Published:Updated:

தடுப்பூசிகள் தயார்... அடுத்தது என்ன?

பதிவு செய்த நபரின் விவரங்களின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட்டு, தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் தேதி, மையம் உள்ளிட்ட விவரங்கள் அனுப்பப்படும்.

பிரீமியம் ஸ்டோரி
தேர்தலுக்கு முன்பாக வாக்குச்சாவடிகளில் ஒத்திகை, ராணுவ வீரர்கள் மற்றும் கடலோரக் காவல் படை பாதுகாப்பு ஒத்திகை என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். தடுப்பூசிக்கு ஒத்திகை என்பது சற்று புதிய விஷயம்தான். அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் மக்களுக்கு கொரோனாத் தடுப்பூசி போடப்பட்டுவரும் சூழலில், இந்தியாவிலும் அதற்கான ஒத்திகை நடந்து முடிந்துள்ளது.

ஒத்திகை ஏன்?

‘`ஒரு தடுப்பூசி தயாரிக்கப்பட்டு, சரியான உறைநிலையில் சேமிக்கப்பட்டு, பயனாளிக்குச் சென்று சேரும்வரை அதே உறைநிலையில், பாதுகாப்பாக உள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டும். ஓரிடத்தில் அளவுக்கு அதிகமாகத் தடுப்பூசிகள் குவிந்து, மற்றொரு இடத்தில் பற்றாக்குறை நிலவுவது போன்ற லாஜிஸ்டிக்ஸ் பிரச்னைகள் களையப்பட வேண்டும். இதுபோன்ற காரணங்களுக்காகவே ஒத்திகை நடைபெறுகிறது. வேறு எந்தத் தடுப்பூசி விநியோகத்துக்கும் இதுபோன்று ஒத்திகை நடைபெற்றதில்லை.

தடுப்பூசிகள் தயார்... அடுத்தது என்ன?

இந்தியாவில் ஆண்டுதோறும் அரசின் தடுப்பூசித் திட்டத்தின் மூலம் 4 கோடி தடுப்பூசிகள் போடப்படுகின்றன. ஆனால் ஜூலைக்குள் 20 கோடிப் பேருக்கு கோவிட் தடுப்பூசி போடப்பட வேண்டும். இலக்கு என்பது இமாலய அளவில் உள்ளது. இதில் நடைமுறைச் சிக்கல்களைக் களைய வேண்டும் என்பதற்காகவே ஒத்திகை பார்க்கப்படுகிறது’’ என்கிறார் மத்திய அரசின் புதுடெல்லி விக்யான் பிரச்சாரின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்.

தடுப்பூசிகள் தயார்... அடுத்தது என்ன?

நாடு முழுவதும் ஒத்திகை பார்க்கப்பட வேண்டியிருந்த நிலையில் முதல்கட்டமாக டிசம்பர் 28, 29 ஆகிய தேதிகளில் அசாம், ஆந்திரா, பஞ்சாப், குஜராத் ஆகிய மாநிலங்களில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் ஜனவரி 2-ம் தேதி கொரோனாத் தடுப்பூசி ஒத்திகை நடந்தது. சென்னை, நெல்லை, நீலகிரி, கோவை, திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் 17 மையங்களில் இந்த ஒத்திகை நடைபெற்றது.

ஒத்திகையில் நடந்தது இதுதான்!

ஒத்திகை நடந்த 17 மையங்களும் மருத்துவர்கள், செவிலியர்கள் கண்காணிப்பில் இருந்தன. ஆம்புலன்ஸ் மற்றும் அவசர சிகிச்சைக்கான உயிர்காக்கும் மருந்துகள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு மையத்திலும் 25 பேருக்குத் தடுப்பூசி ஒத்திகை நடந்தது. மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு முதல்கட்டமாக கொரோனாத் தடுப்பூசி போடப்பட இருக்கிறது. அதனால் ஒத்திகையின்போது செவிலியர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்.

கொரோனாத் தடுப்பூசியைப் பெறுவதற்காகப் பெயரைப் பதிவு செய்ய CO-Win என்ற மொபைல் ஆப்பை மத்திய சுகாதாரத் துறை அறிமுகப்படுத்த உள்ளது. இதை மத்திய அரசு வெளியிட்ட பிறகு கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். யார் வேண்டுமானாலும் பெயரைப் பதிவு செய்யலாம். ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பேன் கார்டு போன்ற புகைப்பட அடையாள அட்டை இதற்கு அவசியம். விவரங்களைப் பதிவு செய்த பிறகு OTP அனுப்பப்படும். அதை ஆப் அங்கீகரித்துவிட்டால் பெயர் பதிவு செய்யப்பட்டுவிட்டது என்று அர்த்தம்.

பதிவு செய்த நபரின் விவரங்களின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட்டு, தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் தேதி, மையம் உள்ளிட்ட விவரங்கள் அனுப்பப்படும். தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும் அந்த நபரின் செல்போனுக்குத் தகவல் செல்லும்.

தடுப்பூசிகள் தயார்... அடுத்தது என்ன?

சுகாதாரப் பணியாளர்களைப் பரிசோதனை முறையில் இதில் பதிவு செய்யச் சொல்லி, அவர்களையே ஒத்திகைக்கு அழைத்திருந்தனர். சமூக இடைவெளியுடன் அவர்கள் வரிசையில் காத்திருந்தனர். உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, சளி, இருமல் உள்ளதா என்று கேட்கப்படுகிறது. பின்னர், தடுப்பூசி செலுத்துவதற்காக அறிமுகப்படுத்தியுள்ள செயலியில் பதிவு செய்துள்ள நபர்தானா என்பதை அவர்களுடைய அடையாள அட்டையுடன் ஒப்பிட்டு சரிபார்க்கின்றனர்.

அதன்பின்னர் தடுப்பூசி போடப்பட்டு, கண்காணிப்புக்காக 30 நிமிடங்கள் ஓர் அறையில் தங்க வைக்கப்படுகிறார்கள். அந்தச் சமயத்தில் உடலில் ஒவ்வாமை உள்ளிட்ட ஏதாவது பிரச்னை ஏற்படுகிறதா என்பது கண்காணிக்கப்பட்டு, பிறகு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

படிப்பினை கிடைத்தது!

‘`தடுப்பூசி போடும் அறை இன்னும் பெரிதாக இருக்க வேண்டும் என்ற படிப்பினை கிடைத்திருக்கிறது. அதற்கு ஏற்பாடு செய்யப்படும். தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒவ்வொரு நபரும் இரண்டு மணி நேரம் தனியறையில் வைத்துக் கண்காணிக்கப்படுவார்கள். ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்பட்டால் அதற்கு சிகிச்சையளிப்பதற்கான வசதிகள், மருந்துகள் போன்றவை இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

ஒரு நாளைக்கு ஒரு மையத்தில் 100 பேருக்குத் தடுப்பூசி வழங்கப்படும். தமிழகத்தில் 51 தடுப்பூசி சேமிப்புக் கிடங்குகள் உள்ளன. அது தவிர, 2,600 இடங்களில் இரண்டாம் கட்ட சேமிப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதன் மூலம் தொலைதூர இடங்களுக்கும் பாதுகாப்பாகத் தடுப்பூசியைக் கொண்டு சேர்க்க முடியும்’’ என்றார் தமிழக சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன்,

கொரோனாத் தடுப்பூசி தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கங்களும்...

யாருக்கு முதலில் தடுப்பூசி?

கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு முதலில் தடுப்பூசியை இலவசமாகக் கொடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவப் பணியாளர்கள் தொடங்கி, கொரோனாத் தடுப்புப் பணிகளுக்காக வீதிகளில் இருப்போர் வரை சுமார் மூன்று கோடிப் பேர் இந்தப் பட்டியலில் உள்ளனர்.

அடுத்து யாருக்கு?

50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி போடப்படும். 1971 ஜனவரி முதல் தேதியோ, அதற்கு முன்போ பிறந்தவர்கள், இந்தப் பிரிவில் தடுப்பூசி பெறுவதற்குத் தகுதியானவர்கள். சர்க்கரை நோய், புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம், சுவாசத் தொற்றுகள் போன்ற ஆபத்தான இணை நோய்கள் உள்ளவர்கள், வயது வித்தியாசமின்றி முன்னுரிமை பெறுவார்கள். இப்படி 27 கோடிப் பேருக்கு ஜூலை மாதத்துக்குள் தடுப்பூசி போடப்பட உள்ளது.

கொரோனாத் தடுப்பூசி கட்டாயமா?

இதை அரசு கட்டாயப்படுத்தவில்லை. எனினும், நமக்கு நெருக்கமாக இருப்பவர்களின் நலன் காக்க, இதைப் போட்டுக்கொள்ளலாம்.

எப்படிப் போடப்படும்?

முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டு, 28 நாள்கள் கழித்து இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும். முதல் டோஸ் போட்ட இரண்டே வாரங்களில் உடலில் எதிர்ப்பணுக்கள் உருவாகும்.

ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்படுமா?

பொதுவாக ஒரு தடுப்பூசி போட்டுக்கொண்டால் வருவதுபோல லேசான ஜுரம், வலி போன்றவை மட்டுமே ஏற்படும். இதைத் தாண்டி ஏதேனும் நேர்ந்தால், உரிய சிகிச்சை தருவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதனால்தான், தடுப்பூசி போட்டபிறகு குறிப்பிட்ட நேரத்துக்கு அங்கேயே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா அறிகுறி உள்ளவர்கள், தாக்கி மீண்டவர்களுக்குத் தடுப்பூசி அவசியமா?

கொரோனா அறிகுறிகள் உள்ள நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்வது முழுமையான பலன் தராது. அறிகுறிகள் நீங்கி 14 நாள்கள் கழித்து தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். கொரோனா தாக்கி மீண்டவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்வதால், முழுமையான நோய் எதிர்ப்பு சக்தி பெற முடியும்.

சந்தேகங்களும் வதந்தியும்!

கொ
ரோனாத் தடுப்பூசிகள் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரவுகின்றன. ‘இந்தத் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் ஆண்மைக்குறைவு ஏற்படும். பக்க விளைவுகள் அதிகம் இருக்கும்’ எனவும் தகவல்கள் பரவுகின்றன. மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர் வி.ஜி. சோமானி இதை ‘வெறும் வதந்தி’ என மறுத்திருக்கிறார். ‘`எந்தவொரு தடுப்பூசியைப் போட்டாலும் சிலருக்குக் காய்ச்சல், உடல்வலி, ஒவ்வாமை ஏற்படுவது வழக்கம். அதனால் யாரும் பயப்படத் தேவையில்லை’’ என்கிறார் அவர்.

எந்த ஒரு தடுப்பூசியும் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்பாக மூன்று கட்டங்களாகப் பரிசோதனை செய்து அதன் முடிவுகளுக்குப் பின்னரே பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். ஆனால், தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின், ஆக்ஸ்போர்டு தயாரிப்பான கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளின் மூன்றாம் கட்டப் பரிசோதனை முடிவுகள் பொதுத்தளத்தில் வெளியிடப்படாமல் இருப்பது பற்றி மருத்துவ நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

குறிப்பாக பாரத் பயோடெக் விஷயத்தில் தேவையற்ற அவசரம் காண்பிக்கப்படுவதாகவும் குரல்கள் எழுகின்றன. இதன் செயல்திறன் குறித்தும் இதுவரை தீர்மானமாகத் தகவல்கள் வெளியாகவில்லை. இந்நிலையில், ‘`ஆக்ஸ்போர்டு தடுப்பூசி போதுமான அளவு கிடைக்காத சூழலில் மட்டுமே இதை அவசரத் தேவைக்குப் பயன்படுத்துவோம்’’ என மத்திய அரசு சொல்வது இன்னும் குழப்பத்தை அதிகப்படுத்தியுள்ளது.

ஆனால், ``சுமார் 23 ஆயிரம் பேரிடம் இந்தத் தடுப்பூசியை வைத்து மூன்றாம் கட்டப் பரிசோதனை நடத்தப்பட்டது. தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருவதற்குள் இந்தத் தகவல்கள் வெளியாகும். இப்போது வேகமாகப் பரவிவரும், உருமாறிய கொரோனா வைரஸுக்கு எதிராக இது நன்கு செயல்படும்’’ என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தலைவர் பல்ராம் பார்கவா நம்பிக்கை தெரிவிக்கிறார்.

மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன், ‘`தடுப்பூசிகள் குறித்து பொதுமக்களுக்கு அச்சமும் சந்தேகமும் ஏற்படத் தேவையில்லை. உள்நாட்டு விஞ்ஞானிகளின் சாதனையைப் பாராட்ட வேண்டுமே தவிர அவர்கள்மீது அவநம்பிக்கை கொள்ளக் கூடாது’’ என்கிறார்.

மார்ச்சில் மக்களுக்குக் கிடைக்கும்!

சீ
ரம் இன்ஸ்டிட்யூட் தயாரிப்பான கோவிஷீல்டு தடுப்பூசியே இந்தியர்களின் முக்கியமான நம்பிக்கையாக இருக்கிறது. முதலில் அரசுக்குப் பெருமளவு தடுப்பூசிகளைக் கொடுத்துவிட்டு, பிறகு தனியாருக்கும் தர உள்ளது சீரம் நிறுவனம். ‘’மார்ச் மாதத்தில் தனியார் மருத்துவமனைகளுக்குத் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்படும். அரசுக்கு முதல் கட்டத்தில் தருவதை ஒரு டோஸ் 200 ரூபாய் என்ற விலையில் தருகிறோம். தனியாருக்குத் தரும்போது, ஒரு டோஸ் ஆயிரம் ரூபாய் வரை விலை வைக்கப்படலாம்’’ என்கிறார், சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆதர் பூனாவாலா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு