Published:Updated:

பள்ளிவாசல் முதல் சலூன் கடை வரை... 2 வயது குழந்தையின் சிகிச்சைக்கு நிதி திரட்ட களமிறங்கிய கிராமம்!

சிகிச்சை ( Photo by National Cancer Institute on Unsplash )

மொபைல் கடைக்காரர்கள், ஓட்டல் உரிமையாளர்கள், முடிதிருத்தும் கடைகள், ஜவுளிக்கடை உரிமையாளர்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கடை உரிமையாளர்கள் தங்கள் ஒரு நாள் வருமானத்தை ஈவானின் சிகிச்சைக்காக வழங்கினர்.

பள்ளிவாசல் முதல் சலூன் கடை வரை... 2 வயது குழந்தையின் சிகிச்சைக்கு நிதி திரட்ட களமிறங்கிய கிராமம்!

மொபைல் கடைக்காரர்கள், ஓட்டல் உரிமையாளர்கள், முடிதிருத்தும் கடைகள், ஜவுளிக்கடை உரிமையாளர்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கடை உரிமையாளர்கள் தங்கள் ஒரு நாள் வருமானத்தை ஈவானின் சிகிச்சைக்காக வழங்கினர்.

Published:Updated:
சிகிச்சை ( Photo by National Cancer Institute on Unsplash )

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்திலுள்ள பாலேரி என்ற கிராமத்தைச் சேர்ந்த இரண்டு வயது சிறுவன் முகமது இவானின் மருத்துவ சிகிச்சைக்கான நிதியைத் திரட்ட அந்த கிராமமே களமிறங்கியுள்ளது. தசை பலவீனம் மற்றும் தசை இழப்பை ஏற்படுத்தும் Spinal Muscular Atrophy எனும் மரபணு குறைபாடு இவானை பாதித்துள்ளது. இந்த அரிய வகை குறைபாட்டால் பாதிக்கப்பட்ட இவானுக்கு மரபணுவில் சில மாற்றங்களைச் செய்யும் ஜீன் தெரபி (Gene Therapy) எனும் சிகிச்சை தேவைப்படுகிறது.

மரபணு
மரபணு

உலகின் விலை உயர்ந்த சிகிச்சைகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த சிகிச்சைக்கு நரம்பில் குறிப்பிட்ட மருந்தைச் செலுத்த வேண்டும். அந்த மருந்தின் விலை இந்திய மதிப்பில் 18 கோடி ரூபாய். இந்தச் சிகிச்சையை இரண்டு வயது நிறைவடைவதற்குள் மேற்கொண்டால் மட்டும் பயனளிக்கும் என்று மருத்துவர்கள் சொன்ன செய்தி, இவானின் பெற்றோருக்கு பேரதிர்ச்சியாய் இருந்தது. முதற்கட்டமாக 9.5 கோடி ரூபாய் செலுத்த வேண்டும். மீதித்தொகையை இரண்டு ஆண்டுகளுக்குள் செலுத்த வேண்டும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பொருளாதாரத்தில் பின்தங்கிய பெற்றோருக்கு இந்தத் தொகையை செலுத்துவதற்கான சாத்தியங்கள் இல்லை. பணத்தைச் செலுத்துவதற்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில், இவானின் தந்தை நௌஃபல் தனது கிராமத்தின் உதவியை நாடினார். உடனடியாக மருத்துவ நிதிக் குழுவை உருவாக்கி, நிதி திரட்டுவதற்கான சாத்தியமான ஆதாரங்களையும் முறைகளையும் கண்டறிந்தனர். கல்வி நிலையங்கள், மத அமைப்புகள், வீடுகள், கடைகள், சமூக வலைதளம் என அனைத்து இடங்களிலும் நிதி திரட்டப்பட்டது. இதுபற்றிய செய்தியை பிரசாரம் செய்ய பல இடங்களில் கிராம சபைகள் கூட்டப்பட்டன.

நிதி திரட்டல்
நிதி திரட்டல்

இளைஞர்கள், அரசியல் கட்சி ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், மதத் தலைவர்கள் எனப் பலரும் இந்த முயற்சியில் கைகோத்தனர். பக்கத்து கிராமங்களும் முயற்சியில் பங்கெடுத்தன. கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள சுமார் 1,000 மசூதி குழுக்களுக்குச் சென்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு நிதி திரட்டுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களின் மேம்பாட்டுக்கு பணியாற்றும் குடும்பஸ்ரீ அமைப்பின் மூலம் ரூ. 96.61 லட்சம் நிதி திரட்டப்பட்டது. 200 பள்ளிகளிலிருந்து ஒரு கோடிக்கும் மேலாக நிதி கிடைத்தது. மாணவர்கள் தங்களின் சேமிப்புப் பணம், தங்க நகைகளையும் அளித்துள்ளனர். பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், ஐந்து இளம் பட்டதாரிகள் கொண்ட குழு திருவனந்தபுரம் வரை 510 கி.மீ தூரம் சைக்கிளிங் செய்து பயணம் முழுவதும், அவர்கள் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர்.

குட்டியாடி - கோழிக்கோடு வழித்தடத்தில் உள்ள பேருந்து நடத்துநர்கள் ஒருநாள் வருமானத்தை அளித்தனர். பயணிகளும் சிகிச்சைக்கு நன்கொடை அளித்தனர். ஒரே நாளில் ரூ.13 லட்சம் வசூலித்துள்ளனர். கால்நடைத் தோல் விற்கும் சுமார் 300 தன்னார்வலர்களும் ரூ.5.44 லட்சத்தை நன்கொடையாக வழங்கினர். ஆட்டோ ஓட்டுநர்கள் ஒருநாள் வருமானம் மட்டுமன்றி, பிரியாணி, பாயசம் விற்று அதில் கிடைக்கும் பணத்தையும் வழங்கினர். இதேபோல், மொபைல் கடைக்காரர்கள், ஓட்டல் உரிமையாளர்கள், முடிதிருத்தும் கடைகள், ஜவுளி கடை உரிமையாளர்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கடை உரிமையாளர்கள் தங்கள் ஒரு நாள் வருமானத்தை ஈவானின் சிகிச்சைக்காக வழங்கினர்.

பிரியாணி விற்பனை
பிரியாணி விற்பனை

கடியங்காட்டில் உள்ள புறவூரிடம் ஸ்ரீ பரதேவதா பகவதி கோவில் கமிட்டியினர் 1,000 பாரம்பர்ய (சத்யா) உணவுப் பொட்டலங்களைத் தயாரித்தனர். அருகில் உள்ள பள்ளிவாசல் கமிட்டி சமையல் பாத்திரங்களுக்கு நிதியுதவி செய்தது மற்றும் ஒளி மற்றும் ஒலி வாடகைக் கடையில் ஜெனரேட்டர்கள் இலவசமாக வழங்கப்பட்டது என ஒரு சாப்பாட்டுக்கு ரூ.50 வீதம் மக்களுக்கு விற்கப்பட்டது. மதங்களைக் கடந்து அனைவரையும் இணைத்தான் இவான்.

அரசியல் கட்சிகள், சேவைக் குழுக்கள் பிரியாணி, பாயாசம், பலாப்பழம் சிப்ஸ் விற்பனை உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தனர். தென்னந்தோப்புக்கு பெயர் பெற்ற குட்டியடி மற்றும் பெரம்பரா பகுதியில் தேங்காய்களை விற்று நிதி திரட்டப்பட்டது. மறுசுழற்சி தொழில்நிலையங்களும் முயற்சியில் இணைந்து கொண்டன. பழைய இரும்புத்தொழிலில் ஈடுபடும் இளைஞர்கள் சிலர், பழைய உலோகங்கள், துருப்பிடித்த இரும்புக் கம்பிகள், பழுதடைந்த இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை வீடுகள் மற்றும் கடைகளில் சேகரித்து விற்பனை செய்தனர்.

சைக்கிளிங்
சைக்கிளிங்

இன்னும் பல குழுக்கள் பழைய செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்களை சேகரித்து விற்றனர். பாலேரி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் வீட்டு விலங்குகள், வாழைக் குலைகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் நிதியை வழங்கினர். பல திருமண விழாக்கள் மற்றும் இல்லற நிகழ்ச்சிகளில் நன்கொடைப் பெட்டி மற்றும் Gpay QR குறியீடுகள் வைக்கப்பட்டன.

நிதி வசூல் செய்ய கேரள மக்கள் மட்டும் வரவில்லை. உத்தரப்பிரதேசத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் இயக்கப்படும் மூன்று முடிதிருத்தும் கடைகளில், அன்றைய அனைத்து வருமானங்களும் ஈவானுக்கு பங்களிக்கப்படும் என்று அறிவித்தனர். “இவான் தனது மாமாவுடன் முடி திருத்துவதற்காக என் கடைக்கு வந்தான். இவானின் மழலைப் பேச்சும், கள்ளங்கபடமற்ற புன்னகையும் என்னை வெகுவாகக் கவர்ந்தது.

Treatment (Representational Image)
Treatment (Representational Image)
Photo by Arseny Togulev on Unsplash

முடிதிருத்தும் கடைகளில் பணிபுரியும் எனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இவானின் நெருக்கடி குறித்துப் பேசி எங்களின் ஒருநாள் வருமானத்தை நன்கொடையாக வழங்கினோம். வட இந்தியவாக இருந்தாலும் , தென்னிந்தியாவாக இருந்தாலும் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற அனைவரும் தங்களால் ஆன உதவிகளைச் செய்ய வேண்டும்" என்று கூறியிருக்கிறார், அப்பகுதியில் சலூன் நடத்தும் வட இந்தியாவைச் சேர்ந்த 24 வயதான நதீம் அகமது.

இப்படி துளித்துளியாக அன்பு சேரும்போது, அது பேரன்பு சமுத்திரமாகாதா என்ன? இதுவரை பல்வேறு வகையில் ரூ. 8.5 கோடி திரட்டப்பட்டுள்ளது. இன்னும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

மனிதம் பரவட்டும்!