Published:Updated:

`பழங்குடியினர் உட்பட 10,000 பேருக்கு ஃபுளூரோசிஸ்!'- `தங்கம் வதந்தி' மாவட்டத்தில் உச்சக்கட்டக் கொடுமை

சுரங்கம்
சுரங்கம் ( இந்தியா டிவி நியூஸ் )

காற்று, நீர் மாசுபாட்டால், சோன்பத்ரா மாவட்டத்தின் 269 கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியினர் உள்ளிட்ட 10,000 பேருக்கு ஃபுளூரோசிஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

மூன்று நாள்களுக்கு முன் உத்தரப்பிரதேசம் சோன்பத்ரா மாவட்டத்தில் 3,350 டன் அளவுக்குத் தங்கம் புதைந்து கிடப்பதாகச் செய்தி வந்ததும் ஊடங்களின் பார்வை அந்த மாவட்டத்தை நோக்கித் திரும்பியது. இறுதியில் அந்தச் செய்தி வதந்தி எனத் தெரியவந்தது. ஆனால், இந்த வதந்தி வழியே ஏற்பட்ட கவன ஈர்ப்பால், அந்த மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கொடுமையான அவலநிலையும் அதன் பின்னணியும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

`உ.பி-யில் கிடைத்துள்ள 3,000 டன் தங்கம்!’ - 5 மடங்காக உயரும் இந்திய இருப்பு?

காற்று மாசு மற்றும் நீர் மாசுபாட்டால், சோன்பத்ரா மாவட்டத்தின் 269 கிராமங்களைச் சேர்ந்த பழங்குடியினர் உள்ளிட்ட 10,000 பேருக்கு ஃபுளூரோசிஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

சோன்பத்ரா தங்கச் சுரங்கம்
சோன்பத்ரா தங்கச் சுரங்கம்

உடலில் ஃபுளூரைடு அளவு அதிகரித்தால் ஃபுளூரோசிஸ் ஏற்படும். இதன் அறிகுறி பற்களில் தெரியவரும். பற்கள் வெண்மைத் தன்மையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத் தொடங்கி கறைபடும். ஈறுகள் வரை பரவி முழுக்கவே கறை நிரம்பியிருந்தால் அது அபாய அறிகுறி. மரணத்துக்கு இட்டுச்செல்லும் கொடிய நோய் ஃபுளூரோசிஸ். குடிநீரில் ஃபுளூரைடின். அளவு அதிகரிப்பது உயிருக்கே ஆபத்தாக அமையலாம்.

சோன்பத்ரா பகுதி மக்களின் இந்த நிலை குறித்து ஆய்வுசெய்து வரும் வழக்கறிஞர் அஷ்வினி துபே தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அந்தப் பகுதிகளில் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் சிலர் சுரங்கத்தொழில் நடத்தி லாபம் சம்பாதிப்பதாகவும், மாநில அரசு அங்குள்ள கனிம வளங்கள், காட்டு வளங்களை அழித்து அதன்மூலம் வருவாய் ஈட்டி வருவதாவும் தெரிவித்திருக்கிறார் அஷ்வினி துபே. மேலும், அந்தப் பழங்குடியினர் பல காலமாகக் கழிவு நீரைத்தான் குடித்து வருவதாக வேதனை தெரிவித்திருக்கிறார்.

`பழங்குடியினர் உட்பட 10,000 பேருக்கு ஃபுளூரோசிஸ்!'- `தங்கம் வதந்தி' மாவட்டத்தில் உச்சக்கட்டக் கொடுமை
Vikatan

அந்தப் பகுதியின் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜெகத் நாராயண் புதுதில்லியின் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு 2012-ம் ஆண்டு அங்கு ஆய்வு நடத்தியபோது அந்த மக்களின் ரத்தம், முடி, நகம் ஆகியவற்றின் பாதரச அளவு, இயல்பைவிடக் கூடுதலாக இருந்ததாகவும், 2018 நவம்பரில் சுகாதாரத்துறை இயக்குநர் முன்னெடுத்த முகாமில் அந்த மக்களிடம் செய்யப்பட்ட பரிசோதனையில் அவர்களின் சிறுநீரில் அளவுக்கதிகமாக ஒரு லிட்டருக்கு 12 மில்லிகிராம் ஃபுளூரைடு கலந்திருந்ததாகவும் கூறுகிறார். இவை குறித்து பசுமை தீர்ப்பாயத்தில் புகார் பதிவு செய்திருந்தபோதும் அரசு நிர்வாகம் தீர்ப்பாயத்தின் வழிமுறைகளைப் பின்பற்றுவதே இல்லை எனக் குற்றம் சாட்டியிருக்கிறார் ஜெகத் நாராயண்.

டன் கணக்கில் தங்கம் என வதந்தி பரவிய மாவட்டத்தில், துளி தண்ணீர்கூட சுத்தமாகக் குடிக்கக் கிடைக்கவில்லை என்பது அரசு நிர்வாக அலட்சியத்தின் உச்சம் என்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு