Published:Updated:

கொரோனா பதற்றம்; `வொர்க் ஃப்ரம் ஹோம்' முறையில் பணியாற்ற உதவும் 5  ஆலோசனைகள்!

வொர்க் ஃப்ரம் ஹோம்
வொர்க் ஃப்ரம் ஹோம்

சாதாரண நாள்களில், வீட்டிலிருந்து வேலை என்றால் பரவாயில்லை. இப்படி ஒரு பதற்றமான சூழலில் 'வொர்க் ஃப்ரம் ஹோம்' பார்ப்பது மிகவும் சவாலான விஷயம்.

கொரோனாவின் கோரதாண்டவம் மெல்ல மெல்ல இந்தியாவுக்குள் தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில், கூகுள், டாடா மோட்டார்ஸ் மற்றும் இன்னும் பிற ஐடி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யச்சொல்லி உத்தரவுகளைப் பிறப்பித்துக்கொண்டிருக்கின்றன. சாதாரண நாள்களில், வீட்டிலிருந்து வேலை என்றால் பரவாயில்லை. இப்படி ஒரு பதற்றமான சூழலில் வீட்டிலிருந்து வேலை பார்ப்பது மிகவும் சவாலான விஷயம். அதைக் கையாள்வதற்கு தைரியமும் தன்னம்பிக்கையும் மிகவும் அவசியம்.

`கொரோனா விழிப்புணர்வு' - நம் உறவுகளுக்குப் பகிர ஓர் எளிய வழிகாட்டி! #FightAgainstCoronavirus

"ஐ.டி ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை என்பது மிகவும் பழக்கமான விஷயம்தான். ஆனால் பிற துறை சார்ந்தவர்களுக்கு இது புதிதாக இருக்கும். அவர்கள்தான் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு, இது மாதிரியான பதற்றமான சூழ்நிலையில் கவனமாக வேலைகளைச் செய்ய வேண்டும். வீட்டையும் காத்துக்கொண்டு, வேலையையும் செய்யும் போது கவனச்சிதறல் அதிகம் ஏற்படும். இரண்டையும் அவர்கள் பேலன்ஸ் செய்தே ஆக வேண்டும்" என்கிறார் மனிதவள மேலாளர் பாலமுருகன். அவர் சொன்ன 5 வழிமுறைகள் இங்கே உங்களுக்காக.

பதற்றமில்லாமல் வேலை செய்யுங்கள்!

ஒர்க் ஃப்ரம் ஹோம்
ஒர்க் ஃப்ரம் ஹோம்

வீட்டிலிருந்தபடியே வேலை செய்வது என்பது சாதாரணமான நாள்களில் சுகமான ஒன்று. ஆனால், இப்போதுள்ள பதற்றமான சூழ்நிலையில் நாம் தனியாக வீட்டிலிருந்தபடியே வேலை செய்வது பதற்றத்தை அதிகரிக்கும். ஏற்கெனவே எங்கு திரும்பினாலும் கொரோனா பற்றிய செய்திகளாகவே உள்ளன. வேலையில் ஈடுபடும்போது இவ்வாறான பதற்றத்திலிருந்து தப்பிக்க நமது வேலை செய்யும் சூழலை மாற்றியமைக்க வேண்டும். எந்த ஆரவாரமும் இல்லாத அமைதியான அறை வேலை செய்வதற்கு உகந்ததாக இருக்கும்.

வேலையைத் தொடங்கும் முன் மனதை ஒருநிலைப்படுத்தி வேலையில் மட்டுமே கவனம் செலுத்தினால் பதற்றத்தைச் சுலபமாக வென்றுவிடலாம்.

வேலை நேரத்தில் செய்திகளைப் பார்த்து பீதியாவது, அதைக் குடும்ப உறுப்பினர்களுடன் விவாதிப்பது, வாட்ஸ்அப்பில் உலாவிக்கொண்டிருக்கும் செய்திகளை, அக்கறையின் பேரில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்புவது போன்ற செயல்களைச் செய்யாதீர்கள். இந்தச் செயல்களை எல்லாம், வேலையை முடித்த பிறகு வைத்துக் கொள்ளுங்கள்.

யாருக்கும் அனுமதி இல்லை!

ஒர்க் ஃப்ரம் ஹோம்
ஒர்க் ஃப்ரம் ஹோம்

வீட்டில் இருந்த படியே வேலையில் ஈடுபட்டிருக்கும் போது பல்வேறு இன்னல்களைச் சந்திக்க நேரிடும். குழந்தைகளுக்கும் விடுமுறை என்பதால் அங்கும் இங்கும் ஓடிய வண்ணம் இருப்பார்கள். இதற்கு அவர்களிடமிருந்து நாம்தான் விலகிச் செல்ல வேண்டும். வீட்டின் ஏதாவது ஒரு மூலையில் இருக்கும் அறையிலிருந்து பணியாற்றினால் வெளிப்புறச் சத்தத்திலிருந்தும் குழந்தைகளின் விளையாட்டு ஓசையிலிருந்தும் தப்ப இயலும்.

வேலை செய்யத் தொடங்கும் முன் யாருக்கும் அனுமதி இல்லை என்ற போர்டைக்கூட மாட்டி விட்டு வேலை பார்க்கலாம். கொரோனாவினால் அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை நாள்கள் என்பதால், உறவினர்கள் வீட்டுக்கு வந்து செல்வதை அனுமதிக்க வேண்டாம். நீங்களும் மற்றவர்களின் வீட்டுக்கு, நிலைமை சீராகும் வரை போகாமல் இருப்பது நல்லது. இதனால் தொந்தரவுகளைத் தவிர்க்கலாம். நோய் தொற்று அபாயத்திலிருந்து விடுபடலாம்.

சிறு இடைவெளி எடுக்கலாம்!

ஒர்க் ஃப்ரம் ஹோம்
ஒர்க் ஃப்ரம் ஹோம்

நாம் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சூழலுக்கு அப்படியே நேரெதிரானது வீட்டில் இருக்கும் சூழல். அலுவலகத்தில் சக நண்பர்களோடு அவ்வப்போது நம்மையறியாமலேயே டீ கடைக்குச் சென்று விடுவோம். இதனால் மனதிற்கும் மூளைக்கும் அயர்ச்சி ஏற்படாமல் இருக்கும். ஆனால், வீட்டில் தனியாகவே வேலை பார்ப்பதினால் இடைவெளி எடுக்க நாம் மறந்து விடலாம். எனவே வீட்டிலிருந்து வேலை செய்யும் போதும் அவ்வப்போது சிறு இடைவெளி எடுத்து விட்டு வரலாம். இடைவெளிகளின் போது வீட்டிலிருக்கும் குழந்தைகளிடம் விளையாடலாம் அல்லது பாட்டு கேட்கலாம். இவ்வாறு செய்வதால் செய்யும் வேலை மீது வெறுப்பு ஏற்படாமல் இருக்கும். இந்த இடைவெளியின் போது மனதை ஆசுவாசப்படுத்த என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமோ அதை மட்டுமே செய்யுங்கள். மறுபடியும் கொரோனா பேச்சுகளுக்குள் போய்விடாதீர்கள்.

அலுவலக அழைப்புகளை மட்டும் ஏற்கலாம்!

ஒர்க் ஃப்ரம் ஹோம்
ஒர்க் ஃப்ரம் ஹோம்

வீட்டில் இருக்கும் போது நாம் பெரும்பாலும் மொபைலில் வரும் எல்லாருடைய அழைப்புகளையும் எடுத்துப் பேசுவோம். இவ்வாறு வேலை செய்யும் போது பேசுவதால் நேர விரயம் ஏற்படலாம். மேலும்  செய்யும் வேலையில் இருக்கும் கவனமும் சிதற வாய்ப்பு அதிகம். இதைத் தவிர்க்க பணி நிமித்தமாக வரும் அழைப்புகளை மட்டுமே எடுக்கலாம். சாதாரண அழைப்புகளில் மிக அவசரம் என்றால் பேச வேண்டிய விஷயத்தைப் பேசி விட்டு இணைப்பைத் துண்டித்து விடலாம். நமது மற்றுமொரு பெரிய கவனச் சிதறல் சமூகவலைதளங்களே. அலுவலகத்தில் இருக்கும் போது மற்றவர்கள் பார்ப்பார்கள் என்பதால் நாம் சமூக வலைதளங்களை குறைத்தே பயன்படுத்துவோம். வீட்டில் நாம் மட்டுமே ராஜா என்பதால் சமூக வலைதளங்களில் அதிக நேரத்தைச் செலவழிக்க நேரிடலாம். இதனால் சமூக வலைதளங்களையும் பணி நிமித்தமாக மட்டும் பயன்படுத்தலாம்.

இன்வர்ட்டெர் மற்றும் பேட்டரி பேக்-அப்!

ஒர்க் ஃப்ரம் ஹோம்
ஒர்க் ஃப்ரம் ஹோம்

அலுவலகத்தில் வேலை செய்யும் போது மின்சாரத் துண்டிப்பு ஏற்பட்டால் உடனேயே ஜெனரேட்டர் இயங்கத் தொடங்கி விடும் . வீட்டில் இருந்து வேலை செய்யும்போது எதிர்பாராத விதமாக மின்சாரத் துண்டிப்பு ஏற்பட்டால் நாம் செய்துகொண்டிருந்த வேலை பாதியிலேயே நின்றுவடும். இக்கட்டான சமயத்திலிருந்து தப்பிக்க இன்வர்ட்டெர் மற்றும் பேட்டரி பேக்-அப்பை எப்போதும் தயாராக வைத்திருப்பது அவசியம். இதனால் நாம் செய்யும் வேலையை மின்சாரத் துண்டிப்பு ஏற்பட்டாலும் நம்மால் தொடர்ந்து செய்ய முடியும்.

கொரோனா போன்ற தொற்று நோய் ஏற்படும் போது நமது உடலை ஆரோக்கியமாகப் பாதுகாக்க வேண்டியது மிக மிக முக்கியம். அதே சமயம்  இன்றைய பொருளாதாரச் சூழலில் நமது வேலையையும் தக்க வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். எனவே வீட்டிலிருந்து வேலை  செய்யும் போது மேற்கண்டவற்றைப் பின்பற்றினால் செய்யும் வேலை சிறப்பாக இருக்கும். நிறுவனத்தின் மேலிடமும் நம்மை மதிக்கும்.

அடுத்த கட்டுரைக்கு