Published:Updated:

கர்ப்பப்பை... யூஸ் அண்டு த்ரோ பை அல்ல! - தேவை கவனம்!

கர்ப்பப்பை
பிரீமியம் ஸ்டோரி
கர்ப்பப்பை

#SaveTheUterus

கர்ப்பப்பை... யூஸ் அண்டு த்ரோ பை அல்ல! - தேவை கவனம்!

#SaveTheUterus

Published:Updated:
கர்ப்பப்பை
பிரீமியம் ஸ்டோரி
கர்ப்பப்பை
`I have a brain and a uterus. And I use both' - அமெரிக்காவின் அரசியல் ஆளுமை பட்ரிசியா ஷ்ரோடர். பிரசவத்தின்போது முக்கியத்துவம் பெறுகிற உறுப்பாகவும், அந்த வேலை முடிந்ததும் தேவையற்ற உறுப்பாகவும் பார்க்கப்படுகிறது கர்ப்பப்பை. அதனால்தான் சாதாரண உதிரப்போக்கு பிரச்னை தொடங்கி, புற்றுநோய் அபாயம்வரை சகலத்துக்கும் தீர்வாக கர்ப்பப்பை நீக்க அறுவைசிகிச்சை பல மருத்துவர்களாலும் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், பெண்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு மூளையும் கர்ப்பப்பையும் ஒன்றுக்கொன்று சளைத்ததல்ல. டெம்ப்பேவின் அரிஸோனா மாநிலப் பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வு, கர்ப்பப்பைக்கும் மூளைக்குமான தொடர்பு பற்றிப் பேசுகிறது. அதில் கர்ப்பப்பை அறுவைசிகிச்சை மேற்கொள்ளும் பெண்களுக்கு நினைவாற்றலில் மந்தம் ஏற்படுவதாகவும், அவர்களுக்கு டிமென்ஷியா எனப்படும் மறதிநோய் பாதிக்கும் வாய்ப்பு அதிகரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நினைவாற்றலுடன் மட்டுமல்ல, உடலின் ஒட்டுமொத்த இயக்கத்துடனும் தொடர்புடைய கர்ப்பப்பையை அற்ப காரணங்களுக்காக அகற்றுவது கூடாது என்பதே அறம் விரும்பும் மருத்துவர்களின் ஆசை.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

உயிருக்குள் உயிர் சுமக்கும் கர்ப்பப்பையைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியம் என்ன, எந்தப் பிரச்னைகளின்போதெல்லாம் அதை அகற்றாமல் பாதுகாக்க முடியும், அகற்றியே தீர வேண்டிய அவசர தருணங்கள் எவை, கர்ப்பப்பை நீக்கத்துக்குப் பிறகான ஆலோசனைகள்... அனைத்தையும் விளக்குகிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ்.

‘`பிரசவத்துக்குப் பிறகு, கர்ப்பப்பைக்கு வேலையில்லை என நினைத்துக் கொள்கிறார்கள் பலரும். சின்ன பிரச்னைகளைக்கூட சமாளிக்க முடியாமல் கர்ப்பப்பையையும், சிலர் அதோடு சேர்த்து சினைப்பைகளையும் அகற்றிக் கொள்கிறார்கள். சினைப்பைகளை நீக்குவது என்பது கிட்டத்தட்ட மெனோபாஸ் நிலையை எட்டியதற்கு இணையானது. அதாவது எஞ்சிய வாழ்க்கையை அந்தப் பெண்கள் ஹார்மோன் பிரச்னைகளோடுதான் வாழ வேண்டியிருக்கும்.

 மாலா ராஜ்
மாலா ராஜ்

சினைப்பைகளில்தான் ஈஸ்ட்ரோஜென் மற்றும் புரொஜெஸ்ட்ரோன் ஹார்மோன்கள் சுரக்கின்றன. அவை, கால்சியம் இருப்புக்கு மிக அவசியம். மெனோபாஸ் வயதிலிருக்கும் பெண்களுக்கு கால்சியம் பற்றாக்குறை ஏற்படக் காரணமே, சினைப்பைகளிலிருந்து ஹார்மோன்கள் சுரப்பது குறைவதுதான். அதனால்தான் மெனோபாஸ் காலத்தில் பெண்களுக்கு எலும்புகள் தேய்வது, எலும்பு முறிவு போன்றவை ஏற்படுகின்றன. இள வயதிலேயே சினைப்பைகளை நீக்கும்போது, மெனோபாஸுக்குப் பிறகு பெண்கள் சந்திக்கும் இந்தப் பிரச்னைகளை முன்கூட்டியே சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

சில பெண்களுக்கு கர்ப்பப்பையை மட்டும் நீக்கிவிட்டு, சினைப்பைகளை விட்டு விடுவதும் நடக்கும். சினைப்பைகளைத் தக்கவைத்தாலும், ரத்த ஓட்டமும் ஹார்மோன் சுரப்பும் குறைவதால் சினைப்பைகளின் செயல்திறனும் குறையத் தொடங்கும். அதனால்தான் கர்ப்பப்பையைப் பாதுகாக்க முடிந்தவரை எல்லா முயற்சிகளையும் மேற் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

கர்ப்பப்பை நீக்கம் எப்போது தவிர்க்க முடியாததாகிறது?

கர்ப்பப்பையிலோ, கர்ப்பப்பையின் வாய்ப்பகுதியிலோ, எண்டோமெட்ரியம் எனப்படும் கர்ப்பப்பையின் உட்புறச் சவ்விலோ புற்றுநோய் தாக்கினால் கர்ப்பப்பையை நீக்குவதைத் தவிர வேறு தீர்வுகள் இல்லை. புற்றுநோயின் தீவிரத்தைப் பொறுத்து கர்ப்பப்பையோடு சேர்த்து, சினைப்பைகளையும் நீக்க வேண்டி வரலாம்.

மாதவிலக்கின்போது வெளியேறும் ரத்தத்தில் சிறிதளவு, ரிவர்ஸில் சென்று கர்ப்பப்பையின் தசைகளுக்குள்ளேயே தங்கிவிடும் `அடினோமயோசிஸ்' பாதிப்பில் கடுமையான வலியும் அளவுக்கதிக ரத்தப் போக்கும் இருக்கும். மருந்துகள் மூலம் அதைக் குணப்படுத்தலாம். நிலைமை அதையும் தாண்டிப் போகும்போது, ரிவர்ஸில் செல்லும் பகுதியை மட்டும் வெட்டி நீக்கிவிட்டால் பாதிப்பை சரி செய்யலாம். இந்த வழிகள் கைகொடுக்காதபோதுதான் கர்ப்பப்பையை நீக்க வேண்டியிருக்கும்.

இன்று நிறைய பெண்களுக்கு ‘பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிண்ட்ரோம்’ (பிசிஓஎஸ்) எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை இருப்பதைப் பார்க்கிறோம். இந்தப் பெண்களுக்குப் பிற்காலத்தில் கர்ப்பப்பைப் புற்றுநோய் வர வாய்ப்பிருக்கிறது. நீர்க்கட்டிகள் இருப்பதால், ஹார்மோன் மாற்றங்களின் விளைவால் எண்டோமெட்ரியம் சவ்வு நாளுக்கு நாள் தடித்துக்கொண்டே போகும். அந்த நிலையை எண்டோமெட்ரியல் ஹைப்பர்ப்ளேசியா (Endometrial hyperplasia) என்கிறோம். இது சில நேரம், புற்றுநோயாகவும் மாறலாம். பயாப்சி செய்துபார்த்து, புற்றுநோய் உறுதியாகும்பட்சத்தில் கர்ப்பப்பையை நீக்க வேண்டி வரலாம். அதனால்தான் பிசிஓஎஸ் பிரச்னையை அலட்சியப்படுத்தாமல், ஆரம்பத்திலேயே கவனிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

அறுவைசிகிச்சை தேவைப்படாத நிலைகள்...

அளவுக்கதிகமான ரத்தப்போக்கைச் சமாளிக்க முடியாமல்தான் பலரும் இன்று இளம் வயதிலேயே கர்ப்பப்பை நீக்க அறுவைசிகிச்சைக்குத் தயாராகிறார்கள். ஆனால், அளவுக்கதிகமான ரத்தப்போக்கு பிரச்னையுடன் வருபவர்களுக்கு முதலில் அதற்கான காரணத்தை ஆராய வேண்டும். ஹார்மோன் பிரச்னைகள்தான் காரணம் என்று தெரிந்தால் ஹார்மோன்களை ஒழுங்கு படுத்திவிட்டாலே பிரச்னை சரியாகிவிடும். ஹார்மோன்களின் சுரப்பை ஒழுங்குபடுத்த கருத்தடை மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும். தைராய்டு பிரச்னை உள்ளவர்களுக்கும் அதிக ரத்தப்போக்கு இருக்கலாம். தைராய்டுக்கான சிகிச்சைகளின் மூலமே அதைச் சரியாக்க முடியும்.

கர்ப்பப்பையினுள் பாலிப் எனப்படும் சதை வளர்கிற பிரச்னைக்கு கர்ப்பப்பையை நீக்க வேண்டியதில்லை. அந்தச் சதையை மட்டும் நீக்கிவிட்டாலே, ரத்தப்போக்கு பிரச்னை சரியாகிவிடும்.

சிலருக்கு கர்ப்பப்பைக்குள் ஃபைப்ராய்டு எனப்படும் பெரிய கட்டி இருக்கும். ஹிஸ்ட்ரோஸ்கோப்பி மூலம் அந்தக் கட்டியை மட்டும் நீக்கினாலே பீரியட்ஸ் பிரச்னை சரியாகும். சிலருக்கு கர்ப்பப்பைக்கு வெளியே பெரிய கட்டி இருக்கும். அதையும் லேப்ராஸ்கோப்பி மூலம் அகற்றிவிட முடியும்.

எத்தனை காலம் காத்திருக்கலாம்?

‘மூணு மாசமா ப்ளீடிங் நிக்கலை’ என்பதை சர்வசாதாரணமாகச் சொல்லிக்கொண்டு வருபவர்கள் பலரைப் பார்க்கிறேன். 40 வயதைக் கடந்த பல பெண்களும் ‘மெனோபாஸ் வரப்போகுது... பீரியட்ஸ் நிக்கறதுக்கு முன்னாடி இப்படித்தான் ப்ளீடிங் ஆகும். இது ஒரு பிரச்னையே இல்லைனு எங்கம்மா சொன்னாங்க’ என்று சொல்லிக்கொண்டு வருவதையும் பார்க்கிறேன். முதலில் அவர்களது, உடலைத் தேற்றிவிட்டுத்தான் சிகிச்சையை ஆரம்பிப்போம். வழக்கமாக மூன்று நாள்கள் மட்டுமே இருக்கும் ரத்தப்போக்கு ஏதோ ஒரு மாதம், ஐந்து நாள்களைக் கடந்தும் இருக்கிறதா..? தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் போய்விட்டால் ஹார்மோன்கள் அல்லாத மருந்துகளின் மூலமே பிரச்னையைச் சரிசெய்துவிடுவார்கள்.

சராசரியாக ஒரு மாதவிலக்கு சுழற்சியில் வெளியேறும் ரத்தத்தின் அளவு 80 மி.லிதான் இருக்க வேண்டும். இன்னும் எளிமையாகச் சொல்வதானால் ஒருநாளைக்கு இரண்டு அல்லது மூன்று நாப்கின்கள் மாற்றும் அளவுக்கான ரத்தப்போக்கு இருக்கலாம். அதைத் தாண்டும்போது, அது அதிகப்படியான ப்ளீடிங் என்று உணர வேண்டும்.

45 வயதுக்குப் பிறகு, உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் மாதவிலக்கு சுழற்சி முறைதவறிப் போகும். சிலருக்கு அதிக ரத்தப்போக்கும் சிலருக்கு குறைவாகவும் இருக்கலாம். மெனோபாஸ் காலத்தில் எண்டோமெட்ரியத்தின் அடர்த்தி யானது 4 மி.மீட்டர் அளவுதான் இருக்க வேண்டும். பெரிமெனோபாஸ் எனப்படும் மெனோபாஸுக்கு முந்தைய காலத்தில் அது 6 மி.மீட்டர்வரை இருக்கலாம். இதற்கு மேல் அடர்த்தியாக இருந்தால் ஹார்மோன்கள் கொடுத்துச் சரி செய்யலாம் அல்லது கர்ப்பப்பையின் உள்ளே உள்ள திக்கான எண்டோமெட்ரியத்தை ‘ஹிஸ்ட்ரோஸ் கோப்பிக் எண்டோமெட்ரியல் அப்ளேஷன்’ முறையில் சுரண்டி எடுத்துவிடலாம். அதன் பிறகு ரத்தப் போக்கும் கட்டுக்குள் வரும்.

கர்ப்பப்பை... யூஸ் அண்டு த்ரோ பை அல்ல! - தேவை கவனம்!

கர்ப்பப்பையை ஏன் எடுக்கக் கூடாது?

சீக்கிரமே மெனோபாஸ் வருபவர்களுக்கு இதய பாதிப்புகள், மாரடைப்பு போன்றவை வரலாம். ஈஸ்ட்ரோஜென் சுரப்பு இருக்கும்வரைதான் பெண்களுக்குப் பாதுகாப்பு. அந்தச் சுரப்பு நின்று, மெனோபாஸ் வருவதால், இதய பாதிப்பு, எலும்புகள் பலவீனமாவது, உணர்வுகளில் தடுமாற்றம், மன அழுத்தம், உடல் சூடாவது போன்றவை ஏற்படலாம். மூளை சுறுசுறுப்பாக இருக்கவும் அந்த ஹார்மோன்கள் தேவை.

கர்ப்பப்பையை நீக்கியவர்கள் கவனத்துக்கு...

அறுவைசிகிச்சை முடிந்தபிறகு அந்தக் காயம் ஆறும்வரை, அதாவது மூன்று மாதங்கள்வரை தாம்பத்ய உறவைத் தவிர்க்க வேண்டும். மற்றபடி இந்தச் சிகிச்சைக்குப் பிறகு தாம்பத்ய உறவில் முன்பிருந்த நாட்டம் இல்லை என உணர்வதெல்லாம் உண்மையல்ல. இன்னும் சொல்லப்போனால் வலி, ரத்தப்போக்கின் காரணமாக முன்பு இனிக்காத தாம்பத்யம், அறுவைசிகிச்சைக்குப் பிறகு இயல்பாக மாறுவதாகச் சொல்கிறார்கள் பலரும்.

இந்த அறுவைசிகிச்சைக்குப் பிறகு ரத்தப்போக்கு முற்றிலும் நின்றுவிடுவதால், மாதவிடாய் வராது. ஆனால், அவர்கள் மெனோபாஸ் அடைந்துவிட்டதை உடல் சில அறிகுறிகள் மூலம் உணர்த்தும். திடீரென உடல் முழுக்க வியர்த்துக்கொட்டும். உடல் முழுவதும் சூடு பரவும். தூக்கமின்மை இருக்கும். முடி உதிர்வு, சரும வறட்சி, அந்தரங்க உறுப்பில் வறட்சி, உறவில் நாட்டமின்மை போன்றவை இருக்கும். இந்த அறிகுறிகளுக்கு மருத்துவ ஆலோசனை அவசியம்.

காக்க, காக்க கர்ப்பப்பை காக்க...

மாதவிடாய் சுழற்சியைக் கவனியுங்கள். ஐந்து நாள்களுக்கு மேலும், 80 மி.லிக்கு மேலும் நீடிக்கும் ரத்தப்போக்கு அலட்சியப் படுத்தக் கூடாது. அசாதாரணங்களை உணர்ந்தால் கர்ப்பப் பையினுள் உள்ள எண்டோமெட்ரியம் பகுதியின் அடர்த்தியை ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும். சந்தேகம் வந்தால் பயாப்சி செய்து பார்க்க வேண்டும்.

கர்ப்பப்பையை பலமாக வைத்திருக்க இடுப்பெலும்பு பகுதியை வலுப்படுத்தும் கீகெல் பயிற்சியைச் செய்ய வேண்டும். சிவப்பு இறைச்சியைத் தவிர்த்து, காய்கறி, பழங்களை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். கால்சியம், வைட்டமின் டி, இரும்புச்சத்து மற்றும் மல்டிவைட்டமின் சப்ளிமென்ட்டுகளை மருத்துவரின் பரிந்துரை யின் பேரில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

செகண்டு ஒப்பீனியன் தவறில்லை

உங்கள் பிரச்னைக்கு கர்ப்பப்பையை நீக்குவதுதான் தீர்வு என்று அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரைக்கிறாரா உங்கள் மருத்துவர்... அவசரப்படாமல் இன்னொரு மருத்துவரிடமும் அபிப்ராயம் கேட்கலாம். அவரும் அதையே வலியுறுத்தினால் அதன் பிறகு அறுவைசிகிச்சைக்குத் தயாராகலாம்.''