கொரோனா தொற்றுப் பரவலின் தீவிரம் குறைந்திருக்கும் நிலையில் மூன்றாவது அலை ஆரம்பமாகவிருப்பதாக கணிப்புகள் வெளிவந்தபடி இருக்கின்றன. இந்நிலையில், 100 கோடி கோவிட் தடுப்பூசி டோஸ்களை செலுத்தி இந்தியா மைல்கல்லை எட்டியிருப்பதாகக் கூறியிருக்கிறார், கோவிஷீல்டை உற்பத்தி செய்யும் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் தலைவரான அதார் பூனாவாலா.

இது குறித்து அவர் மேலும் பேசுகையில், ``உலகநாடுகள் பல கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையைச் சந்தித்து வருகின்றன. ஆப்ரிக்காவில் வெறும் 3 சதவிகித மக்களே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியா இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளை வெற்றிகரமாகச் செலுத்திமுடித்து பூஸ்டர் டோஸ்களுக்கும் தயாராகிக்கொண்டிருக்கிறது. போதுமான தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதால் எதிர்காலத்தை இந்தியாவால் திடமாக எதிர்கொள்ளமுடியும். மற்ற நாடுகளையும் கொரோனா தடுப்பூசியால் பயன்பெறச் செய்வதே இந்தியாவின் தற்போதைய இலக்கு. கொரோனா தடுப்பூசியின் உற்பத்தி முன்பைவிட இந்தியாவில் இன்னும் அதிகரித்திருக்கிறது. பெரும்பாலான உலக மக்கள் கோவிஷீல்டு தடுப்பூசியால் நிச்சயம் பயன்பெறமுடியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி டோஸ்கள் அளிக்கப்பட்டிருப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.
இரண்டாம் கொரோனா அலையைவிட மூன்றாம் கொரோனா அலை அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை, மூன்றாம் அலை வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கான மருத்துவ வசதிகள் இந்தியாவில் இருக்கின்றன. அதைப்போலவே போதுமான அளவு தடுப்பூசிகள் எப்போதும் கையிருப்பில் இருப்பதை உறுதி செய்யவேண்டும்.

இதுவரை, உலகமக்கள் தொகையில் 25 சதவிகிதத்தினர் மட்டுமே இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளை எடுத்துள்ளனர். இதை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். 2021-க்குள் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட அனைவரும் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை எடுத்திருப்பதை உறுதி செய்யவேண்டும்" என நம்பிக்கை அளிக்கிறார் அதார் பூனாவாலா.