கொரோனா வைரஸ் இரண்டாம் அலை இந்தியாவை உலுக்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், கறுப்பு பூஞ்சை என்ற நோய் மக்களிடையே பரவி வருகிறது. சில தினங்களுக்கு முன்புதான் இந்த நோயை சில மாநிலங்களில் தொற்றுநோயாக அறிவித்துள்ளனர். அதற்குள்ளாகவே வெள்ளை பூஞ்சை என்ற புதிய நோய் ஒன்று தற்போது பீகாரில் கண்டறியப்பட்டுள்ளது.
புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள இந்த வெள்ளை பூஞ்சை நோய், கறுப்பு பூஞ்சை நோயைவிட மிக மோசமானது எனக் கூறப்பட்டுள்ளது. வெள்ளை பூஞ்சை நுரையீரலை மட்டுமல்லாமல் நகங்கள், தோல், வயிறு, சிறுநீரகம், மூளை, உள்ளிறுப்புகள் மற்றும் வாய் உள்ளிட்ட உடலின் பிற பகுதிகளையும் பாதிக்கும் என பீகார் மருத்துவர் கூறியுள்ளார்.

`` `மியூகோர்மைகோசிஸ்' என்று கூறப்படும் கறுப்பு பூஞ்சையை ஒரு தொற்றுநோயாக அறிவிக்க மத்திய அரசு மாநிலங்களைக் கேட்டுக்கொண்டுள்ள இந்த நேரத்தில், வெள்ளை பூஞ்சை எனப்படும் தொற்றுநோயும் மக்களை பாதித்துள்ளது அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது. பீகார், பாட்னாவில் இந்த புதிய பூஞ்சை நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்கு 4 பேருக்கு இந்த நோய் ஏற்பட்டுள்ளது. இந்த தொற்று கறுப்பு பூஞ்சையைவிட ஆபத்தானது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் இந்த தொற்று ஏற்படலாம். அல்லது அசுத்தமான தண்ணீரை மக்கள் புழங்குவதன் மூலமும் பரவலாம். மக்கள் மிக சுத்தமாக இருப்பது முக்கியம்" என `பராஸ்' மருத்துவமனையின் நுரையீரல் மருத்துவர் அருணேஷ் குமார் கூறியிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மேலும், ``இவற்றின் அறிகுறிகளாக கொரோனா நோயின் அறிகுறிகளே தோன்றும்; ஆனால் கொரோனா சோதனை நெகடிவ்வாக இருக்கும். எக்ஸ்ரே அல்லது சி.டி-ஸ்கேன் மூலம்தான் நோய்த்தொற்றைக் கண்டறிய முடியும். வெள்ளை பூஞ்சை நுரையீரலை மட்டுமல்ல, உடலின் மற்ற பகுதிகளையும், நகங்கள், தோல், வயிறு, சிறுநீரகம், மூளை, வாய் உட்பட உடலின் பல பகுதிகளை பாதிக்கும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

`நீரிழிவு போன்ற பலவீனமான நோய் உள்ளவர்கள், எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள், புற்றுநோய் நோயாளிகள் மற்றும் நீண்ட காலத்திற்கு ஸ்டீராய்டுகளை உட்கொள்பவர்களுக்கு இந்த வெள்ளை பூஞ்சை நோய் ஏற்பட அதிக ஆபத்து இருப்பதால் அவர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இது செயற்கை ஆக்சிஜன் ஆதரவில் இருக்கும் கொரோனா வைரஸ் நோயாளிகளையும் தாக்குகிறது. குழந்தைகள் மற்றும் பெண்களையும் இந்த நோய் பாதிக்கிறது' என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த கறுப்பு மற்றும் வெள்ளை பூஞ்சை நோய்களை ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறிந்துவிட்டால் அவற்றை குணப்படுத்துவது எளிது என்பது மட்டுமே இந்தச் சூழ்நிலையில் மிக ஆறுதலான விஷயமாகும்.