Published:Updated:

`ஆமாங்க, பெட் கிடைக்கிறதுல சிரமம் இருக்குதான்' விகடன் வாசகர்களின் நேரடி அனுபவங்கள் #MyHospitalStory

கொரோனா சிகிச்சைப் பிரிவு (கோப்புப் படம்)
கொரோனா சிகிச்சைப் பிரிவு (கோப்புப் படம்)

கொரோனா அல்லது அதுதொடர்பான பிரச்னைகளுக்காக மருத்துவமனை சென்று, அங்கு படுக்கை வசதிகள் கிடைக்காமல் சிரமத்தை எதிர்கொண்டுள்ளீர்களா என வாசகர்களிடம் கேட்டிருந்தோம். அதற்கு அவர்கள் அளித்த பதில்கள் இங்கே...

``கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனை சென்ற என் நண்பருக்கு படுக்கை" கிடைக்கவில்லை என நடிகர் வரதராஜன் வெளியிட்ட வீடியோ பெரும் பரபரப்பைக் கிளப்பி அடங்கியிருக்கிறது. அந்த வீடியோவைத் தொடர்ந்து அரசை நோக்கி எழுந்த கேள்விகளும், வரதராஜன் மீது அரசு எடுத்த நடவடிக்கைகளும் மக்கள் மத்தியில் அச்சத்தை விதைத்தன. ``தனியார் அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இருக்கின்றன; அந்த விவரங்களை இனி நாங்களே இணையதளம் மூலமாக வெளியிடுகிறோம்" என அமைச்சரே சொன்னபிறகும்கூட, பலரும் இந்தப் பிரச்னை குறித்து தொடர்ந்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர். இதைத்தொடர்ந்து இந்த விஷயத்தில் விகடன் வாசகர்களின் கருத்து என்ன, இதுபோன்ற பிரச்னைகளை நேரடியாக சந்தித்திருக்கிறார்களா என்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினோம். இதற்காக விகடன் இணையதளத்திலேயே ஒரு படிவத்தை அளித்து, நேரடி அனுபவங்கள் இருப்பின் அவற்றை எங்களுடன் பகிர்ந்துகொள்ளச் சொல்லியிருந்தோம். அதன்படி உங்களில் பலரும் அனுபவங்களை அதில் பதிவுசெய்திருந்தீர்கள்.

அவற்றில் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான அனுபவங்களைக் குறிப்பிட்டிருந்தீர்கள். அவற்றில் தற்போதைய கள நிலவரத்தை பிரதிபலிக்கும் மற்றும் விரிவான பதில்களில் சிலவற்றை மட்டும் இங்கே பிரசுரிக்கிறோம். `களத்தின் உண்மை நிலையை பொதுவில் வைப்போம்!' என்றுதான் அந்த சர்வேயில் குறிப்பிட்டிருந்தோம். அதன்படி உங்களில் சிலரின் பதில்களை அப்படியே இங்கே தொகுத்திருக்கிறோம்.

பெட் கிடைக்கிறதுல சிரமம் இருக்கு

1. அரசு மருத்துவமனைலயோ, தனியார் மருத்துவமனைலயோ பெட் கிடைக்கிறதுல சிரமம் இருக்கு. சொல்லப்போனா கிடைக்கவே மாட்டேங்குது. ஒருவேளை தனியார் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகணும்னா யாராச்சும் வி.ஐ.பியோட ரெகமண்டேஷன் இருந்தாதான் நடக்குது. ஆன்லைன்ல பெட் எல்லாம் இருக்கிறதாதான் கவர்மென்ட் சொல்லுது. ஆனா, நேர்ல பெட் கிடைக்கிறது அவ்வளவு சுலபமா இல்லயே... இதெல்லாம் நானே போன வாரம் அனுபவப்பட்டது.

2. சுகர் பிரச்னை இருந்ததால என்னோட மாமாவை ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போனேன். அவருக்கு அங்க கொரோனா டெஸ்ட் எடுத்தாங்க. 2 நாள் கழிச்சு வந்த ரிசல்ட்ல, அவருக்கு பாசிட்டிவ். அடுத்த 2 மணி நேரத்துல கார்ப்பரேஷன்ல இருந்து அவர் வீட்டுக்கு ஆட்கள் வந்தாங்க. அவரோட பில்டிங் மொத்தத்தையும் கிருமிநாசினி தெளிச்சு க்ளீன் பண்ணாங்க. அங்க இருந்த எல்லாரையும் துணியெல்லாம் எடுத்துக்கிட்டு ரெடியாகச் சொன்னாங்க. அன்னைக்கு சாயங்காலமே அவங்க எல்லாரையும் வேளச்சேரி குருநானக் ஸ்கூலுக்கு க்வாரன்டீன் பண்றதுக்காகக் கூட்டிட்டுப் போயிட்டாங்க. அங்க எல்லாருக்குமே பெட் இருந்தது. என்னோட மாமாவை ஓமந்தூரார் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போய் டெஸ்ட்டெல்லாம் பண்ணாங்க. பெருசா பிரச்னை ஏதும் இல்லைனு தெரிஞ்சதும், அவரை கிண்டில இருந்த சிகிச்சை மையத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போனாங்க. ஆனா, வேளச்சேரிக்கு க்வாரன்டீன் பண்றதுக்காகக் கூட்டிகிட்டுப் போன யாரையுமே டெஸ்ட் பண்ணல. அதுக்கப்புறம் 2 நாள் கழிச்சுதான் என் அத்தையையும் தம்பியையும் டெஸ்ட் பண்ணாங்க. அவங்க 2 பேருக்கும் பாசிட்டிவ். மாமாவுக்குப் பண்ண மாதிரியே ஆஸ்பத்திரிக்குக் கூட்டிகிட்டுப் போய் டெஸ்ட் பண்ணிட்டு கிண்டில சிகிச்சைக்காக விட்டுட்டாங்க. வேளச்சேரில க்வாரன்டீன்ல இருந்தவங்க 10 நாள் கழிச்சு வீட்டுக்கு வந்துட்டாங்க. என் மாமாவும் 8 நாள்ல நெகட்டிவ் வந்து திரும்ப வந்துட்டார். அத்தையும் தம்பியும் இன்னும் கிண்டி சென்டர்ல இருக்காங்க. எங்களுக்கு பெட் பிரச்னையெல்லாம் இல்ல.

பெட் இல்ல!

3. ஆமாம், பெட் கிடைக்கிறதுல பிரச்னை இருக்குதான். என்னோட பக்கத்து வீட்டுக்காரர் பாசிட்டிவ் வந்து சிகிச்சைக்காகப் போனார். அவரை ஒரு வாரம் கழிச்சு பெட் இல்லைனு வீட்டுக்கு அனுப்பிட்டாங்க.

4. ஆமாம், பெட் கிடைக்காம திண்டாடினேன். எந்த பிரைவேட் ஹாஸ்பிட்டலும் என் மாமனாரை அட்மிட் பண்ண ஒத்துக்கலை (கொரோனா தொற்று இல்லை). கடைசியா அரசு மருத்துவமனையிலதான் அவரை சேர்க்க முடிஞ்சது. அங்க அவருக்கு என்ன சிகிச்சை கொடுத்தாங்கன்ற விவரம்கூட எங்களுக்கு ஷேர் பண்ணல. கடைசியா அவர் இறந்துட்டார். இறந்து ஒருநாள் கழிச்சுதான் அவர் உடலையே எங்களுக்கு கொடுத்தாங்க. கேஸ் ஷீட் மிஸ் ஆனதாலதான் லேட்னு காரணமும் சொன்னாங்க.

Covid 19 Testing (File Pic)
Covid 19 Testing (File Pic)

5. என் நண்பரோட அம்மாவுக்கு திடீர்னு மூச்சு விடுறதுல பிரச்னை. அவங்களுக்கு வயசு 50-க்கு மேல. நிறைய பிரைவேட் ஹாஸ்பிட்டல்ல கேட்டுட்டோம். யாரும் பெட் கொடுக்கத் தயாரா இல்லை. நைட் 10 மணில இருந்து காலைல 4 மணி வரைக்கும் முயற்சி பண்ணோம். ஆனா, ஒண்ணும் நடக்கலை. அப்புறம் ஸ்டான்லி ஹாஸ்பிட்டல் கூட்டிட்டுப் போனோம். அங்கேயும் உடனேயெல்லாம் இடம் கிடைக்கலை. ரெகமண்டேஷன்லாம் பண்ணிதான் கிடைச்சது. இது எனக்குனு இல்ல. எல்லார்க்குமே இப்படிதான் நடக்குது. நீங்களே ஸ்டான்லிக்கு போய் வேணா பாருங்க.

6. சென்னை ஸ்டான்லி ஹாஸ்பிட்டல்ல சரியான சிகிச்சையோ, படுக்கை வசதியோ இல்லாததால, என்னோட பக்கத்து வீட்டுக்காரர் இறந்தே போயிட்டாரு.

7. ஆமாம். என்னோட தங்கச்சிக்கே பெட் இல்லாம சிரமப்பட்டோம்.

அடுத்த கட்டுரைக்கு