Published:Updated:

“கோவிட் 19... இந்தியர்கள் அதிர்ஷ்டசாலிகள்!” - தைரோகேர் டாக்டர் ஏ.வேலுமணி

தைரோகேர் டாக்டர் ஏ.வேலுமணி
பிரீமியம் ஸ்டோரி
தைரோகேர் டாக்டர் ஏ.வேலுமணி

கோவிட் 19-ஐ பார்த்து யாரும் பீதியடைய வேண்டாம். அதற்காக அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம்!

“கோவிட் 19... இந்தியர்கள் அதிர்ஷ்டசாலிகள்!” - தைரோகேர் டாக்டர் ஏ.வேலுமணி

கோவிட் 19-ஐ பார்த்து யாரும் பீதியடைய வேண்டாம். அதற்காக அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம்!

Published:Updated:
தைரோகேர் டாக்டர் ஏ.வேலுமணி
பிரீமியம் ஸ்டோரி
தைரோகேர் டாக்டர் ஏ.வேலுமணி
நாணயம் விகடன் நடத்திய வெபினார் நிகழ்ச்சியில் ‘வியாதியும், விஞ்ஞானமும், வியாபாரமும்’ என்ற தலைப்பில் தைரோகேர் டெக்னாலஜீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஏ.வேலுமணி கலந்துகொண்டு பேசினார். கொரோனா பற்றிப் பல முக்கியமான தகவல்களை சாதாரண மனிதர்களும் புரிந்துகொள்ளும்படி அவர் பேசியதாவது...

“கொரோனாநோய் பரவி, ஆறு மாதங்களுக்குமேல் ஆகிவிட்டது. இது சீனாவின் வூஹான் மாகாணத்தில் பிறந்ததா அல்லது பிறப்பிக்கப்பட்டதா என்பதே இன்றளவும் மிகப்பெரிய கேள்வியாகவே இருக்கிறது. இந்த நோய் ஷாங்காய் மற்றும் பீஜிங் ஆகிய நகரங்களைத் தாக்காமல், மற்ற எல்லா வெளிநாடுகளுக்கும் பரவியிருப்பதுதான் சந்தேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.

நம் நாட்டில் மார்ச் 20-ம் தேதி வரை கோவிட் பாதிப்பு பற்றி அதிகம் கண்டுகொள்ளப்படவில்லை. இத்தாலியில் மக்களின் இறப்பு விகிதம் அதிகமானவுடன்தான் இதைத் தடுக்க ஊரடங்கு உத்தரவை அரசு செயல்படுத்தியது. விஞ்ஞானிகளைக் கலந்தாலோசிக்காமல், அரசு அதிகாரிகளின் பேச்சைக் கேட்டுத்தான் அரசாங்கம் இந்த முடிவை எடுத்தது. இதனால் நமது வியாபாரங்கள் அனைத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டன.

இந்தியா பாதுகாப்பாகத்தான் இருக்கிறது!

மருத்துவ வசதி அதிகம் வளர்ச்சியடைந்த மேலைநாடுகளில், கொரோனாநோய் காரணமாக மக்கள்தொகையில் 10 லட்சம் பேருக்கு (Death Per Million) சராசரியாக 600 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு 25 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். உண்மையாகவே இந்தியாவில் இந்த நோயால் அதிக தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. நம் நாட்டில் 30 வயதுக்குக்கீழே இருப்பவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். கோவிட்-19 இளைஞர்களைவிட வயதானவர்களையே அதிகம் தாக்குகிறது. நம் நாட்டில் நோய்கள் அதிகமாக இருப்பதால், குழந்தை இறப்பு விகிதம் (Infant Child Mortality) அதிகம். நம் நாட்டில் குழந்தை இறப்பு விகிதம் 1,000-க்கு ஐந்தாக உள்ளது. மேலைநாடுகளில் இந்த நிலைமை கிடையாது. நம் நாட்டில் சுகாதாரமற்ற சூழலில் குழந்தைகள் பிறந்து டெங்கு, மலேரியா, வயிற்றுப்போக்கு எனப் பல்வேறு நோய்களுக்கு ஆட்பட்டுத்தான் வளர்கின்றன. எனவே, நோய் என்பது நமக்குப் புதிதல்ல. அதனால்தான் கோவிட்-19-ஐ நம்மால் தாக்குப்பிடித்து நிற்க முடிகிறது. மேலைநாடுகளில் நிறைய நோய்கள் இல்லை. அதனால் அவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

நம் நாட்டில் கொரோனா வந்தால், 100-ல் ஒருவருக்குத்தான் அறிகுறிகள் தென்படுகின்றன. அதேபோல், 100 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் 95 பேர் நல்ல முறையில் வீடு திரும்புகின்றனர். கிட்டத்தட்ட 10,000 பேரில் ஒரு நபர்தான் இறக்கிறார். அதனால் இது அவ்வளவு பெரிய வைரஸ் இல்லை. இதைப் பார்த்து யாரும் பீதியடைய வேண்டாம். அதற்காகக் கொஞ்சமும் பயமில்லாமல் அஜாக்கிரதையாக இருக்கவும் தேவையில்லை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆன்டிபாடி டெஸ்ட்!

இப்போது இந்தியாவில் ஆன்டிபாடி டெஸ்ட் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆன்டிபாடி டெஸ்ட் மூலம் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை நம்மால் கண்டறிய முடியும். இதன் முடிவுகள் மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றாகவே உள்ளன. எங்களுடைய தைரோகேரில் ஆர்.டி பி.சி.ஆர் பரிசோதனையை 1.5 லட்சம் பேருக்கும், ஆன்டிபாடி பரிசோதனையை 1.5 லட்சம் பேருக்கு செய்திருக்கிறோம். இவர்களில் 18% பேர் கோவிட் வைரஸைச் சந்தித்திருக்கிறார்கள். பல பேருக்கு நோய் வந்துபோனதே தெரியவில்லை. முதன்முறையாக இந்தியாவில் 18% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டுள்ளது என்பது மகிழ்ச்சியான செய்தியே. நான் இதைச் சொன்னபோது பலரும் கேள்வி எழுப்பினார்கள். பின்னர் டெல்லி அரசாங்கம் இதை 22% என்றும், அகமதாபாத்தில் 25% என்றும் பதிவு செய்தார்கள்.

கொரோனா
கொரோனா

`மருத்துவமனையில் படுக்கை வசதிகள் அதிகமாக இல்லை’ என்ற காரணத்தால் அடுத்தடுத்து ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டன. இதனால் தொழில்துறையும் பிற துறைகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகின. இப்போது நான்காம் மாதமும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது கவலைக்குரியது. பயத்தால் அதிகம் சாகிறோமா அல்லது நோயால் அதிகம் சாகிறோமா என்பது முக்கியமான கேள்வி.

கடந்த 10,000 வருடங்களாக மனிதன் வைரஸ், பாக்டீரியா, பாராசைட் என எல்லாவற்றையும் சந்தித்துத்தான் இருக்கிறான். இவ்வாறு வந்தபோதெல்லாம் 100-ல் ஒருவரோ, 1,000-ல் ஒருவரோ அல்லது 1,00,000-ல் ஒருவரோ இறந்திருக்கிறார். மீதி மக்கள் இயற்கையாக ஏற்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியால் தப்பித்தனர். இப்போதும் அப்படித்தான். ஆனால், நோய் எதிர்ப்பு சக்தி வந்துவிடும் என்பதால், தனி மனித சுகாதாரத்தைப் பின்பற்றாமல் அலட்சியமாக இருந்து விடக் கூடாது. இந்த வைரஸை நாம் பயத்துடன் அணுக வேண்டுமே தவிர, பீதியுடன் அல்ல.

மருந்து வருவது எப்போது?

இப்போது விஞ்ஞானத்துக்கு வருவோம். கோவிட்-19 வியாதிக்காக விஞ்ஞானத்தில் மூன்று பரிசோதனை முறைகள் வந்தன. அவற்றில் பி.சி.ஆர் என்பது மிகவும் விலை உயர்ந்தது என்பதால், இந்தியாவில் அது சாத்தியம் ஆகவில்லை. தற்போது வரை மருந்துகளும் தடுப்பூசியும் எப்போது வரும் என்பது தெரியாது. விஞ்ஞானத்தை இந்த நோய்க்காக அதிகம் பயன்படுத்த முடியவில்லை. கடந்த நான்கு மாதங்களில் கொரோனாவால் இறந்தவர்களும், கொரோனா இல்லாமல் இறந்தவர்களும் கூட இந்தியாவில் அதிகமாகவில்லை. என்னைப் பொறுத்தவரை இந்தியா அதிர்ஷ்டம் நிறைந்த நாடு.

வியாபாரம் நடக்கவில்லை!

உலகத்தில் மொத்தம் 750 கோடி மக்கள் உள்ளனர். இவர்களில் 135 கோடி இந்தியர்கள். இவர்களில் 20% மக்கள் மட்டுமே தேவைக்காக சாலையில் நடக்கிறார்கள். மேலும் 5% மக்கள் வீம்புக்காக பாரிலும், கேளிக்கை விடுதியிலும் சுற்றித் திரிகிறார்கள். மீதமிருக்கும் 75% மக்கள் வீட்டைவிட்டு வெளியே வராமல் முடங்கியிருக்கிறார்கள். இதனால் வியாபாரம் அதிக அளவில் பாதிப்படைந்துள்ளது.

தைரோகேர் டாக்டர் ஏ.வேலுமணி
தைரோகேர் டாக்டர் ஏ.வேலுமணி

ஏற்கெனவே புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களின் ஊர்களுக்குச் சென்றுவிட்டார்கள். அவர்கள் திரும்பி வந்தால்தான் நம்மால் தொழில் செய்ய முடியும். தொழிலில் எல்லாத் தரப்பு மக்களும் உழைத்தால்தான் வியாபாரம் என்பது சாத்தியமாகும். இந்த கொரோனாவால் பல தொழிலாளர்களுக்குச் சம்பளம் கிடைக்கவில்லை. பொருளாதாரமே சீர்குலைந்து கிடக்கிறது. அரசாங்கத்திடமும் பணமில்லை.

ஒரு சில தொழில்கள் செத்து மடிந்துவிட்டன. இதில் போக்குவரத்துத் தொழில் அதிக பாதிப்படைந்துள்ளது. சுற்றுலாத்துறையும் சீர்குலைந்துவிட்டது. அதே நேரத்தில், சில தொழில்துறைகள் நல்ல முறையில் நடக்கின்றன. மருத்துவத்துறையும், சுகாதாரத்துறையும், பார்மா துறையும் நல்ல முறையில் இருக்கின்றன. எதிர்காலத்தில் சுகாதாரத்துறை அதிக வளர்ச்சியைச் சந்திக்கும்’’ எனத் தெளிவாகப் பேசி முடித்தார்.

கொரோனாவிடமிருந்து தப்பிக்க முடியாது!

வேலுமணி பேசி முடித்த பிறகு, வாசகர்களின் கேள்விக்கு பதில் சொல்லத் தொடங்கினார்.

பி.சி.ஆர்., ஆன்டிபாடி பரிசோதனையில் எதை மேற்கொள்ளலாம்?

‘‘ `பி.சி.ஆர்’ என்பது வைரஸைக் கண்டுபிடிக்கும் பரிசோதனை முறை. `ஆன்டிபாடி’ என்பது நோய் எதிர்ப்பு சக்தியைக் கண்டுபிடிப்பது. வைரஸ் என்பது ஒரு பயங்கரவாதி போல. அதைக் கண்டுபிடிக்கத்தான் பி.சி.ஆர் பரிசோதனை. ஆனால், ஆன்டிபாடி பயங்கரவாதிக்கு எதிரான காவலர்களைக் கண்டுபிடிப்பதைப்போல. ஆன்டிபாடி டெஸ்ட் எடுத்து, அவரவருக்கு இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியின் தன்மையைத் தெரிந்து கொள்வது நல்லது.’’

“கோவிட் 19... இந்தியர்கள் அதிர்ஷ்டசாலிகள்!” - தைரோகேர் டாக்டர் ஏ.வேலுமணி

சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கிறோம். மாஸ்க் அணிந்துகொள்கிறோம். சானிடைஸரும் பயன்படுத்துகிறோம். இதற்கு மேலும் கொரோனா தொற்று பாதிக்காமலிருக்க என்ன செய்ய வேண்டும்?

‘‘கொரோனாவிடமிருந்து உங்களால் தப்பிக்கவே முடியாது. உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு இல்லாத பாதுகாப்பா? அவருக்கே வந்திருக்கிறது. எனவே, கொரோனாவை எதிர்கொள்ள நாம் அனைவரும் தயாராக வேண்டும். அதே நேரம், பயத்திலும் பீதியிலும் மனநலத்தை இழக்க வேண்டாம்.’’

கொரோனா பாசிட்டிவ் என்று வந்த பிறகு எத்தனை நாள்கள் கழித்து வேலைக்குச் செல்லலாம்?

‘‘இந்த வைரஸ் நம் உடம்புக்குள் நுழைந்தால், 20 முதல் 25 நாள் வரை இருக்கும். அதன் பிறகு உடம்பிலிருந்து வெளியேறிவிடும். அதன் பிறகு உடலில் அறிகுறிகள் இல்லையெனில் வேலைக்குத் தொடர்ந்து செல்லலாம்.’’

குழந்தைகள், இளைஞர்கள் என எல்லோரும் கடந்த நான்கு மாதங்களாக வீட்டிலேயே அடைந்துகிடக்கிறார்கள். பள்ளிகளும் கல்லூரிகளும் எப்போது திறக்கப்படுவதற்கு வாய்ப்பு உண்டு?

‘‘மாணவர்கள் அறிவை வளர்த்துக்கொள்ள இதுதான் சரியான நேரம். ஊரடங்கைப் போன்ற நேரம் வேறு எப்போதும் கிடைக்காது. முனைப்புடன் செயல்பட்டால், மூன்று வருடங்களில் பட்டம் பெற்றுக் கிடைக்கும் அறிவை மூன்று மாதங்களிலேயே பெற்றுவிடலாம். குழந்தைகளுக்குத்தான் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. ஆனாலும் பள்ளிக்கூடங்கள் முன்பு இயங்கியதுபோல இனி இயங்காது. இனி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தொழில்நுட்பம் அதிக அளவில் பயன்படுத்தப்படும். அதற்கேற்ற முடிவுகளை அரசாங்கம் விரைவில் எடுக்கும்.’’

ஆங்கில மருத்துவம், ஹோமியோபதி, சித்த மருத்துவம் இவற்றில் எது கொரோனா சிகிச்சைக்கு ஏற்றது?

‘‘விஞ்ஞானம் மூலம் இப்போது உதவிகளே கிடைக்கவில்லை. எந்த மருத்துவ முறையின் மூலமும் இந்த நோயை குணப்படுத்த இயலாது. வியாதியால் ஏற்படும் அறிகுறிகளை வேண்டுமானாலும் குணப்படுத்த இயலும்.’’

“கோவிட் 19... இந்தியர்கள் அதிர்ஷ்டசாலிகள்!” - தைரோகேர் டாக்டர் ஏ.வேலுமணி

நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்திலாவது இதற்கான மருந்துகள் கிடைத்துவிடுமா?

‘‘இதை எதிர்பார்ப்பது தவறில்லை. உண்மை என்னவென்றால், தடுப்பூசிகள் வந்தாலும் நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி மட்டுமே நம் உடம்பில் உருவாகும். தவிர, விலை அதிகமாக இருக்கும். இதைப் பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால் இந்த வைரஸ் பல வருடங்களுக்கு இருக்கும். என்றாலும், இந்த நோய்க்கான மருந்து 2020-க்குள் வந்துவிடும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.’’

சீனாவில்தான் கொரோனா முதலில் தோன்றியது. உலக நாடுகள் அனைத்தும் வைரஸோடு போராடும்போது, சீனா மட்டும் `வைரஸைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டோம்’ என்கிறது. இது உண்மையா?

‘‘சீனாவிடமுள்ள ஒரே கெட்ட பழக்கம் பொய் சொல்வது. மிகப்பெரிய வல்லரசு நாடாக இருந்துகொண்டு பொய் சொன்னால், சீனாவின் மீது யாருக்கும் நம்பிக்கை வராது. ‘2040-ம் ஆண்டு வரை அமெரிக்கா அசைக்க முடியாத வல்லரசு நாடாக இருக்கும். அதன் பிறகு சீனா முதல் நாடாக உருவெடுக்கும். அதற்கடுத்த இருபது வருடங்களுக்குப் பிறகு இந்தியா வல்லரசு ஆகும்’ என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கொரோனாவுக்குப் பிறகு 2040-ல் சீனா அல்ல, இந்தியாவே வல்லரசாகும் என்று நினைக்கிறேன். நாம் கோவிட்-19-ஐ சரியாக எதிர்கொண்டு செயல்பட்டால் 2040-ம் ஆண்டில் இந்தியாதான் முதல் வல்லரசு நாடாக இருக்கும்.’’