Published:Updated:

`20 லட்சம்பேருக்கு வீட்டிலேயே சிகிச்சை; தமிழக அரசின் `மக்களைத் தேடி மருத்துவம்' செய்யப்போவது என்ன?

அமைச்சர் மா.சுப்ரமணியன்
அமைச்சர் மா.சுப்ரமணியன்

``தமிழகம் முழுக்க இப்படி வீடு தேடிச் சென்று மருந்து, மாத்திரைகள் தருவதன் மூலமாக இந்த மரண எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்க முடியும் என்று நம்புகிறோம்.''

`மக்களைத்தேடி மருத்துவம்' என்கிற சிறப்பான திட்டத்தை தமிழக அரசு ஆரம்பித்திருப்பது அனைவரும் அறிந்ததே. தொற்றா நோய்களான நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் வீடு தேடிச் சென்று, அவர்களுக்கு மாதம்தோறும் மருந்து, மாத்திரைகள் தரவிருப்பதாகத் தமிழக அரசு அறிவித்திருப்பதையொட்டி, மேலதிக தகவல்களைத் தெரிந்துகொள்ள, `மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்' மா.சுப்ரமணியனிடம் பேசினோம்.

Pressure Check
Pressure Check
Image by Steve Buissinne from Pixabay
Covid Questions: கொரோனா குணமான பின் மாஸ்டர் ஹெல்த் செக்கப்; எத்தனை நாள்கள் கழித்து செய்துகொள்ளலாம்?

``தமிழ்நாடு முழுக்க தற்போது 20 லட்சம் பேர் அரசு மருத்துவமனைகளில் நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தத்துக்கான மருந்துகளை வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஊரடங்கு நேரத்தில் பொதுப் போக்குவரத்து முடங்கியிருந்ததால், இவர்களால் சுகாதார நிலையங்களுக்கோ, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கோ சென்று மருந்துகளை வாங்க முடியவில்லை. இதனால், இவர்களுடைய நீரிழிவும் ரத்த அழுத்தமும் கட்டுப்பாட்டில் இல்லாமல் போக, அதன் விளைவாக இரண்டு கொரோனா அலைகளிலுமே இறந்தவர்களில் 60 சதவிகிதம் பேர் நீரிழிவு, ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்கள்தாம்.

இந்நிலையில், மக்களின் பிரச்னையைத் தெரிந்துகொண்ட தமிழக அரசு, தற்போது அரசு மருத்துவமனைகளில் நீரிழிவுக்கும் ரத்த அழுத்தத்துக்கும் மருந்து வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற 20 லட்சம் பேரின் வீடு தேடிச் சென்று மருந்து, மாத்திரைகளைக் கொடுக்கவிருக்கிறோம். இதுதான் `மக்களைத்தேடி மருத்துவம்'. இந்த 20 லட்சம் பேரைத்தவிர, அரசு மருத்துவமனைகளுக்கும் வராத மலைவாழ் மக்கள், தனியார் மருத்துவமனைகளில் மருந்து வாங்கிச் சாப்பிடுகிற மக்களும் இருக்கிறார்கள். இவர்கள் கணக்கில் வராதவர்கள்.

Diabetes - Representational Image
Diabetes - Representational Image

கிராமம், நகரம் எனத் தமிழ்நாடு முழுக்க நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களை, வீடு தேடிச் சென்று கண்டறிந்து, அதில் அரசு மருத்துவமனையில் மருந்து சாப்பிட விருப்பப்படுகிற ஒரு கோடி பேரைத் தேர்ந்தெடுக்க விருக்கிறோம். இதற்கு, 6 மாத காலம் இலக்கு வைத்திருக்கிறோம். இதன் முதற்கட்டமாக, தற்போது அரசு மருத்துவமனையில் மருந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிற 20 லட்சம் பேருக்கு வீடு தேடிச் சென்று மருந்து வழங்கும் திட்டத்தைத் தமிழக முதல்வர் தொடங்கி வைக்கவிருக்கிறார்.

இது தவிர, முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு தேடிச் சென்று பிசியோதெரபி செய்யவிருக்கிறோம். சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறைகூட டயாலிசிஸ் தேவைப்படலாம். தனியார் மருத்துவமனைகள் என்றால் ஒவ்வொரு முறையும் செலவழிக்க வேண்டும். அல்லது அரசு மருத்துவமனை அல்லது லயன்ஸ் கிளப் என சிகிச்சைக்காகத் தேடி அலைய வேண்டி வரும். கிராமமோ, நகரமோ டயாலிசிஸ் செய்ய வேண்டியவர்களுக்கு போர்ட்டபிள் மெஷின் மூலமாக இலவச டயாலசிஸ் செய்யவிருக்கிறோம்.

Physiotherapy-  Representational Image
Physiotherapy- Representational Image
Image by andreas160578 from Pixabay
Covid Questions: கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுக்கு நீரிழிவு நோய் வரும் என்பது உண்மையா?

தமிழகத்தில் தொற்றா நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைபவர்கள் வருடத்துக்கு 5 லட்சம் பேர். தமிழகம் முழுக்க இப்படி வீடு தேடிச் சென்று மருந்து, மாத்திரைகள் தருவதன் மூலமாக இந்த மரண எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்க முடியும் என்று நம்புகிறோம். எல்லாவற்றுக்கும் மேல், தமிழ்நாட்டு மக்களின் தனியார் மருத்துவமனை மோகத்தைப் போக்கி, அனைவரையும் அரசு மருத்துவமனைக்கு வரவழைப்பதுதான் எங்கள் நோக்கம்'' என்கிறார் அமைச்சர் மா.சுப்ரமணியன்.

அடுத்த கட்டுரைக்கு