கள் இடைவெளியில் இரண்டு டோஸ்கள் வழங்கினார்கள். குறைந்தபட்சம் 42 நாள்களுக்கு முன்னர் கோவிட் தொற்றுக்கு ஆளானோர் இதில் கலந்துகொண்டனர். கலந்துகொண்டவர்களில், 59 விழுக்காடு பேர் இதற்கு முன்னர் தொற்று பாதிப்புக்கே ஆளாகாதவர்கள். கலந்துகொண்டவர்களில் 63 சதவிகிதம் நபர்களுக்கு மாடர்னா தடுப்பூசியும் மற்றவர்களுக்கு ஃபைஸர் தடுப்பூசியும் வழங்கப்பட்டுள்ளது.
இதில், கோவிட் தொற்று பாதிப்புக்கு ஏற்கெனவே ஆளானவர்களிடையே தடுப்பூசியின் செயல்பாடுகள் பெரியளவில் இல்லை என்றும் அதனால், தடுப்பூசி அவர்களுக்குத் தேவைப்படுவதில்லை என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி குணமடைந்த ஒருவருக்கு, தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் சரி, செலுத்தாவிட்டாலும் சரி, அவர்களுடைய உடலில் பெரியளவிலான குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. அதோடு, இதற்கு முன்னர் அப்படியாக எந்தவித பாதிப்புகளுக்கும் ஆளாகாதவர்களில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு, குறிப்பிடத்தக்க மாற்றங்கள் தெரிந்துள்ளன.

கொரோனா தொற்றுக்கு ஆளாகாத, தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர்கள், கொரோனா தொற்றுக்கு ஆளாகி, பின்னர் தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர்கள் மற்றும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி, பின்னர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நபர்கள் என்று மூன்று பிரிவுகளாகப் பிரித்து, அவர்களின் உடலியல் மாற்றங்களை ஆய்வு செய்தனர். அதில், கொரோனா தொற்றுக்கு ஆளானவர்கள், பின்னர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்றாலுமே, அவர்களுக்கு மீண்டும் தொற்று பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிகக் குறைவாகவே இருந்துள்ளன. மேலும், கொரோனா தொற்றுக்கு ஆளாகாத, தடுப்பூசியும் எடுத்துக்கொள்ளாமல் இருப்பவர்களுக்கு இடையேதான் 99.3 சதவிகிதம் பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மீதம் 0.7 சதவிகித நபர்கள் இதற்கு முன்னர் தொற்றுக்கு ஆளாகாமலிருந்து, தடுப்பூசி செலுத்திய பிறகு கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஆய்வு கூறுகிறது.
குறிப்பாக, இந்த ஆய்வின்போது இதற்கு முன்னரே கோவிட் தொற்றுக்கு ஆளாகி குணமடைந்த நபர்களில் ஒருவருக்குக்கூட, தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் இல்லையென்றாலும், கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. கோவிட் தடுப்பு மருந்து, இதுவரை பாதிக்கப்படாதவர்களிடம் தொற்று பாதிப்புக்கு ஆளாவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது. ஆனால், ஏற்கெனவே பாதிப்புக்கு ஆளானோரிடம் அப்படி நிகழ்வதில்லை. அவர்களுக்கு ஏற்கெனவே தொற்று பாதிப்பு வந்துவிட்டதால் மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது. மேலும், கொரோனா வைரஸின் பாதிப்புகளுக்கு ஏற்கெனவே பாதிக்கப்பட்ட ஒருவர், அடுத்த 10 மாதங்களுக்கு மீண்டும் பாதிக்கப்படுவதில்லை என்றும் இந்த ஆய்வின் முடிவுகள் சொல்கின்றன.

இந்நிலையில், தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதால், இந்த ஆய்வை இன்னும் விரிவுபடுத்தி மேற்கொண்டு, ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர்களிடம் அதற்கான எதிர்ப்பாற்றல் இருப்பதால், கோவிட் தொற்றுக்கு இதுவரை பாதிக்காமலே இருக்கும் மக்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று இந்த ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆய்வு இன்னும் விரிவாக மேற்கொள்ளப்பட வேண்டும். ஏற்கெனவே கொரோனா தொற்றுக்கு ஆளானோர் மீண்டும் அதற்கு பாதிக்கப்படவில்லை என்பதை முழுமையாக உறுதி செய்த பிறகே, இதுபோன்ற முன்னுரிமைகளைப் பற்றிப் பேச வேண்டும் என்றும் ஒரு தரப்பினர் சொல்கின்றனர். மேலும், கோவிட் குறித்த ஆய்வுகள் இன்னும் முடிவடையாமல் தொடர்ந்து புதுப்புது தகவல்கள் கிடைத்துக் கொண்டேயிருப்பதால், ஒருசில தகவல்களை மட்டுமே வைத்துக்கொண்டு அஜாக்கிரதையாக நாம் இருந்துவிட முடியாது. ஆகவே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களும் முறையான தற்காப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவதே நமக்குப் பாதுகாப்பு அளிக்கும்.