Published:Updated:

வார நாள்களை வெறுப்பவரா.. வீக் எண்டை கொண்டாடுபவரா.. எச்சரிக்கைகளும் டிப்ஸும்!

வீக் எண்டு
வீக் எண்டு

``பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். அவையே டென்ஷன் குறைக்க தலைமுடி கோதிவிடுபவை" - வீக் எண்ட்தான் நிம்மதி என்ற மனநிலை மாறிட ஆலோசகரின் உளவியல் எச்சரிக்கைகளும் டிப்ஸும்.

வெள்ளிக்கிழமைக் கடைசி வகுப்பு மணி எதிரொலிக்க, அடிவயிற்றில் எழும்பிய ஆனந்த சுகத்தையும், திங்கள்கிழமை அதிகாலைகள் ஏற்படுத்திய மெல்லிய காய்ச்சலையும் வயிற்றுவலியையும் இப்போதும் கூட நாம் உணரலாம். இப்படி வெள்ளிக்கிழமைகள் களிப்பையும் திங்கள்கிழமைகள் கடுப்பையும் உண்டாக்குவது பள்ளிப் பருவத்திலிருந்தே தொன்றுதொட்டுத் தொடர்கின்ற மனித உளவியல்தான்.

வீக் எண்டு
வீக் எண்டு

வாரத்தின் தொடக்கம் என்றாலும் திங்கள் எரிச்சலைக் கொடுக்கிறது. செவ்வாய்க்கிழமையைக் கொஞ்சம் பொறுத்துக் கொண்டால், பாதி வாரத்தைக் கடந்துவிட்டோம் என்ற நிறைவை புதன்கிழமை தரும். வெள்ளிக்கிழமை, அடுத்த இரண்டு நாள் நிம்மதியை நோக்கி நம் நேரத்தை வேகப்படுத்தும். இடையில் இந்த வியாழக்கிழமை வேண்டவே வேண்டாமே என்பதே பலரது எண்ணமும். சனியும் ஞாயிறும் கொண்டாட்டம்தான்.

ஆனால், வீக் எண்டை எதிர்பார்த்தே வாரநாள்களில் வேலை செய்யும் மனநிலையைத் தவிர்த்தல் நலம் என்கின்றனர், மருத்துவர்கள். ஏன் தவிர்க்க வேண்டும்? தவிர்க்கும் வழிகள் என்ன? உளவியல் ஆலோசகர் லட்சுமி பாய் பேசினார்.

வேலை
வேலை
காலையில் வேலை. மதிய உணவுக்கு வீடு. சிறிது ஓய்வு. மீண்டும் பணி இடம். மாலை 5.30 மணிக்கெல்லாம் வீடடைதல். இது, தினமும் நம்மை ஃபிரெஷ்ஷாக வைத்திருக்கும் சிஸ்டம்.
லட்சுமி பாய், உளவியல் ஆலோசகர்
அமெரிக்கர்கள் அனுசரிக்கும் 'நேச தினம்'! - நாமும் கொஞ்சம் பிரியம்பேசுவோமா...
#NationalDayofCaring

``நம் வாழ்க்கை முன்புபோல் இல்லை. போட்டி உலகம் விரட்டிக்கொண்டே இருக்கிறது. மாரத்தான் பந்தயம்போல ஓடுகிறோம். வேலை பார்ப்பது வாழ்க்கையின் ஓர் அங்கம் என்பது மாறி, வேலைதான் வாழ்க்கையே என்றாகிவிட்டது. வேலைப்பளு, அலைச்சல், உடல் சோர்வு இவற்றால் ஏற்படும் மனப் பிரச்னைதான் வார நாள்களை வெறுப்பதும், வார இறுதி நாள்களை நோக்கியே நகர்வதும். குடும்பத்தை தினமும் கவனிக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்வுதான் வார இறுதி நாள்களிலாவது வீட்டாரோடு பொழுது கழிக்க உந்துகிறது.

அமெரிக்கா மாதிரி மேலை நாடுகளில் ஒரு முறையைப் பின்பற்றுவார்கள். காலையில் வேலைக்குச் சென்றுவிடுவது, பின்னர் மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்து சிறிது ஓய்வெடுத்துக் கொள்வது, பிறகு மீண்டும் பணியிடம் சென்று மாலை 5.30 மணிக்கெல்லாம் வீடடைந்து விடுவது. இந்த சிஸ்டம், தினமும் நம்மை ஃபிரெஷ்ஷாக வைத்திருக்க உதவுகிறது. அங்கெல்லாம் பணிப் பாதுகாப்பு இருப்பதால் இது சாத்தியமாகிறது.

வேலை
வேலை

நம் நாட்டிலும் ரிலாக்ஸ் பண்ணிக்கொள்ளும் வாய்ப்பை சில அலுவலகங்கள், நிறுவனங்கள் வழங்குகின்றன என்றாலும் ரொம்பவும் குறைவான இடங்களிலேயே அவை நிகழ்கின்றன. இந்திரா காந்தி பற்றி ஒரு செய்தி. அவர்களுக்கு நிறைய பணிகள் தொடர்ந்தபோதும் அடிக்கடி கிச்சன் பக்கம் செல்வாராம். என்ன சமையல், கிச்சனில் என்ன நடக்கிறது எனப் பார்வையிடுவாராம். டைனிங் டேபிள், பூஜை அறை என தன்னுடைய நேரத்தை ஆங்காங்கே கொஞ்சம் செலவிடுவாராம். இதுபோன்ற ரிலாக்ஸ் தருணங்களை நாம்தான் அமைத்துக்கொள்ள வேண்டும்" என்றார்.

``முதலில் இரவில் போதுமான தூக்கத்துக்குப் பழகிக் கொள்ளுங்கள். நீண்ட நேரம் விழித்திருந்து பணி செய்வதால் உடல் அசதியும், மனக் கலக்கமும் வேலைமீது வெறுப்பும் அதிகரிக்கும். செய்து முடிக்கக் கடினமான வேலைகளை முதலிலேயே முடித்துவிட்டால் அந்த வாரத்தை நிம்மதியாகத் தொடரலாம். பிடித்த விஷயங்களில் அடிக்கடி கவனம் செலுத்துங்கள். அவைதான் உங்கள் டென்ஷனைக் குறைக்க தலைமுடி கோதிவிடுபவை.

வீக் எண்டு
வீக் எண்டு

கைகளில் உள்ள செல்போன், லேப்டாப், பேக் என கிடைக்கும் இடங்களிலெல்லாம், உங்கள் வாழ்வில் நிகழ்ந்த நல்ல நினைவுகளைச் சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். குடும்பத்தோடு வார இறுதிகளில் வெளியில் செல்வதுதானே நமது வழக்கம். இனி அதை உடைக்கலாம். இடைப்பட்ட நாள்களிலும் அவ்வப்போது மாலை, இரவுகளில் வெளியிடங்களுக்குச் சென்று வருவதன் மூலம் விடுமுறை நாள்களுக்காகக் காத்திருக்கும் கடுப்பு உணர்வு பெரிதும் குறையும். வேலை செய்யும் மேஜையிலேயே வாழ்ந்துவிடாமல், தேநீர் மதிய உணவு இடைவேளைகளுக்கு வெளியேறிவிடுங்கள். அந்த நிமிடங்கள், இறுக்கத்தைத் தளர்த்தும்.

எல்லா நாள்களையும் நேர்மறை எண்ணங்களோடும் சவால் மனப்பான்மையோடும் அணுகினால் கிழமைகளைப் பிரித்துப் பார்க்கத் தோன்றாதே!
லட்சுமி பாய், உளவியல் ஆலோசகர்

வீட்டு வேலைக்கு வாரக் கடைசியை ஒதுக்காதீர்கள். வாரம் முழுவதும் ஒவ்வொரு நாளில் சின்ன சின்ன வேலைகளைச் செய்தால் வீட்டுப்பணிகளை லேசாக உணர முடியும். வீட்டு அறைகளின் அமைப்பில் ஆங்காங்கே சிறிய மாற்றங்கள் செய்வது அவசியம். அவை மன ஓட்டத்தின் ஆற்றலைப் புதுப்பிக்கும். திங்கள்கிழமை குறித்த எரிச்சல்களைத் தூக்கியெறிய வேண்டும். எல்லா நாளையும் மகிழ்ச்சியானதாய் தொடங்கலாம். நமது நம்பிக்கை இங்கே மிகவும் அவசியம். இந்த நாள் நமக்கானது என்ற நல்லெண்ணம் மனதை நிரம்பியிருக்கட்டும்.

உளவியல் ஆலோசகர் லட்சுமி பாய்
உளவியல் ஆலோசகர் லட்சுமி பாய்

ஒரேயடியாக மூச்சுப் பிடித்த வேகத்தில் ஓடிக்கொண்டே இருப்பது, வாழ்க்கையை அனுபவித்த நிறைவையே அளிக்காது. மாறாக, தன்னால் முடியும் என்கிற பாசிட்டிவ் எண்ணங்கள் மழுங்கிப் போகும். ரொம்ப முக்கியம், சுய மதிப்பீடு செய்ய இயலாதவர்களாக ஆகிவிடுவர். எல்லா நாள்களையும் நேர்மறை எண்ணங்களோடும் சவால் மனப்பான்மையோடும் அணுகினால் கிழமைகளைப் பிரித்துப் பார்க்கத் தோன்றாதே!" என்றார்.

வேலையை வாழ்க்கையை ரிலாக்ஸ்டாக கடந்துவிட்டால், வீக் எண்டும் வீக் டேஸும் வேறுவேறில்லை. சண்டே மண்டே எல்லாமே ஃபன் டேதான்.

அடுத்த கட்டுரைக்கு