Published:Updated:

பப்ஜி தடை: உங்கள் பிள்ளைகள் இப்போது Safe Zone-னிலா... மனநல நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

Children play PUBG on their mobile phones
Children play PUBG on their mobile phones ( AP Photo/ Mahesh Kumar A, File )

பப்ஜி தடையால் இனிமேல் சிறுவர்களும் இளைஞர்களும் தப்பித்துக்கொண்டனரா... அவர்களுக்கு இனிமேல் சிக்கல் கிடையாதா?

இந்திய - சீன எல்லைப் பிரச்னையை அடுத்து கடந்த ஜூன் மாதம் சீனாவைச் சேர்ந்த டிக்-டாக் உள்ளிட்ட 59 மொபைல் செயலிகளைத் தடை செய்தது இந்திய அரசு. அதன் தொடர்ச்சியாகத் தற்போது மேலும் 118 செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளன. கடந்தமுறை எப்படி 59 செயலிகளில் டிக்டாக் தடை அதிகம் பேசுபொருளானதோ அதேபோல இந்த முறை பப்ஜி தடை விவாதத்துக்குள்ளாகியிருக்கிறது.

பப்ஜிக்கு தடை என்று அறிவிப்பு வெளியானதும் பல இந்தியப் பெற்றோர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கொரோனா... பொருளாதாரப் பிரச்னையெல்லாம் கடந்தும் பப்ஜி தடைக்காக அவர்கள் அகமகிழ்ந்தார்கள். தேர்தலில் வென்ற அரசியல்வாதியைப்போல மீடியாக்களில் மகிழ்ச்சியுடன் பேட்டிகொடுத்தார்கள். `தங்கள் பிள்ளைகளைப் பிடித்திருந்த பேயை இந்திய அரசு ஓட்டிவிட்டது’ என்பதாகவே பிரதிபலித்தது அவர்களின் மனநிலை. சமூக ஆர்வலர்கள், ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் பப்ஜி தடையை வரவேற்றுள்ளனர்.

நாட்டின் பாதுகாப்புக் காரணங்களுக்காக ஒன்றல்ல, இரண்டல்ல... அண்மையில் 118 ஆப்கள் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால், பப்ஜி தடைக்கு மட்டும் ஏன் இவ்வளவு ஆரவாரமென்றால் காரணமில்லாமல் இல்லை. சமீபத்திய உதாரணமாகத் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுபடுத்தலாம். 9-ம் வகுப்பிலிருந்து 10-ம் வகுப்புக்குச் செல்லும் சிறுவன் தினேஷ்குமார் திடீரென ஒருநாள் தன் தாயின் சேலையில் தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டான். காரணம் பப்ஜி விளையாடுவதற்காக போன் கேட்டும் தன் பெற்றோர் வாங்கித்தரவில்லை என்பதுதான்.

ஊரடங்கு நாள்களில் தினேஷ்குமார் தன் நண்பர்களுடன் அதிக நேரம் செலவிட்டுள்ளார். அவர்கள் அனைவரும் எந்நேரமும் ஆக்ரோஷமாக மொபைலில் பப்ஜி விளையாடிக்கொண்டிருக்க, தினேஷ்குமாரால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்திருக்கிறது. கொஞ்ச நேரமாவது தனக்கு விளையாடத் தருமாறு நண்பர்களிடம் கேட்டிருக்கிறார். அதில் மூழ்கியிருப்பவர்கள் எப்படித் தருவார்கள்? நண்பர்கள் மறுத்துவிடவே மொபைல் போன் வாங்கித்தருமாறு பெற்றோரிடம் அடம்பிடித்திருக்கிறார். அன்றாட வாழ்வுக்கே அல்லாடும் நிலையில் உள்ள பெற்றோரால் நினைத்த மாத்திரத்தில் ஒரு போன் வாங்கித் தர முடியமா? பணம் இல்லை என்று அவர்கள் சொல்ல, மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார் தினேஷ்.

PUBG
PUBG

இதேபோல ஆந்திராவில் 16 வயதுச் சிறுவன் ஒருவன் பப்ஜிக்கு அடிமையாகி தண்ணீர்கூட அருந்தாமல் தொடர்ச்சியாக விளையாடியதால், அதீத வயிற்றுப்போக்கு மற்றும் பல உபாதைகள் ஏற்பட்டு இறந்துபோனார். ஃபுர்கானைச் சேர்ந்த 16 வயதுச் சிறுவன் தொடர்ச்சியாக 6 மணி நேரத்துக்கும் மேலாக ஆக்ரோஷத்துடன் பப்ஜி விளையாடியதால் `கார்டியாக் அரெஸ்ட்’ ஏற்பட்டு இறந்துபோனான். இப்படி எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம். ஆரம்பத்தில் கேம்தானே என்று தங்கள் பிள்ளைகளை பப்ஜி விளையாட அனுமதித்தவர்கள் நாளடைவில் தங்கள் பிள்ளைகளை அதிலிருந்து மீட்க வழிதெரியாமல் தத்தளித்தார்கள். அதனால்தான் பப்ஜி தடைக்கு இவ்வளவு வரவேற்பு. சரி, எத்தனையோ கேம்கள் இருந்தாலும் பப்ஜிக்கு மட்டும் எப்படி இவ்வளவு அடிமையானார்கள்... பப்ஜி தடையால் இனிமேல் சிறுவர்களும் இளைஞர்களும் தப்பித்துக்கொண்டனரா... அவர்களுக்கு இனிமேல் சிக்கல் கிடையாதா?

இதுகுறித்து மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவனிடம் பேசினோம். ``இன்றைய சூழல்ல சிறுவர்களும் இளைஞர்களும் பொதுவா ஆன்லைன் கேம்களுக்கு அடிமையாகின்றனர் என்பதுதான் பிரதான பிரச்னை. பப்ஜி தடையைக் கொண்டாடுவது, பப்ஜி மட்டும்தான் பிரச்னை என்பதுபோல் இந்தப் பிரச்னையைச் சுருக்கிவிட வாய்ப்பிருக்கிறது. பப்ஜியைத் தடை செய்துவிட்டால் சிறுவர்களும் இளைஞர்களும் ஆன்லைன் கேம் பிரச்னையிலிருந்து மீண்டு படிக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்று சொல்லிவிட முடியாது. பப்ஜிக்கு மாற்றாக நிறைய மாற்று உள்ளன. ஆகையால், இதை நாம் முழுமையான தீர்வாகப் பார்க்க முடியாது.

குறிப்பிட்ட ஒரு சிகரெட்டோ, மதுபானமோதான் அதிக அடிக்டிவ் என யாராலும் விளம்பரப்படுத்த முடியுமா? ஆனால், குழந்தைகள் விளையாடக்கூடிய விளையாட்டுகளை மிகவும் பட்டவர்த்தனமாக `மோர் அடிக்டிவ் கேம்’ என்று விளம்பரப்படுத்துகின்றனர். அதை நாம் எப்படி அனுமதித்தோம்... அனுமதிக்கிறோம்?

டாக்டர் சிவபாலன் இளங்கோவன்
டாக்டர் சிவபாலன் இளங்கோவன்

ஒரு கேமை உருவாக்கும் குழுவில் உளவியல் நிபுணர்களும் இருக்கின்றனர். இந்த கேமை நோக்கி எப்படி மக்களை இழுப்பது... மக்கள் இதைவிட்டு வெளியேறாமல் வைத்திருப்பது எப்படி என்பதையெல்லாம் ஆராய்ந்து `அடிக்ட்’ ஆக்க வேண்டும் என்ற நோக்கத்துடனேயே ஒரு கேம் உருவாக்கப்படுகிறது. இப்படி உருவாக்கப்படும் கேம்கள் பெரியவர்களுக்கோ, நடுத்தர வயதினருக்கோ இல்லை... சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் எவ்வளவு பெரிய ஆபத்து... அபத்தம்? இந்தியாவுக்கு மட்டுமல்ல இது உலகளாவிய பிரச்னை. குழந்தைகளுக்காக இயங்கக்கூடிய யுனிசெஃப் போன்ற அமைப்புகளே இதில் தலையிட வேண்டியுள்ளது.

அப்படியென்றால், `பப்ஜியைத் தடை செய்ததால் எந்தப் பயனுமே இல்லையா?’ எனக் கேட்டால், நிச்சயாமாக இருக்கிறது. பப்ஜிக்கு அடிமையாகியுள்ள மாணவர்கள் தற்காலிகமாக இதிலிருந்து வெளியே வருவார்கள். அவர்கள் வேறொரு கேமுக்கு இதேபோல மூழ்கி அடிக்ட் ஆவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. அதற்கான சூழலும் இங்கே இருக்கிறது. குழந்தைகள் நலனுக்காக பப்ஜி தடை செய்யப்படவில்லை. நாட்டின் பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தடை செய்துள்ளனர். குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு இது தீர்வு கிடையாது. குழந்தைகளுக்காக உருவாக்கப்படுகிற கேம்கள் குழந்தைகளை அடிக்டிவ் ஆக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்படும் சூழலையே நாம் மாற்ற வேண்டும். அதை நெறிமுறைப்படுத்த வேண்டிய தேவை இங்கே அதிகம் உள்ளது. இது அரசாங்கம் செய்ய வேண்டியது.

  • பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

`குறைந்தபட்சம் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மொபைல், லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை அறிமுகப்படுத்தாதீர்கள்’ என்று எச்சரிக்கின்றன உலகளாவிய மனநல மருத்துவ அமைப்புகள். ஆனால், இப்போது சூழல் முற்றிலும் மாறியுள்ளது. எல்.கே.ஜி படிக்கிற குழந்தைகளுக்குக் கூட ஆன்லைன் கல்வி கற்பிக்கப்படுகிறது. திருச்சியில் உள்ள ஒரு குழந்தை ஆன்லைன் வழியாகச் சென்னையில் ஓவியப் பயிற்சி எடுத்துக்கொள்கிறது. கொரோனாவுக்குப் பிறகும் இந்த ஆன்லை பாய்ச்சல் தொடரும். அதைத் தடை செய்ய முடியாது. ஆனால், நெறிமுறைப்படுத்த முடியும். கல்விக்காகப் பயன்படுத்தும் டிஜிட்டல் சாதனங்களைக் குழந்தைகள் கல்வியைத் தவிர வேறு உபயோகத்துக்குப் பயன்படுத்தாமலிருப்பதைப் பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும்.

பப்ஜி
பப்ஜி

7 முதல் 14 வயதில் உள்ளவர்கள் பெற்றோர்களின் நேரடி கண்காணிப்பில்தான் டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும். தனிமையில் பயன்படுத்தக் கூடாது. 14 - 18 வயதில் உள்ளவர்கள் வெளிப்படைத்தன்மையுடன் அதைப் பயன்படுத்த வேண்டும். எதையும் பெற்றோர்களிடமிருந்து மறைக்கக் கூடாது.

அதிலுள்ள தீமையைச் சொல்லி அவற்றிலிருந்து பிள்ளைகளை விலக்கி வைப்பது பெற்றோரின் கடமை, அரசு, பெற்றோர்கள், மாணவர்கள், கேமை உருவாக்குபவர்கள் என அனைவரும் சேர்ந்து சமூகப் பொறுப்புடன் செயல்பட்டால்தான் இந்தப் பிரச்னைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்க முடியுமே தவிர, ஒன்றிரண்டு கேம்களை மட்டும் தடை செய்வதால் அது சாத்தியப்படாது” என்றார்.

`ஆன்லைன் கேம்கள் எப்படி அடிக்ஷனாக மாறுகின்றன?’ மனநல மருத்துவர் ருத்ரனிடம் பேசினோம்.

``இதுமாதிரி விளையாட்டுகள் ஆரம்பத்தில் பொழுது போக்க உதவும், சிலருக்கு இதன் மூலம் கவனக் குவிதல்கூட அதிகமாகும். ஆனால், நாளடைவில் இவ்வகை விளையாட்டுகள் ஒரு போதை போலாகி, மனம் அதிலேயே சுழன்று வேறெதிலும் நாட்டமின்றிப் போகும். செய்ய வேண்டிய பணி, படிக்க வேண்டிய பாடம், பழக வேண்டிய நெருங்கிய வட்டம் யாவும் பாழாவதை என்னிடம் வரும் குழந்தைகள், இளைஞர்களிடம் பார்த்திருக்கிறேன். பப்ஜி தடை செய்யப்பட்டதால் அதைத் தொடர்ந்து விளையாடி வந்த மாணவர்களுக்கு ஆரம்பத்தில்

- எரிச்சல்,

- கோபம்,

- கவனச்சிதறல்,

- உறக்கக் கோளாறு,

வேறெதிலும் நாட்டமின்மை போன்ற உளைச்சல்கள் இருக்கும். சுற்றமும் நட்பும் ஆதரவாக இருந்தால் மீள்வதும் எளிதாகும்.

டாக்டர் ருத்ரன்
டாக்டர் ருத்ரன்

ஆனால், இது இல்லையே என்று இதேபோல ஒன்றைத் தேடுவார்கள். எல்லாவற்றுக்கும் மாற்று கிடைக்கும்.

மது கிடைக்காதபோது இருமல் மருந்தைக் குடித்தவர்களும் உண்டு என்பதுபோல். பல இணைய வழி விளையாட்டுகள் இருந்தாலும் பப்ஜி மிகவும் பிரபலம். அது பிரபலமாக இருப்பதாலேயே என் நண்பன், என் சகோதரன், என் உடன் படிப்பவன் ஆடுகிறானே, நான் ஆடாவிட்டால் அந்த வட்டத்திலிருந்து விலக்கப்படுவேனோ எனும் தூண்டுதலே இவ்விளையாட்டு போதை அளவுக்கு போனதற்கு காரணம்” என்றார்.

பப்ஜி எப்படி இவ்ளவு பிரபலம் ஆனது..?

அடிக்ட் மனநிலைக்குச் செல்லாமல் மிகவும் கவனமுடன் பப்ஜி விளையாடியவர்கள் சிலரிடம் பேசினோம், ``நிறைய கேம்ஸ் இருந்தாலும் பப்ஜி ஏன் பிரபலம் ஆனதுன்னா நாலு பேரோட சேர்ந்து பேசிக்கிட்டே விளையாடலாம், 2ஜி ஸ்பீடுலகூட விளையாடலாம், 5000 ரூபாய் மதிப்புள்ள போன்லயே விளையாடலாம்... அதுமட்டுமல்ல மனிதனுடைய அடிப்படையான சர்வைவலை டார்கெட்டாகக் கொண்டிருந்தது பப்ஜி. `உங்களை ஒரு தீவில் இறக்கிவிட்ருவாங்க சாகாம கடைசி வரைக்கும் வாழணும்’ அதுதான் கான்செப்ட். இந்த அம்சங்களெல்லாம்தான் இந்தளவுக்கு பப்ஜி பிரமலமடைவதற்கு காரணம்.

அதே நேரம் பப்ஜிக்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு கிளம்புதுன்னா... இது வெறும் வீடியோ கேமோட நிக்கலை. இதில 99 பேரை கொன்னாதான் நாம நம்பர் ஒண்ணா வர முடியும். ஒரு கட்டத்துக்குமேல இதை வெச்சு காசு சம்பாதிக்க ஆரம்பிச்சாங்க. `100 பேர் சேர்ந்து விளையாடுற ஒரு டீமுக்கு என்ட்ரி ஃபீஸ்னு ஒரு தொகையை ஃபிக்ஸ் பண்ணிட்டு... நாம எத்தனை பேரை கொலை பண்றோமோ அத்தனை பேருக்கான காசை பே-டிஎம் மூலமாவோ கூகுள் பே மூலமாவோ அனுப்ப ஆரம்பிச்சாங்க... அதுக்கு அடுத்து டோர்னெமென்ட்லாம் வைக்க ஆரம்பிச்சாங்க. சிலர் பப்ஜில ஜெயிப்பது எப்படின்னு யூடியூப் வீடியோ போடும் அளவுக்குப் போனாங்க... இன்னொரு பக்கம் நாலு பேர் சேர்ந்து பேசிக்கிட்டே விளையாடலாம்ங்கிறதால இதன் வழியா நிறைய ஃபிரெண்ட்ஷிப் உருவாச்சு. நிறையபேர் அதுல பழக்கமாகி காதலிச்சு, கல்யாணம்லாம்கூட பண்ணினாங்க.

PUBG தடை
PUBG தடை
Vikatan

இப்படி ஒருவனை அடிக்ட் ஆக்கறதுக்கான அம்சங்கள் நிறைஞ்ச முதல் வீடியோ கேமா பப்ஜி இருந்ததால எல்லோரையும் ஈஸியா ஈர்த்துடுச்சு. இந்த கேம் விளையாடுறவங்களுக்குள்ள வன்முறை உணர்வைத் தூண்டக்கூடியதா இருந்தது. அதனாலதான் இதை விளையாடுற சின்ன பசங்க `அவனைக் கொல்லுடா... கொல்லு... விடாதன்னு’ கத்திக்கிட்டே விளையாண்டாங்க. இவையெல்லாம்தாம் பெற்றோர்களை மிரள வெச்சுச்சு. இந்த கேம் 15 வயசுக்கு மேற்பட்டவங்க விளையாட வேண்டியது. ஆனா, அதுக்கும் சின்ன வயசு பசங்களையும் சில பெற்றோர்கள் விளையாட அனுமதிச்சதும் பிரச்னைக்கு மிகப்பெரிய காரணம். இப்போ இந்த கேமை சீன நிறுவனம் என்பதற்காகத்தான் தடை பண்ணிருக்காங்களே ஒழிய சிறுவர்களையும் இளைஞர்களையும் அடிமையாக்குதுங்கிறதுக்காக இல்லை. பப்ஜி போனா வேற ஒண்ணுக்கு இளைஞர்கள் தாவுவாங்க. அதனால இதுபோன்ற விஷயங்களுக்கு நிரந்தர தீர்வு என்ன என்பதைப் பற்றி யோசிக்கணும்” என்றார்.

பப்ஜி தடை மற்றும் சிறுவர்களின் நலன் குறித்த உங்கள் கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்...

அடுத்த கட்டுரைக்கு