Published:Updated:

கொரோனா நோயிலும் கொள்ளை லாபம்... ரேபிட் கிட் விலை உயர்ந்தது ஏன்!?

ரேபிட் கிட்
ரேபிட் கிட்

இந்தியாவில் கொரோனா வேகமெடுத்தவுடன் சீனாவிடமிருந்து ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை வாங்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த கிட்டுகளை இந்தியாவில், விற்பனை செய்ய அதிகாரம் பெற்ற ஒரே நிறுவனம் மேட்ரிக்ஸ் லேப்ஸ் ஆகும்.

கொரோனா டெஸ்ட் கிட் அதிக விலைக்கு வாங்கப்பட்டதாக தமிழக அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிற மாநிலங்கள் குறைவாக விலை கொடுத்து வாங்கிய டெஸ்ட் கிட் ஒன்றை தமிழக அரசு ரூ. 600 கொடுத்து வாங்கியதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கிடையே, சீனாவிடமிருந்து வாங்கிய இந்த டெஸ்ட் கிட்டுகள் மாறுபட்ட முடிவைக் காட்டுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் தெரிவித்துள்ளதோடு, அவற்றை சீனாவுக்கே திருப்பி அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் கொரோனா மிக வேகமாகப் பரவி வரும் நிலையில், டெஸ்ட் கிட்டுகளை வாங்கியதில் கூட அலட்சியம் காட்டியதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாட்டு மக்களிடையே இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த டெஸ்ட்கிட்டுகள் எப்படி வாங்கப்பட்டன. மாநில அரசுகளுக்கு விநியோகிக்கப்பட்ட முறை குறித்து பார்ப்போம்.

COVID-19
COVID-19

இந்தியாவில் கொரோனா வேகமெடுத்தவுடன் சீனாவிடமிருந்து ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை வாங்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த கிட்டுகளை இந்தியாவில் விற்பனை செய்ய அதிகாரம் பெற்ற ஒரே நிறுவனம் சென்னை பாடியிலுள்ள மேட்ரிக்ஸ் லேப்ஸ் ஆகும். 2012- ம் ஆண்டு இந்த நிறுவனம் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து 10 லட்சம் டெஸ்ட் கிட்டுகளை இறக்குதி செய்ய மேட்ரிக்ஸ் அந்த நாட்டைச் சேர்ந்த குவாங்சூ வோண்ட்ஃபோ பயோடெக் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்தது. முதல்கட்டமாக, 5 லட்சம் கிட்டுகள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டன. ஒரு டெஸ்ட் கிட்டை இந்தியாவுக்குக் கொண்டு வர விமானக் கட்டணம் ரூ.20 ஆகும். இந்த கிட்டுகளை விநியோகிக்கும் உரிமையை டெல்லியைச் சேர்ந்த ரேர் மெடாபொலைஸ் நிறுவனத்துக்கு மேட்ரிக்ஸ் நிறுவனம் வழங்கியது. ரேபிட் டெஸ்ட் கிட்டுகளை விற்பனை செய்ய ரேர் மெடோபொலைஸ் நிறுவனம், விநியோகத்துக்காக ஆர்க் பாராமெடிக்கல் நிறுவனத்தை அமர்த்திக்கொள்கிறது.

முதல்கட்டமாக 5 லட்சம் கிட்டுகளை சீனாவிலிருந்து மேட்ரிக்ஸ் நிறுவனம் ரூ. 21 கோடிக்கு வாங்கியது. ரேர் மெடாபொலைஸ் நிறுவனம் முதல்கட்டமாக ரூ.12. 2 கோடி செலுத்தி 2.76 லட்சம் கிட்டுகளை வாங்கி விநியோகித்தது. மீதித் தொகையையும் ரேர் மெடாபொலைஸ் நிறுவனம் செலுத்தினால் மட்டுமே எஞ்சியுள்ள 2.24 கோடி கிட்டுகளை அளிப்போம் என்று மேட்ரிக்ஸ் நிறுவனம் கூறி விட்டது. ஆனால், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் நிதியை விடுவித்தால் மட்டுமே தங்களால் எஞ்சியுள்ள தொகையைச் செலுத்த முடியுமென்று ரேர் மெடாபொலைஸ் நிறுவனம் பதில் தெரிவித்தது.

ரேபிட் கிட் விலை உயர்வைக்  காட்டும் கிராஃபிக்ஸ்
ரேபிட் கிட் விலை உயர்வைக் காட்டும் கிராஃபிக்ஸ்

கொரோனா நோய் பரவிய காலத்திலும், டெஸ்டிங் கிட்டுகளை வைத்து இரு நிறுவனங்களும் மோதிக் கொண்டிருக்கையில், மத்திய அரசும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. சீனாவிலிருந்து ரூ.245- க்கு இறக்குமதி செய்யப்பட்ட டெஸ்டிங் கருவி ஒன்றை ரூ.155 லாபம் வைத்து அதாவது ரூ.400 விலை வைத்து மேட்ரிக்ஸ் லேப், ரேர் மெடாபொலைஸ் நிறுவனத்துக்கு விற்கிறது. இந்த நிறுவனம் ஆர்க் பாராமெடிக்கல் வழியாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகத்துக்கு ரூ.600-க்கு விற்பனை செய்துள்ளது. இரண்டு கை மாறி ரூ.245க்கு வாங்கப்பட்ட கருவி ரூ.355 லாபம் வைத்து விற்கப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து மேட்ரிக்ஸ் நிறுவனம் இறக்குமதி செய்யும் ரேபிட் டெஸ்ட் கருவிகளின் அதிகாரபூர்வ விநியோகஸ்தரான ரேர் மெடாபொலைஸ் நிறுவனம் டெல்லி துவாரகா பகுதியில் செயல்பட்டு வருகிறது. டாக்டர். கிருபா சங்கர் குப்தா என்பவரால் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. ஹெல்த்கேர் துறையில் 15 வருடங்கள் அனுபவம்கொண்ட இவரால், 2015- ம் ஆண்டுதான் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.

கொரோனா ரேபிட் கிட் அதிக விலைக்கு விற்கும் டாக்டர்
கொரோனா ரேபிட் கிட் அதிக விலைக்கு விற்கும் டாக்டர்

பொதுமக்களுக்கு மலிவான விலையில் தரமான மருத்துவ வசதியை அளிப்பதற்காக ரேர் மெடாபொலைஸ் நிறுவனத்தைத் தொடங்கியதாகக் கூறும் டாக்டர்.கிருபா சங்கரின் நிறுவனம்தான் இந்தக் கொள்ளை நோய் காலத்திலும் கொள்ளை லாபம் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்திய கம்பெனி பதிவேட்டின் அடிப்படையில் பார்த்தால் , இந்த நிறுவனத்துக்கு டாக்டர். கிருபா சங்கர் குப்தாவைத் தவிர மேலும் இரண்டு இயக்குநர்கள் உள்ளனர். ஷோபனா தத்தா, சைலேஷ் பாண்டே என்பது மற்ற இயக்குநர்களின் பெயர்கள். 2019 - ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் டர்ன் ஓவர் 6.19 கோடி ஆகும். தமிழ்நாட்டுக்கு ரேபிட் டெஸ்ட் கிட்டுகள் ஷான் பயோடெக் நிறுவனம் வழியாக ஒன்று ரூ.600-க்கு விற்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 24,000 கிட்டுகள் தமிழ்நாட்டுக்கு விற்கப்பட்டுள்ளன. எஞ்சியவை இன்னும் விநியோகிக்கப்படவில்லை

Rahul Gandhi
Rahul Gandhi

நாடு பேரிடர் காலத்தை எதிர் கொண்டுள்ள நிலையில் ஒவ்வொரு கிட்டும் அதிகப்படியான விலை வைத்து விற்கப்பட்டுள்ள விவகாரத்தால் சர்ச்சை எழுந்துள்ளது. எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சித்துள்ளன. காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன் ட்வீட்டில், ''நாடு கொரோனாவுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கையில் சிலர் அதிகப்படியான லாபத்தைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகின்றனர். இன்னும் சிலர் ஊழல் புரியும் மனநிலையுடன் செயல்படுவது வெட்கக்கேடானது. பிரதமர் மோடி, இந்த விவகாரத்தில் தலையிட்டு கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் '' என்று சாடியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு