Published:Updated:

"ஏழு வயதுச் சிறுமியைக் காத்த மாஸ்க்!" - மூன்று வகை முகக் கவசத்தில் எது பெஸ்ட்?

முகக் கவசம்
முகக் கவசம்

அறுவை சிகிச்சைக் கவசத்தை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கழற்றிய பின்னர் பிளாஸ்டிக் பைகளில் வைத்து மூடியுள்ள குப்பைக் கூடைகளில் களைய வேண்டும்.

முக்கக்கவசத்தை மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள். முதலாவது 'என்-95' கவசம் எனப்படுகிறது. இது முகத்தோடு ஒட்டிப்பொருந்தியிருக்கும். காற்றில் உலவும் எந்த நுண்மையான வைரஸும் இதைக் கடந்து உள்ளே போவது கடினம். கொரோனா சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் செவிலியர்களும் இதைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

அடுத்தது, அறுவை சிகிச்சைக் கவசம் எனப்படுகிறது. இதில் மூன்று மடிப்புகள் இருக்கும். பொதுவாக அறுவை சிகிச்சைகளின்போது மருத்துவர்களும் செவிலியர்களும் பணியாளர்களும் அணிவது. நோயாளிகளின் குருதி, உமிழ்நீர் போன்றவை இந்தக் கவசத்தைக் கடந்து உட்புகா. காவலர்கள், துப்புரவுப் பணியாளர்கள், கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் முதலான மக்களோடு கலந்து கடமையாற்ற வேண்டியவர்கள் இந்த வகைக் கவசத்தை அணிய வேண்டும்.

மூன்றாவது வகைதான் வீட்டுக் கவசம் எனப்படுகிறது. இது துணியாலானது. துவைத்துப் பயன்படுத்தக் கூடியது. எனில், நுண் துகள்களை வடிகட்டும் ஆற்றல் இதற்கு இல்லை. கோவிட்-19 தாக்குதலுக்கு உள்ளானவர்களில் நான்கில் ஒருவர் யாதொரு அறிகுறியையும் வெளிப்படுத்துவதில்லை. இவர்கள் நாசியின் வழியாகவும் வாய் வழியாகவும், வெளியேறவும், அருகிருப்பவர்களுக்கு உட்புகவும் வாய்ப்புள்ள வைரஸை இந்த மூன்றாம் வகை முகக்கவசம் தடுத்து நிறுத்திவிடும் வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். இதைத்தான் அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மையம் இப்போது பரிந்துரைக்கிறது.

உலக சுகாதார அமைப்பும் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு விட்டது; ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிட்ட சுற்றறிக்கையில் அமைப்பு முகக்கவசத்தை ஆதரிக்கிறது. முதல் இரண்டு வகை முகக்கவசங்கள் பொதுமக்கள் பயன்படுத்தும் அளவிற்கு உற்பத்தி செய்யப்படுவதில்லை என்பதால் பொதுமக்கள் மூன்றாம் வகைக் கவசம் அணிந்தால் போதுமானது என்கிறார்கள். ஆஸ்திரியா, ஸ்லோவாக்கியா, செக் குடியரசு முதலான ஐரோப்பிய நாடுகள், மக்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியிருக்கின்றன. ஏனெனில், பொது இடங்களில் புழங்குகிறபோதுதான் வைரஸ் அதிகமாகப் பரவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

க்ளிக் செய்க... > முகக் கவசம் முக்கியமா, இல்லையா? https://bit.ly/2XP3xX8

மாஸ்க்கின் நோய்த்தடுப்பின் திறன்
மாஸ்க்கின் நோய்த்தடுப்பின் திறன்

யூன் க்வாக் யுங், ஹாங்காங் பல்கலைக்கழகப் பேராசிரியர். நுண்ணுயிரியலாளர். கடந்த மாதம் அவரது ஆராய்ச்சிக் கட்டுரை 'லான்செட்' எனும் மருத்துவ இதழில் வெளியானது. அறுவர் அடங்கிய ஒரு ஹாங்காங் குடும்பம் கோவிட்-19இன் நதிமூலமான வூகான் நகருக்குச் சென்றது. ஐவருக்கு வைரஸ் தொற்றியது. தப்பியவர் ஒரு ஏழு வயதுச் சிறுமி. அவளை முகக்கவசம் காத்தது என்கிறார் யூன்.

அறுவை சிகிச்சைக் கவசத்தை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கழற்றிய பின்னர் பிளாஸ்டிக் பைகளில் வைத்து மூடியுள்ள குப்பைக் கூடைகளில் களைய வேண்டும். எனில், துணிக்கவசமே மக்களுக்குப் போதிய பாதுகாப்பை அளிக்கவல்லது என்கின்றனர் வல்லுநர்கள். அதைப் பயன்படுத்துவதில் சில விதிகளை நாம் கைக்கொள்ள வேண்டும். முகக்கவசத்தில் ஒட்டியிருக்கும் வைரஸ் ஏழு நாள்கள் வரை தங்கியிருக்கும் என்று எழுதுகிறது 'லான்செட்' மருத்துவ இதழ்.

ஆகவே கவசத்தின் மீது கை வைக்கலாகாது. துணிக்கவசத்தை நன்றாகத் துவைக்க வேண்டும். சலவை இயந்திரமாயின் 60 பாகை வெப்பத்தில் இருக்க வேண்டும். கைகளில் துவைப்பவர்கள் குறைந்தபட்சம் அரை நிமிடம் சோப்பால் தேய்க்கவும் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும் வேண்டும். கவசம் மூக்கையும் வாயினையும் தாடையையும் முழுமையாக மூடியிருக்க வேண்டும். முகத்தோடு நன்றாகப் பொருந்தியிருக்க வேண்டும். இடைவெளிகளை அனுமதிக்கலாகாது. கவசத்தைப் பின்புறமிருந்துதான் கழற்ற வேண்டும். முகக்கவசத்தை அணியும் முன்னரும் கழற்றிய பின்னரும் கைகளை சோப்பால் கழுவுதல் வேண்டும். எந்தக் காரணத்தினாலோ கவசம் ஈரமானால், தாமதிக்காமல் அதை மாற்ற வேண்டும்.

> முகக்கவசம் தொடர்பான சமீபத்திய அறிவியல்பூர்வ ஆய்வுகளுடன், சீனாவின் நேரடி அனுபவத்தையும் உள்ளடக்கிய மிக முக்கியமான கட்டுரையை ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... > முகக் கவசம் முக்கியமா, இல்லையா? https://bit.ly/2XP3xX8

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு