Published:Updated:

புத்தம் புது காலை: கோவை கோபிநாத்களும், குன்ட்டூர் சிவாக்களும் ஏன் இரத்ததானத்தை வலியுறுத்துகிறார்கள்?

இரத்த தானம்
இரத்த தானம்

இந்தியாவின் ஓர் ஆண்டிற்கான மொத்த இரத்தத்தின் தேவை, சுமார் நான்கு கோடி யூனிட்கள். ஆனால், கிடைக்கப் பெறுவதோ வெறும் நாற்பது லட்சம் யூனிட்கள் மட்டுமே. அதிலும் இந்தக் கொடூரமான கோவிட் நோய் அனைத்தையும் மாற்றி, இன்னும் பல உயிர்களை இரத்தப் பற்றாக்குறையால் பறித்துக் கொண்டிருக்கிறது.

1999-ம் ஆண்டு... பள்ளியிலிருந்து சைக்கிளில் வீடுதிரும்பிக் கொண்டிருந்த அந்தப் பதினான்கு வயதுச் சிறுவன் மீது லாரி ஒன்று மோதியது. பாலத்திலிருந்து சைக்கிளுடன் அவன் தூக்கியெறியப்பட, காயம்பட்ட சிறுவனை மருத்துவமனைக்கு தூக்கி வந்திருந்தார்கள். முதலுதவி செய்து கொண்டிருந்த போதுதான் தெரிந்தது, அச்சிறுவன் என்னுடன் பணிபுரியும் செவிலியரின் மகன் என்று!


விபத்தின்போது, அவனுக்கு மண்ணீரலில் காயம் ஏற்பட்டிருந்ததால், (Splenic Rupture) மயக்கவியல் மருத்துவர் அறிவுறுத்தியபடி மூன்று யூனிட்கள் B+ve இரத்தத்திற்கு ஏற்பாடு செய்யச் சொல்லிவிட்டு ஒரு உடனடி அறுவை சிகிச்சைக்கு தயாரானோம். ஆனாலும் இரத்தம் கிடைப்பது தாமதமானால் சிக்கல்கள் கூடும் என்பதால், அப்போது அறுவை அரங்கில் இருந்த ஒரே B+ve நபராகிய நான், அறுவைசிகிச்சைக்கு முன் எனது இரத்தத்தை கொடுக்க ஆயத்தமானேன்.

குறைந்த எடை, இரத்த அளவு குறைவு போன்ற காரணங்களால் அதுவரை இரத்த தானம் கொடுக்க நான் மறுக்கப்பட்டிருப்பதை நண்பர் நினைவுபடுத்தினாலும், அந்தச் சூழ்நிலையில் நான் முதன்முதலாக இரத்தம் கொடுத்த கையோடு, அவனுக்கு அறுவை சிகிச்சையையும் செய்ய ஆரம்பித்தேன். இதற்கிடையே எதிர்பார்த்த மேலும் இரண்டு யூனிட்கள் இரத்தமும் வந்தடைய அறுவைசிகிச்சை தடங்கலின்றி முடிந்தது.

இரத்ததானம் (மாதிரிப் படம்)
இரத்ததானம் (மாதிரிப் படம்)

அச்சிறுவன் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பும் முன், கண்ணீருடன் அவனும், அவனது தாயாரும் நன்றிகூறி புறப்பட்டனர். அதன்பிறகு எத்தனையோ இரத்ததான முகாம்கள், அவசர அறுவை சிகிச்சைகள் எனப் பலமுறை நான் இரத்த தானம் அளித்திருந்த போதிலும், ஒரு அவசரத்தில் செய்த அந்த முதல் இரத்த தானம் எனக்கு எப்போதும் மனநிறைவைத் தந்தது என்பதே உண்மை.


வருடங்கள் ஓடியது. பணியிடம் மாறி அவனது அம்மாவும் தொடர்பில்லாமல் போனபிறகு, இந்த நிகழ்வு சிலசமயம் மனதில் தோன்றும். அந்தச் சிறுவனின் முகத்தை ஞாபகப்படுத்த முயன்று தோற்றுப்போவேன். ஆனால், சமீபத்தில் ஒருநாள் தனது மனைவி குழந்தையுடன் என்னைப் பார்க்க வந்திருந்த ஒரு இளைஞன், "மேடம், நான் கோபிநாத்... இன்று எனது பிறந்தநாள். உங்கள் ஆசீர்வாதம் வேண்டும்" என்று கைகூப்பி முன்னால் நிற்க, அந்த இளைஞன் யாரென்று தெரியாமல் குழப்பத்துடன் நான் நிமிர்ந்து பார்த்தேன். "ஞாபகமில்லையா மேடம்?" என்று சிரித்தபடி, தனது குழந்தையிடம், "உங்கப்பாவுக்கு இரத்தம் கொடுது காப்பாத்தினவங்க இவங்கதான்" என்றான்.. "அட... நம்ம ஸ்டாஃப் மகன்" என்று மகிழ்ச்சியுடன் நான் அடையாளம் காண, அப்போது அவனது மனைவி கைகூப்ப, எதுவும் புரியாமலே அந்த பிஞ்சுக்குழந்தையும் அழகாகக் கையைக் கூப்பியதில் உண்மையிலேயே நெகிழ்ந்துதான் போனேன்.

கோபிநாத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை நான் தெரிவிக்க, புறப்படும் முன், "இப்ப வரை நானும் தொடர்ந்து ப்ளட் டொனேட் பண்ணிட்டேதான் இருக்கேன் டாக்டர்... பெருமைக்காக இல்ல. இதைக்கேட்டா நீங்க நிச்சயமா சந்தோஷப்படுவீங்கனுதான் சொல்றேன்" என்று அன்றைய தினத்தையே அழகாக்கிவிட்டுச் சென்றான் அந்த ஐடி இளைஞன்.

கோபிநாத் தன் குடும்பத்தினருடன்
கோபிநாத் தன் குடும்பத்தினருடன்

கோபிநாத் போல எத்தனையோ பேர் தானமளித்தாலும், உண்மையில் மருத்துவம் சாராத பலருக்கு இன்னும் இரத்த தானத்தின் மகிமை புரியவில்லை என்றுதான் தோன்றுகிறது. சாதாரணமாக ஒவ்வொரு இரண்டு விநாடிக்கும் யாரோ ஒருவருக்கு அவசரமாக இரத்தம் தேவைப்படுகிறது என்கிறது புள்ளிவிவரம். அதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த லாக்டெளன் காரணமாக நடமாட்டம் குறைந்து கல்லூரிகளும், அலுவலகங்களும் மூடப்பட்டிருக்கும் காலங்களில், இரத்தத்தின் தேவைக்கு டோனர்களைத் தேடி அலைய வேண்டியிருக்கிறது. கோவிட் பெருந்தொற்றின் இன்னொரு பெரும் அவலம் இது.


ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது கல்லூரி மாணவரான கண்டு சிவா, தனது சகோதரரின் மகளுக்கு சென்ற ஆண்டு கோவிட் பரவலின்போது நடந்த அறுவைசிகிச்சைக்கு இரத்தம் தேடி நண்பர்கள், உறவினர்கள் அனைவரையும் நாட, கோவிட் பயத்தால் யாரும் இரத்த தானம் அளிக்க மறுத்துவிட்டனர். சிறுமியின் உயிரைக்காக்க சிவா அலைந்தது அவர் மனதை பெரிதும் பாதித்தது.


தனது சகோதரர் மகளுக்கு நேர்ந்தது பிறருக்கு ஏற்படக்கூடாது என்று எண்ணி கடந்த ஏப்ரல் 11-ம் தேதி, கன்னியாகுமரியில் தனது இரத்த தான விழிப்புணர்வு நடைபயணத்தைத் தொடங்கிய சிவா, தினமும் நாளொன்றுக்கு 40-50 கிலோமீட்டர் என தினசரி 14 மணிநேரம் மொத்தம் 2350 கிலோமீட்டருக்கும் மேல் நடந்து, தமிழ்நாடு, கேரள, ஆந்திர மாநிலங்களின் பல்வேறு ஊர்களில் இரத்த தானம் குறித்து தனது விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.


தனது நடைபயணத்தை உலக இரத்த தான விழிப்புணர்வு நாளான இன்று, குண்டூரில் ஒரு இரத்ததான முகாமைத் தொடங்கி வைப்பதுடன் முடித்துக்கொள்வதாக இருக்கும் சிவா, அங்கு, தான் இரத்த தானம் அளிக்கப் போவதாகவும், மறுபடியும் தனது பயணத்தை இந்தியா முழுவதும் தொடரப்போவதாகவும் கூறியிருக்கிறார்.

புத்தம் புது காலை: கோவை கோபிநாத்களும், குன்ட்டூர் சிவாக்களும் ஏன் இரத்ததானத்தை வலியுறுத்துகிறார்கள்?

இந்தியாவின் ஓர் ஆண்டிற்கான மொத்த இரத்தத்தின் தேவை, சுமார் நான்கு கோடி யூனிட்கள். ஆனால், கிடைக்கப் பெறுவதோ வெறும் நாற்பது லட்சம் யூனிட்கள் மட்டுமே. அதிலும் இந்தக் கொடூரமான கோவிட் நோய் அனைத்தையும் மாற்றி, இன்னும் பல உயிர்களை இரத்தப் பற்றாக்குறையால் பறித்துக் கொண்டிருக்கிறது.

தான் மிகவும் நேசிக்கும் உயிர் ஒன்று, விபத்தின் காரணமாக அல்லது அறுவைசிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்க, அந்த உயிர் பிழைப்பதற்காக கண்களில் நீருடன் இரத்தத்தை தேடி அலையவேண்டிய அந்தக் குடும்பத்தவரின் பதைபதைப்பு எவ்வளவு துரதிருஷ்டவசமானது என்று ஒரு கணம் யோசித்துப் பாருங்கள்.


உண்மையில் கோவை கோபிநாத்களும், குண்டூர் சிவாக்களும் இன்னும் பல முகமறியா ஆயிரக்கணக்கான நன்கொடையாளர்களாலும் பல உயிர்கள் காக்கப்படுகிறது என்றாலும் இது போதாது என்பதே உண்மை.


இவர்களைப் போன்ற கொடையாளர்களுக்கு நாம் செய்ய வேண்டிய பிரதியுபகாரத்தை, கோரிக்கைகளாக நம்மிடையே வைக்கிறது உலக சுகாதார அமைப்பு. ''இயன்றவரை இரத்த தானம் அளிப்பது. வியாபார நோக்கத்துடன் இரத்த தானத்தில் ஈடுபடாமல் இருப்பது. முக்கியமாக, நண்பர்கள் மற்றும் உறவினர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது'' என இன்றைய நாளில் அழைப்புவிடுக்கிறது உலக சுகாதார அமைப்பு.


உலக சுகாதார அமைப்பு மட்டுமன்றி, ஒரு பெண்கள் நல அறுவை சிகிச்சை மருத்துவராக இளைய தலைமுறையினருக்கு, என்னுடைய கோரிக்கையும், வேண்டுகோளும் இதுவே...


"உங்கள் உடலில் இருக்கும் ஐந்து லிட்டர் இரத்தத்தில் ஒரு யூனிட், அதாவது வெறும் 350ml கொடுப்பதால் ஒரு உயிர் பிழைக்கிறது என்பதால் இயன்றவரை இரத்த தானம் தர முன்வாருங்கள். ஏனெனில், உங்களது ஒவ்வொரு இரத்தத் துளியும், மற்றவர்களுக்கு உயிர்த்துளி!
#WorldBloodDonationDay

அடுத்த கட்டுரைக்கு