அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த பயணத் திட்டத்தின்படி நேற்று அவர் சிங்கப்பூலிரிலிருந்து வியட்நாம் செல்வதாக இருந்தது. ஆனால் அவர் செல்லவிருந்த வியட்நாம் தலைநகரான ஹனோய் நகருக்கு `ஹவானா சிண்ட்ரோம்' அறிகுறிகளுடன் ஒருவர் வந்ததாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து அவருடைய பயணம் மூன்று மணி நேரம் தாமதமானது.

போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்ட பிறகு திட்டமிட்டபடி அவர் பயணம் மேற்கொண்டார் என வியட்நாமிலுள்ள அமெரிக்க தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. `ஹவானா சிண்ட்ரோம்' என்பது உயிர்கொல்லி நோயோ, ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும் தொற்றுநோயோ இல்லாத நிலையில் எதற்காக கமலா ஹாரிஸின் பயணம் தாமதமானது என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅதென்ன `ஹவானா சிண்ட்ரோம்'?
கியூபா நாட்டின் மிகப்பெரிய நகரம் மற்றும் அந்நாட்டின் தலைநகர்தான் ஹவானா. 2016-ம் ஆண்டு கியூபாவின் ஹவானா நகரில் தங்கியிருந்த அமெரிக்க அதிகாரிகள் அனைவரும் தொடர்ந்து உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டுக்கொண்டே வந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் அறைகள், வீடுகளில் விநோதமான சத்தங்களும், உடலில் வித்தியாசமான உணர்வுகளும் (Sensation) ஏற்படுவதாகத் தெரிவித்தனர்.

மேலும் வாந்தி வருவது போன்ற உணர்வு, அதீத தலைவலி, சோர்வு, தூக்கப் பிரச்னைகள், கேட்கும் திறன் பாதிப்பு போன்றவை ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். அதனால் இந்த விநோதமான உடல்நலக் குறைபாட்டுக்கு `ஹவானா சிண்ட்ரோம்' என்ற பெயரே வந்தது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அந்த சமயத்தில் 200-க்கும் மேற்பட்ட அமெரிக்க அதிகாரிகள் இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டனர். அமெரிக்க அதிகாரிகள் மட்டுமன்றி, ஹவானாவில் வசித்த கனட நாட்டினருக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டது. கியூபா மட்டுமன்றி பல நாடுகளில் பணியாற்றும் அமெரிக்க அதிகாரிகளிடம் மட்டும் இந்தப் பிரச்னை ஏற்பட்டது. இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் அறிகுறிகளிலிருந்து மீண்டு குணமாகினர். ஆனால் சிலரால் தொடர்ந்து தங்கள் பணிகளுக்குத் திரும்ப முடியாத அளவுக்கு பாதிப்பு தொடர்ந்தது.

கியூபா அரசோ இந்தப் பிரச்னை பற்றி தங்களுக்கு எந்தத் தகவலும் தெரியாது என்று மறுத்தது. தங்கள் நாட்டு அதிகாரிகளுக்குத் தொந்தரவு கொடுக்கும் வகையில் இந்தப் பிரச்னை வேண்டுமென்றே உருவாக்கப்பட்டிருக்கலாம் என அமெரிக்கா கருதியது. சில ஆண்டுகளாக தொடர்ந்து அமெரிக்காவின் ராணுவம், மருத்துவத் துறை எனப் பல்வேறு துறை சார்ந்தவர்கள் விசாரணை நடத்தினர். விசாரணை நடத்திய சிலரின் ஆய்வு முடிவில் வெளிநாட்டுச் சூழலில் அதிக மனஅழுத்தத்துடன் வேலை பார்த்ததால் ஏற்பட்ட உளவியல் சார்ந்த உடல்நலக் குறைவு என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து 2020-ம் ஆண்டு அங்கு ஆய்வு மேற்கொண்ட அமெரிக்க தேசிய அறிவியல் அகடமி, ``இயற்கையாக இது ஏற்படவில்லை. திட்டமிடப்பட்ட ஆற்றல் மூலம் ஏற்பட்ட ரேடியோ அதிர்வெண்தான், ஹவானா சிண்ட்ரோம் பிரச்னைக்கான நம்பத்தகுந்த காரணம்" என்று தெரிவித்தது. மேலும் செல்போன் பயன்பாடு போன்ற பொதுவான காரணங்களாலும் இந்த ஆற்றல் ஏற்படவில்லை.
காரணம், இந்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்திய ஆய்வில் அவர்கள் தங்கியிருந்த இடத்தில் அல்லது அறையில் குறிப்பிட்ட திசையிலிருந்துதான் அந்த விநோதமான சத்தம் வந்துள்ளது. மேலும் இந்தப் பிரச்னைக்கான பிற காரணங்களையும் ஒட்டுமொத்தமாக புறம்தள்ளிவிட முடியாது என்று தெரிவித்துள்ளது.

அதோடு நிறுத்தாமல், எதிர்காலத்தில் இதுபோன்ற புதிய பிரச்னைகள் ஏற்படலாம். அவ்வாறு ஏற்படும் பிரச்னைகளை உடனுக்குடன் கண்டறிவதும் கடினமாக இருக்கலாம். எனவே, புதிய மற்றும் தெரியாத அச்சுறுத்தல்கள் வெளிநாடுகளில் பணியாற்றும் அமெரிக்க அதிகாரிகளின் உடல்நலம் மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதைத் தடுக்க அமெரிக்க அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
இப்போது புரிந்ததா அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் வியட்நாம் பயணத்தைத் தாமதித்ததற்கான காரணம்.
அன்பான வாசகரே, விகடன் குறித்து உங்களுக்கு எந்தளவுக்குத் தெரியும்னு தெரிஞ்சுக்க சின்னதா ஒரு கேம் விளையாடலாமா? இந்த Quiz-ஐ attend பண்ணுங்க! https://www.vikatan.com/foundersday-web#