Published:Updated:

நொச்சி, தேங்காய் நார், யூகலிப்டஸ் இலை... கொசுக்களை விரட்ட எளிய வழிமுறைகள்!

Mosquito
Mosquito ( pixabay )

நொச்சி இலையைக் காய வைத்து அதை நெருப்பில் போட்டு எரித்து அதன் புகையை மாலை நேரத்தில் கதவு, ஜன்னல் பகுதிகளில் காட்டினால் கொசுக்கள் நுழைவதைத் தடுக்கலாம். தேங்காய் நாரைத் தீயிட்டுக் கொளுத்தினால் கொசுக்கள் அங்கிருந்து விலகிச்செல்லும்.

தென்மேற்குப் பருவமழை முடிவுக்கு வரவிருக்கிறது. அதுமட்டுமல்ல இன்னும் சில தினங்களில் வடகிழக்குப் பருவமழையும் தொடங்கிவிடும். மழைக்காலம் என்பதால் நிலத்தில் ஈரப்பதம் எப்போதும் காணப்படும். இதனால் செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்திருக்கிறது. ஏற்கெனவே நீர்நிலைகளில் தேங்கியிருக்கும் நீரில் உருவாகும் கொசுக்கள் இப்போது நெருக்கமாக வளர்ந்திருக்கும் தாவரங்களின் துணையோடு பல்கிப் பெருகுகின்றன. கொசுக்கள் வீட்டின் உள்ளே நுழைவதைத் தடுக்க ரசாயன மருந்துகள் பயன்படுத்துவதால் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுகின்றன என்பதால் மக்கள் அவற்றைப் பயன்படுத்த தயங்குகின்றனர். இயற்கை வழியில் கொசுக்களை விரட்டும் வழிகளை நாடிச் செல்கின்றனர்.

Edward Periyanayagam
Edward Periyanayagam

இயற்கை வழியில் கொசுக்களை எப்படி விரட்டுவது என்று இயற்கை மருத்துவர் எட்வர்டு பெரியநாயகத்திடம் கேட்டோம். எளிய வழிமுறைகளைக் கூறினார்.

Lemongrass
Lemongrass
pixabay

நொச்சி இலையைக் காய வைத்து அதை நெருப்பில் போட்டு எரித்து அதன் புகையை மாலை நேரத்தில் கதவு, ஜன்னல் பகுதிகளில் காட்டினால் கொசுக்கள் நுழைவதைத் தடுக்கலாம். தேங்காய் நாரைத் தீயிட்டுக் கொளுத்தினால் கொசுக்கள் அங்கிருந்து விலகிச்செல்லும். வேப்பிலையுடன் வைக்கோல் சேர்த்து எரியூட்டினால் அதிலிருந்து வெளிப்படும் புகையும் கொசுக்களை விரட்டும். மா இலை மற்றும் அதன் பூக்களை நெருப்பிலிட்டு அதன் புகையை வீடு முழுவதும் காட்டினால் கொசுக்கள் நெருங்காது. யூகலிப்டஸ் இலைகளையும் எரித்து அதன் புகையை வீட்டில் பரவவிடலாம்.

``தேங்காய் எண்ணெயை ஒரு கரண்டியில் ஊற்றி சூடாக்கி அதில் கற்பூரம் சேர்த்தால் கரைந்துவிடும். சூடு குறைந்ததும் அந்த எண்ணெயை கைகால் மற்றும் உடல் பகுதியில் தேய்த்தால் கொசுக்கள் நம்மை நெருங்காது. இதேபோல் கிராம்பு தைலம், `சிட்ரோனெல்லா' என்ற வாசனைப்புல் மற்றும் `லெமன்கிராஸ்' எண்ணெய்களில் ஏதாவதொன்றை எடுத்து அதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து கைகாலில் பூசினாலும் கொசுக்கள் நம்மை நெருங்காது.

Vitex
Vitex
pixabay

வேம்பு, துளசி, சிறியாநங்கை, நொச்சி, ஆடாதொடை, தும்பை ஆகிய இலைகளை வெயிலில் காய வைத்துப் பொடியாக்க வேண்டும். அதனுடன் சாம்பிராணி, குங்கிலியம் போன்றவற்றைக் கலந்து நெருப்புத்தணலில் போட்டு அதன் புகையை வீடு முழுவதும் காட்டலாம். இலைகளை இப்படி எரியூட்டுவதால் அதை சுவாசிக்கும்போது ஏதும் பிரச்னை வரும் என்று பயப்படத் தேவையில்லை. இவற்றின் புகை ஒவ்வொன்றுக்கும் சில மருத்துவ குணங்கள் இருக்கின்றன என்பதால் தாராளமாகப் பயன்படுத்தலாம்.

Frankincense
Frankincense
pixabay

சிலவகை செடிகளின் வாசனை கொசுக்களுக்குப் பிடிக்காது என்பதால் அவற்றை வளர்க்கலாம். புதினா, சாமந்தி, துளசி, லெமன்கிராஸ், ரோஸ்மேரி போன்ற செடிகளை வீட்டின் வாசல் பகுதியில் வளர்த்தால் கொசுக்கள் வீட்டின் உள்ளே நுழைவது குறையும். துளசி இலையை அரைத்து நீரில் கலந்து, அதனுடன் சிறிது யூகலிப்டஸ் தைலம் கலந்து வீட்டின் மூலையில் வைத்தால் கொசுக்களின் ஆதிக்கம் குறையும்.

Bottle
Bottle

ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை குறுக்காக வெட்டி அதில் பாதியளவு வெதுவெதுப்பான நீர் ஊற்றிக் கைப்பிடி அளவு சர்க்கரை சேர்த்து நன்றாகக் கலக்க வேண்டும். அந்தக் கரைசலில் ஒரு டீஸ்பூன் ஈஸ்ட் சேர்த்து வெட்டிய பாட்டிலின் மீதமுள்ள பகுதியை தலைகீழாக வைத்து சுற்றிலும் செல்லோ டேப் அல்லது வேறு ஏதாவது டேப்பைக் கொண்டு சுற்றி வீட்டின் மூலையில் வைக்க வேண்டும். அதிலிருந்து வெளிவரும் எத்தனால், கார்பன்டைஆக்ஸைடு வாயுக்கள் கொசுக்களை ஈர்த்து அந்தப் பாட்டிலில் விழ வைக்கும். தண்ணீரில் விழும் கொசுக்கள் உயிரிழக்கும். அந்த வாயுக்களின் நெடியே கொசுக்களை மயக்கமடையவோ மரணத்தை ஏற்படுத்தவோ செய்யும் தன்மை கொண்டது. இந்தக் கலவையை 15 நாள்களுக்கு ஒருமுறை தயாரித்துப் பயன்படுத்தலாம்'' என்றார்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு