Published:Updated:

மூன்றாம் அலையிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்? - ஐ.ஐ.டி கான்பூர் ஆய்வு சொல்வது என்ன?

COVID-19 screening in Mumbai
COVID-19 screening in Mumbai ( AP Photo/Rajanish kakade )

செப்டம்பரில் நாளொன்றுக்கு 5 லட்சம் பேர் வரை கோவிட் தொற்றுக்கு பாதிக்கப்படும் அளவுக்கு நிலைமை மோசமடையும் என்றும் அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.

கோவிட் இரண்டாம் அலை இந்தியா முழுவதும் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. இரண்டாம் அலையின் வீரியம் தற்போது குறைந்து, நிலைமை ஓரளவுக்குச் சீரடைந்து கொண்டிருந்த நிலையில், மூன்றாம் அலை, செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் உச்சத்தைத் தொடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக என்று ஐ.ஐ.டி கான்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது. மேலும், செப்டம்பரில் நாளொன்றுக்கு 5 லட்சம் பேர் வரை கோவிட் தொற்றுக்கு பாதிக்கப்படும் அளவுக்கு நிலைமை மோசமடையும் என்றும் அந்த அறிக்கை எச்சரித்துள்ளது.

தடுப்பூசி மட்டுமே கொரோனாவை எதிர்கொள்வதில் மிகப்பெரிய ஆயுதமாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த ஆய்வில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வேலைகள் எதையும் கருத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

A doctor prepares to administer vaccine
A doctor prepares to administer vaccine
AP Photo/Rafiq Maqbool

எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள்-பாதிக்கப்பட்டவர்கள்-குணமடைந்தவர்கள் என்ற தொற்றுநோயியல் மாதிரியைப் பயன்படுத்தி, குறிப்பிட்ட கால வரையறைக்குள் எத்தனை மக்கள் பாதிக்கப்படலாம் என்ற கணிப்பை இந்த ஆய்வில் செய்துள்ளனர். கோவிட் இரண்டாம் அலையில் சேகரித்த தரவுகளைப் பயன்படுத்தி, ஐ.ஐ.டி கான்பூரைச் சேர்ந்த ராஜேஷ் ரஞ்சன், மஹேந்திரன் வர்மா ஆகிய பேராசிரியர்களின் தலைமையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், மூன்றாம் அலை வருவதற்கான மூன்று சூழ்நிலைகளைக் கண்டறிந்தனர்.

அதில் முதலாவது,

இந்தியா ஜூலை 15-ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு முற்றிலுமாகத் தளர்த்தப்பட்டால் விளைவுகள் எப்படியிருக்கும்?

எந்தக் கட்டுப்பாடுகளும் இன்றி முழுமையான தளர்வுகள் விதிக்கப்பட்டால், மூன்றாம் அலை அக்டோபர் மாதத்தில் உச்சத்தைத் தொடலாம். இருப்பினும் இதன் உச்சம் இரண்டாம் அலையின் வீரியத்தைவிட சற்றுக் குறைவாகவே இருக்கும். அந்த நேரத்தில் நாளொன்றுக்கு 3.2 லட்சம் பேர் என்ற விகிதத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இருக்கலாம்.

இரண்டாவதாக,

மேலும் அதிக வீரியமிக்க கொரோனா வேரியன்ட்டுகள் புதிதாக உருவாகும் சூழல் ஏற்பட்டு, அந்த நேரத்தில் ஊரடங்கு அமலில் இல்லாமல் இருந்தால் மூன்றாம் அலையின் பாதிப்பு எப்படி இருக்கலாம்?

COVID-19 vaccine
COVID-19 vaccine
AP Photo/Anupam Nath

இந்தக் கணிப்பு உண்மையானால், இரண்டாம் அலையில் இருந்ததைவிடவும் அதிகளவிலான பாதிப்புகளை செப்டம்பர் மாதத் தொடக்கத்திலேயே எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்தச் சூழலில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிகவும் மோசமான அளவுக்கு இருக்குமென்று இந்த அறிக்கை சொல்கிறது. அதன்படி, நாளொன்றுக்கு 5 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்று ஐ.ஐ.டி கான்பூர் ஆய்வாளர்களின் கணிப்பு குறிப்பிடுகிறது.

மூன்றாவது சூழ்நிலையில், தொடர்ந்து கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து நோய்ப் பரவலைக் கட்டுக்குள்ளேயே வைத்திருக்க முயன்றால், மூன்றாம் அலையின் வீரியம் அக்டோபர் இறுதி வரை தவிர்க்கப்படலாம்.

அதுமட்டுமன்றி, இரண்டாம் அலையில் ஏற்பட்ட பாதிப்புகளைவிட மூன்றாம் அலையில் இதன் மூலம் பாதிப்புகளை, நாளொன்றுக்கு உச்சபட்சமாகவே 2 லட்சத்துக்கும் குறைவான நோய்த்தாக்குதலோடு பெருமளவில் குறைத்துவிட முடியும். அதாவது, அதிகபட்ச பாதிப்பே 2 லட்சம் என்ற விகிதத்தில்தான் இருக்கும் என்று இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

ஆனால், இந்த மூன்று கணிப்புகளையும் முதல் அலையின் பாதிப்புகளோடு ஒப்பிட்டால், அதைவிட அதிகமாகவே இருப்பதாகவும் கூறுகிறது.

இந்த ஆய்வில் எடுத்துக்கொள்ளப்பட்ட அளவுகோல்களில் ஒன்று, நோய்த்தொற்றுக்கு பாதிக்கப்படும் மக்கள் தொகை விகிதம். அதற்கு, இந்த ஆய்வுக்குழு மொத்த மக்கள் தொகையையுமே சரிசமமாக நோய்த்தொற்றுக்கு பாதிக்கப்படும் அபாயம் உள்ளவர்கள் என்ற வகையில் கணக்கில் எடுத்துள்ளது. அதோடு, தடுப்பூசி போடுவதற்கான வேலைகள் நடந்துகொண்டிருப்பதை இந்த ஆய்வுக் கணக்கில் எடுத்துக்கொள்ளவே இல்லை.

vaccine camp
vaccine camp

மேலும், பாதிக்கப்படப்போகும் மக்கள் தொகையின் அளவில் இருக்கும் மாற்றங்களும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. உதாரணத்துக்கு, வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருவோர், பல்வேறு மாநிலங்களிலிருந்து இடம் பெயர்ந்து செல்வதன் மூலம் ஏற்படும் பரவல் போன்றவற்றால் தொற்றுப் பரவல் அதிகரிக்கலாம். ஆனால், அது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இந்த ஆய்வில் ஈடுபட்டவர்கள், ``தடுப்பூசி தொற்றுப் பரவலைத் தடுக்கலாம். இருப்பினும் இந்த முதல் கட்ட ஆய்வில் அதைக் கணக்கில் எடுக்கவில்லை. ஆகையால், நடைமுறையில் இந்தக் கணிப்புகளைவிட பாதிப்பு குறைவாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. கோவிட் தடுப்பூசி மற்றும் இன்னும் சில தரவுகளை உள்ளடக்கிய அடுத்தகட்ட ஆய்வு நடந்துகொண்டிருக்கிறது. அது இன்னும் தெளிவான பதில்களைக் கொடுக்கும்" என்று கூறியுள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய தொற்றுநோய் நிபுணர் மருத்துவர் சுரேஷ் குமார், ``மூன்றாம் அலை நிச்சயமாக வரும். எத்தனை பேருக்கு இதுவரை கோவிட் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது, எத்தனை பேருக்கு ஏற்படலாம், எத்தனை பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது, எத்தனை பேருக்கு இன்னும் போடவில்லை என்பதைப் பொறுத்தே மூன்றாம் அலையின் தாக்கம் இருக்கும்.

Covid 19 Outbreak
Covid 19 Outbreak
Covid Questions: அல்சர் உள்ளவர்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?

இரண்டாம் அலையில் முதல் அலையைவிடவே தாக்கம் அதிகமாகத்தான் இருந்தது. மூன்றாம் அலையில் அந்தளவுக்குத் தாக்கம் இருக்கக் கூடாது எனில், அதிகமான மக்களுக்கு, நம்மால் எவ்வளவு விரைவாகத் தடுப்பூசி போட முடியுமோ அவ்வளவு விரைவாகப் போட வேண்டும். தடுப்பூசி இரண்டு டோஸ்களையுமே போட்டுக்கொண்டால்தான் பாதுகாப்பு கிடைக்கும். அதில் இரண்டு டோஸ்களுக்கும் 12 முதல் 16 வாரங்கள் வரையில் இடைவெளி விடுவது சரியல்ல. ஒரு டோஸ் போட்டால் பாதுகாப்பு கிடையாது என்பது உறுதியாகிவிட்டது.

ஒரு டோஸ் போட்டவர்களுக்கு கொரோனா பாதிக்கப்பட்டால், வென்டிலேட்டர், ஐ.சி.யு வரை செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளன. 8 முதல் 12 வாரங்களுக்கு உள்ளாகவே தடுப்பூசி போட வேண்டும் என்றுதான் ஆய்வுகள் சொல்கின்றன. அப்படியிருக்கையில், 12 வாரங்களுக்கும் மேலாகக் காத்திருப்பது ஆபத்தானது. ஃபைஸர், மாடர்னா தடுப்பூசிகளை 21 முதல் 28 நாள்களுக்குள் போடுவதால் நல்ல பலன் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாமும் கோவிஷீல்டு தடுப்பூசியை நான்கு வாரங்களுக்குள் போட வேண்டும். அதோடு, கோவாக்சின் தடுப்பூசியை முற்றிலும் இலவசமாக வழங்க வேண்டும்.

People queue up for COVID-19 vaccine
People queue up for COVID-19 vaccine
AP Photo / Rafiq Maqbool
Covid Questions: ஆரோக்கியமான டயட்; வெளியேவும் செல்வதில்லை; நானும் தடுப்பூசி போடவேண்டுமா?

இதுபோக, ஊரடங்கைத் தளர்த்துவதில் சிக்கலில்லை, ஆனால், அதை அறிவியல்பூர்வமாகச் செய்ய வேண்டும். கோவிட் பரவலுக்கு நான்கு வழிகள் உள்ளன. அதில் முதன்மையாக, அடைந்திருக்கும் சூழலில் இருக்கும்போது அதன் பரவல் எளிதாகும். ஜன்னல், வென்டிலேட்டர் என்று எதுவுமில்லாமல் அடைந்திருக்கும் இடங்களில் அதிக மக்கள் இருந்தால் பரவல் எளிதாகிவிடும். அப்படிப்பட்ட இடங்களில் அதிகம் பேர் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அப்படி இருப்பவர்களும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும்" என்று கூறினார்.

இரண்டாம் அலையிலிருந்து இப்போது மீண்டு கொண்டிருக்கிறோம். அதற்குள்ளாக மூன்றாம் அலையின் வீரியத்தைப் பற்றிப் பேசுவது அவசியமா என்ற கேள்வி எழலாம். பல இழப்புகளுக்குப் பிறகு, ஒரு வழியாக மீண்டு வரத் தொடங்கியுள்ளோம். ஆனால், நாம் பார்க்கத் தவறினாலும், மூன்றாம் அலை நிச்சயம் வரும். ஆகையால் உள்ள நிலைமையைப் புரிந்து எச்சரிக்கையோடு செயல்பட்டு, அதன் பாதிப்புகளைத் தவிர்க்க முயல்வோம்.

அடுத்த கட்டுரைக்கு