Published:Updated:

ஆந்திரா: `சாணியடித் திருவிழா... காற்றில் பறந்த சமூக இடைவெளி!’ - புலம்பும் சுகாதாரத்துறை

சாணியடி வழிபாடு
சாணியடி வழிபாடு

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் தெலுங்குப் புத்தாண்டான யுகாதியை  முன்னிட்டு  கிராம மக்கள்  ஒருவர் மீது ஒருவர் பசும் சாணத்தால் செய்யப்பட்ட வறட்டிகளை அடித்துக்கொண்டு விநோத வழிபாடு நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டுவருகிறது.

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், கயிறுபள்ள கிராமத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்துவருகின்றனர். கிராமத்தின் பிரதான தெய்வமாக இங்குள்ள மக்கள் வீரபத்திரசாமியை வணங்கிவருகின்றனர். புராணத்தில் கயிறுபள்ள கிராமத்தில்தான் வீரபத்திர சாமி பத்திரகாளியைத் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

தாழ்த்தப்பட்ட குலப் பெண்ணான பத்திரகாளியின் மீது வீரபத்திரருக்குக் காதல் மலர்ந்ததாகவும், தங்கள் சமூகத்தைச் சேர்ந்த வீரபத்திரர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை விரும்பியதை ஏற்றுக்கொள்ள முடியாத அவரது தரப்பினர் பஞ்சாயத்தைக் கூட்டி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது. பத்திரகாளியின் சமூகத்தைச் சேர்ந்த மக்கள், தங்கள் சமூகத்தைத் தாழ்த்தி இழிவாகப் பேசியதால் வீரபத்திரர் சமூக மக்களை எதிர்த்துள்ளனர். அதன் காரணமாக இரு சமூகத்தினருக்கும் இடையே பெரிய அளவில் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது.

அப்போது கிராம மக்கள் இருதரப்பினராகப் பிரிந்து ஊர் முற்றத்தில் நின்று பசுவின் சாணியைக்கொண்டு தயாரிக்கப்பட்ட வறட்டிகளை எடுத்து ஒருவர் மீது ஒருவர் தாக்கிக்கொண்டனராம். நெடு நீளச் சண்டைக்குப் பிறகு, சமரசமான கிராம மக்கள், சாதிய வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமையுடன் வீரபத்திரசாமிக்கும் பத்திரகாளிக்கும் ஊர்கூடி விமரிசையாகத் திருமணம் நடத்திவைத்தார்களாம்.

வீரபத்திரர் - பத்திரகாளி
வீரபத்திரர் - பத்திரகாளி

தெலுங்குப் புத்தாண்டான யுகாதிக்கு மறுநாள் நடைபெற்ற 'வீரபத்திரர் - பத்திரகாளி' திருமணத்தை நினைவுகூரும் வகையில் கயிறுபள்ள கிராம மக்கள் பல நூற்றாண்டுகளாக 'சாணியடித் திருவிழா'-வை நடத்திவருகின்றனர்.

அந்த வகையில், இந்த ஆண்டு கொரோனா பரவலுக்கு மத்தியிலும் திருவிழாவை வெகு விமரிசையாக நடத்தத் திட்டமிட்ட ஊர் மக்கள், காவல்துறையினரிடம் அனுமதி கேட்டிருக்கின்றனர். காவல்துறையினர் ஆந்திராவில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் அதிக அளவில் மக்கள் கூடி திருவிழாக்கள் நடத்தக் கூடாது என்று கூறி, அனுமதி மறுத்திருக்கின்றனர். காவல்துறையினர் அனுமதி அளிக்காததைக் கண்டித்து கிராம மக்கள் ஒன்றுகூடிப் போராட்டம் நடத்தியதால், கர்னூல் மாவட்ட நிர்வாகம் கடும் கட்டுப்பாடுகளுடன் விழாவை நடத்த அனுமதி அளித்திருக்கிறது.

அதையடுத்து, யுகாதிப் பண்டிகையின் மறுநாளான நேற்று முன்தினம் (14-04-2021) கிராம மக்கள் இரு தரப்புகளாகப் பிரிந்து தங்கள் இல்லங்களிலிருந்து தயார்செய்து எடுத்துவந்த பசுவின் சாணத்தால் ஒருவரை ஒருவர் ஊர் முற்றத்தில்வைத்து சரமாரியாகத் தாக்கிக்கொண்டனர். சுமார் அரை மணி நேரம் நடந்த சாணியடி நிகழ்வைத் தொடர்ந்து பஞ்சாயத்து நடத்தி சமரசம் அடைந்தார்கள்.

அதன் பிறகு அனைவரும் குளித்து, புத்தாடைகளை அணிந்துகொண்டு கிராமத்தின் பல பகுதிகளிலிருந்து கழுதைகளில் ஊர்வலமாக பூ, பழம், புத்தாடைகள், பட்சணங்கள் உள்ளிட்ட பொருள்களைச் சீராகக் கொண்டுவந்து சவுதேஸ்வரி கோயிலை அடைந்தனர். சவுதேஸ்வரி கோயிலில் பூசாரிகள் ஊர்மக்களின் சீரைப் பெற்றுக்கொண்டு யாக பூஜைகள் நடத்தினர். மந்திரங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க வீரபத்திரருக்கும், இறைவி பத்திரகாளிக்கும் திருமணம் நடைபெற்றது. இந்தக் கல்யாண வைபவத்தைக் காண பல்வேறு கிராமங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கானோர் சவுதேஸ்வரி கோயிலில் திரண்டனர்.

ஆந்திரா: விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட தென்னிந்தியாவின் மிக பழைமையான விநாயகர் சிலை!

கயிறுபள்ள கிராம மக்கள் நடத்திய விநோத சாணியடி வழிபாடு வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகப் பகிரப்பட்டுவருகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட சாணியடி நிகழ்வில் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துவிட்டதாக கர்னூல் போலீஸார் தெரிவிக்கின்றனர். கூட்டத்தில் முண்டியடித்துக்கொண்டு சாணம் வீசி சண்டையிட்டுக்கொண்டவர்களில் ஒருவர்கூட முகக் கவசம் அணியவில்லை என்பதுதான் தங்களுக்கு மிகுந்த அச்சத்தை அளிப்பதாகவும், திருவிழாவில் கிராம மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டதாகவும் கர்னூல் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் புலம்பிவருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு