Published:Updated:

`இதே நிலை தொடர்ந்தால் தடுப்பூசியால்கூட மக்களைக் காக்க முடியாது!' - சௌமியா சுவாமிநாதன்

corona
corona

இந்தியாவில் வெறும் 2% மக்களே கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டு வரும் நிலையில் ஏற்கெனவே மாற்றமடைந்துள்ள கொரோனா வைரஸ் மேலும் உருமாறினால் இன்னும் அபாயகரமாக மாறும் சூழல் உள்ளது.

புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் லட்சங்களைத் தொட்டு அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. வுகானிலிருந்து பரவத்தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் இந்தியாவில் `பி1 617 வகை' வைரஸ் கிருமியாக மாற்றமடைந்து வேகமெடுத்துப் பரவிவருகிறது.

WHO
WHO

உருமாற்றம் அடைந்திருக்கும் இந்த `பி1 617 வகை' வைரஸின் வீரியமும் பரவும் தன்மையும் முதல் அலையைவிடப் பன்மடங்காக அதிகரித்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறது உலக சுகாதார அமைப்பு. சீனாவிலிருந்துதான் ஒட்டுமொத்த உலக நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது என கொரோனா பரவலின் ஆரம்பகட்டத்தில் பேசப்பட்டது. ஆனால், இந்தியாவிலிருந்து மட்டுமே 44 நாடுகளுக்கு இந்தியாவில் மாற்றமடைந்த இந்த `பி1 617 வகை' வைரஸ் கிருமி வைரஸ் தொற்று பரவியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இது குறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், `இந்தியாவில் தற்போது வரை வெறும் 2% மக்களே கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ள நிலையில் ஏற்கெனவே மாற்றமடைந்துள்ள கொரோனா வைரஸ் மேலும் உருமாறினால் இன்னும் அபாயகரமாக மாறும் சூழல் உள்ளது. தடுப்பூசிகள் போட்டுக்கொள்ளாதது மட்டுமன்றி முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் போன்ற நடவடிக்கைகளை மக்கள் சரிவரப் பின்பற்றாததும்தான் இரண்டாம் அலை வேகமாகப் பரவுவதற்கு முக்கிய காரணங்களே. இதுவே தொடர்ந்தால், கொரோனாவின் மூன்றாவது அலையில் தடுப்பூசிகளால்கூட கொரோனா தொற்றைத் தடுக்க முடியாமல் ஆகிவிடும்.

சௌமியா சுவாமிநாதன்
சௌமியா சுவாமிநாதன்
Twitter Image

இது ஒருபுறம் என்றால் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களை `Black Fungus' எனும் பூஞ்சைத் தொற்று பாதித்துவருகிறது `Mucor' என்னும் பூஞ்சையால் பரவும் இந்தத் தொற்றுநோய், நுரையீரல், கண்கள், மூக்கு, தாடை எலும்புகள் போன்ற இடங்களில் அதிகளவில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. கண்களில் பூஞ்சை தொற்று ஏற்பட்டால் கண்களையே அகற்றிவிடக்கூடிய நிலைமை வரும் அளவுக்கு இதன் தீவிரத்தன்மை இருப்பது பயத்தை அதிகரிக்கிறது.

இந்தியாவில் கொரோனாவின் மூன்றாவது அலைக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் அதை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டிய நிலை நிலவிவருகிறது. இப்படிப்பட்ட சூழலில் விரைவாகத் தடுப்பூசிகள் எடுத்துக்கொள்வது ஓரளவுக்காவது நிச்சயம் கைகொடுக்கும். தடுப்பூசிகள் போட்டுக்கொள்வதை தாமதித்தால் மூன்றாவது அலையில் அந்தத் தடுப்பூசிகளும் செயலிழந்துவிடும்' என எச்சரித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு