Published:Updated:

பாம்புகள் பரப்பும் கொரோனா வைரஸ்... பாதிப்பு பட்டியலில் இருக்கிறதா இந்தியா?

சீனாவில் கொரோனா வைரஸ் நோய்
சீனாவில் கொரோனா வைரஸ் நோய் ( Freepik )

சீனாவிலிருந்து வரும் பயணிகளைப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி ஆகிய சர்வதேச விமான நிலையங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

சீனாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 17 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 500-ஐ தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் (Corona virus) என்று அழைக்கப்படும் இந்த வைரஸானது நுரையீரலைத் தாக்கி நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்தும் தன்மைகொண்டது. இந்த வைரஸுக்கு nCoV என்று உலகச் சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது.

virus infection
virus infection

இந்த வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. சீனாவின் வுகான் மாவட்டத்திலுள்ள கடல் உயிரினங்கள் மொத்த விற்பனை சந்தையிலிருந்துதான் இந்த வைரஸ் தொற்று பரவியது. முதன்முதலில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அந்தச் சந்தையில் வேலை செய்தவர்களும் அந்த மார்கெட்டுக்கு வந்த வாடிக்கையாளர்களும்தாம். அந்தச் சந்தையில் பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் கோழி, வாத்து வகையான பறவைகளும், கழுதை, ஆடு, பன்றி, ஒட்டகம், நரி, எலி, முள்ளம்பன்றி மற்றும் ஊர்வன உயிரினங்களும் உயிருடன் உணவுக்காக விற்பனை செய்யப்படுகின்றன.

சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸின் மரபணுவை ஆராய்ந்தபோது அது சார்ஸ் நோயைப் போன்றே வௌவாலிடமிருந்து பரவியிருக்கலாம் என்று சந்தேகித்தனர். அதன் பிறகு நடைபெற்ற அடுத்தகட்ட ஆய்வுகளில் இந்த வைரஸ் தொற்று பாம்புகளிடமிருந்து வந்திருக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. வனத்திலிருக்கும் பாம்புகள் உணவுக்காக அவ்வப்போது வௌவால்களையும் வேட்டையாடுவதுண்டு.

இந்த ஆராய்ச்சி முடிவுகள் நோய் பரவுதல் மற்றும் சிகிச்சை நடைமுறைகளுக்கு உதவியாக இருக்கும்.
சீன ஆராய்ச்சியாளர்கள்

அவ்வாறு வேட்டையாடப்பட்ட வௌவாலின் உடலில் காணப்பட்ட கொரோனா வைரஸ் பாம்புக்குப் பரவியிருக்கலாம். வைரஸ் பரவிய பாம்பு அந்தச் சந்தையில் விற்பனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

சீனாவில் கட்டுவிரியன் மற்றும் நல்ல பாம்பு வகைகள் பரவலாகக் காணப்படுகின்றன. அவை சீன கட்டுவிரியன், சீன நல்ல பாம்பு என்றும் அழைக்கப்படுகின்றன. குறிப்பாக, உடலில் வளையங்களுடன் தோற்றமளிக்கும் அதிக விஷமுள்ள கட்டுவிரியன் பாம்புகள் மத்திய, தெற்கு சீனாவில் அதிகளவில் காணப்படுகின்றன. அதனால் இந்த இரண்டு வகையான பாம்புகளில் ஏதாவதொன்றிடமிருந்து இந்த வைரஸ் பரவியிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

China
China
Pixabay
`ஏ' கிளாஸ் நோய், தெர்மல் ஸ்கேனர்கள், சுற்றுலாவுக்குத் தடை... என்ன நடக்கிறது சீனாவில்?

கொரோனா வைரஸ் பரவியதையடுத்து வுகான் மாவட்டத்திலுள்ள சந்தை மூடப்பட்டு, கிருமி நீக்கம் செய்யப்பட்டுவிட்டதால் எந்த விலங்கிடமிருந்து இந்த வைரஸ் பரவியது என்பதைக் கண்டறிவது சவாலாக உள்ளது. "கொரோனா வைரஸின் தோற்றத்தைக் கண்டறிய அந்தச் சந்தையில் விற்பனை செய்யப்பட்ட விலங்குகள் மற்றும் வனவிலங்குகள், வௌவால் போன்றவற்றின் டிஎன்ஏ மாதிரிகள் தேவைப்படும். இந்த ஆராய்ச்சி முடிவுகள் நோய் பரவுதல் மற்றும் சிகிச்சை நடைமுறைகளுக்கு உதவியாக இருக்கும்" என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ் தொடர்பாக அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் சீனாவின் அண்டை நாடான இந்தியாவில் இந்த வைரஸ் தாக்குதல் எதுவும் இல்லை என்று மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. மேலும், சீனாவிருந்து இந்தியாவுக்கு வந்த 43 சர்வதேச விமானங்களில் பயணித்த 9,156 பயணிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் யாருக்கும் இதுவரை வைரஸ் தொற்று கண்டறியப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

snake
snake
Pixabay

"சீனாவில் பரவிவரும் வைரஸ் குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு நோய் குறித்த அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் உடனடியாக அருகிலிருக்கும் அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்புத் திட்டம் அனைத்து மாநிலங்களுக்கும் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

புனேயில் செயல்படும் தேசிய வைராலஜி நிறுவனம் இந்த வைரஸ் தொற்றைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளைச் செய்வதற்காகத் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் நெட்வொர்க்கில் இயங்கும் வைரஸ் ஆராய்ச்சி மற்றும் ஆய்வகங்களும் தயார் நிலையில் உள்ளன" என்று மத்திய சுகாதாரத்துறை செயலர் பிரீத்தி சூடன் தெரிவித்துள்ளார்.

Screening passengers at the airport
Screening passengers at the airport
உலகை அச்சுறுத்தும் கொரோனா!

சீனாவிலிருந்து வரும் பயணிகளைப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி ஆகிய சர்வதேச விமான நிலையங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு