Published:Updated:

கொரோனா: திங்களன்று மட்டும் பாதிப்பு எண்ணிக்கை குறைவாக இருப்பது ஏன்?

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

வாரம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருந்து, ஞாயிற்றுக்கிழமைகளில் உச்சம்தொட்டு, பின்னர் திங்கள்கிழமைகளில் சரிவது, கடந்த ஒன்பது வாரங்களாகவே நடந்து வருகின்றது. இது ஏன்?

பள்ளி, கல்லூரி, வேலை எனச் சென்றுகொண்டிருந்தபோது, சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு, திங்கள்கிழமை மந்தமாகவே விடியும் நம்மில் பலருக்கு. கொரோனா வைரஸோடு நாம் வாழப் பழகிய பிறகு, அந்த வைரஸும் நம்மைப்போல் மாறிவிட்டதோ என்று எண்ணும் அளவுக்கு, ஒவ்வொரு திங்கள்கிழமை அன்றும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. என்ன காரணம்?

வாரம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருந்து, ஞாயிற்றுக்கிழமைகளில் உச்சம்தொட்டு, பின்னர் திங்கள்கிழமைகளில் சரிவது, கடந்த ஒன்பது வாரங்களாகவே நடந்து வருகின்றது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Pixabay

சென்ற ஞாயிறன்று இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,979. அடுத்த நாளான திங்களன்று 22,007 ஆகக் குறைந்துள்ளது. முந்தைய வாரமும் ஞாயிறு அன்று 19,741 ஆக இருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, திங்களன்று 18,870 ஆகக் குறைந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, மே 3, 4 தவிர மற்ற அனைத்து வாரங்களிலும் ஞாயிறுகளைவிட திங்கள்கிழமைகளில் குறைந்தே உள்ளது. இதற்கான காரணம், ஞாயிறு அன்று கொரோனா தொற்றுக்காகப் பரிசோதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைவதே. அவர்களின் பரிசோதனை முடிவுகள் அடுத்த நாளான திங்களன்று வெளியிடப்படும் என்பதால், அன்று அந்த எண்ணிக்கை குறைவாக உள்ளது.

ஞாயிறன்று பணியாளர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பரிசோதனை எண்ணிக்கை குறைகிறது. அதனால் திங்களன்று பாதிப்பு உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கையும் வார வாரம் குறைவாக உள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். RT - PCR பரிசோதனை முடிவுகள் வர 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை ஆவதால், சில நேரங்களில் திங்கள் மட்டுமல்லாது செவ்வாயும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படுகிறது.

covid19india.org என்ற இணையதளத்தில், இந்திய அளவில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா தொற்றுக்கான பரிசோதனை எண்ணிக்கை விவரப்படி, சென்ற சனிக்கிழமை (ஜூலை 4) அன்று 2,48,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ஞாயிறு அன்று 1,80,000 ஆக பரிசோதனைகள் குறைந்துள்ளன. பின்னர் திங்களன்று 2,41,00 ஆக பரிசோதனைகள் அதிகரித்துள்ளன. அதேபோல் ஜூன் 27 சனிக்கிழமை அன்று 2,31,000 பரிசோதனைகளும், ஞாயிறு அன்று 1,70,00 பரிசோதனைகளும், திங்களன்று (ஜூன் 29) 2,11,000 பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் - உலகம்
கொரோனா வைரஸ் - உலகம்

இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, திங்களன்று குறைந்தே உள்ளது. சென்ற ஞாயிறன்று உலக அளவில் 1,89,000 பேரும், திங்களன்று 1,79,000 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் அதற்கு முந்தைய வாரமும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உலக அளவில் ஞாயிறன்னு 1,80,000 ஆகவும், திங்களன்று 1,60,000 ஆகவும் பதிவாகி உள்ளது.

மொத்தத்தில், பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதே, பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறையக் காரணம் என்கிறார்கள் வல்லுநர்கள்!

அடுத்த கட்டுரைக்கு