Published:Updated:

ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கையெழுத்து; பதற்றம் ஏற்படுத்தும் அரசு மருத்துவமனை நடைமுறை!

Representational Image
News
Representational Image

மருத்துவமனைக்கு இது வெறும் நடைமுறையாக இருக்கலாம். ஆனால், நோயாளியோடு உடன் வருபவர்களுக்கு அது உணர்வுபூர்வமான விஷயம். தன்னுடைய உறவினர்களுக்கு ஏதும் ஆகிவிடுமோ என்று தேவையற்ற பதற்றத்தை இதுபோன்ற நடைமுறைகள் ஏற்படுத்துகின்றன.

கோவிட் அலை எனும் பெரும் பிரச்னையைக் கடந்துவிட்டோம். இருப்பினும் ஒமைக்ரான் பற்றிய செய்திகள் அடுத்த அலை குறித்த அச்சத்தை ஏற்படுத்துகின்றன. இன்னும் சில மாதங்களில் மூன்றாம் அலை வரும் என்ற கணிப்புகளும் நிபுணர்கள் தரப்பிலிருந்து வரத் தொடங்கியிருக்கிறது. கோவிட் இரண்டாம் அலையைக் கடந்தாலும் கோவிட் பாதிப்பு முழுவதும் நீங்கிவிடவில்லை. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 719 பேருக்கு புதிதாய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

Covid patients (File Pic)
Covid patients (File Pic)

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இதனால் கோவிட் சிகிச்சைப் பிரிவுகள், மருத்துவமனைகள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன. முதல் அலை, இரண்டாம் அலையின் உச்சத்தின்போது படுக்கைகளுக்கான தேவை அதிகமாக இருந்ததால் அறிகுறிகளற்றவர்கள் வீட்டிலிருந்தே தனிமைப்படுத்திக்கொள்ளவும், சிகிச்சை பெறவும் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், தற்போது பாதிப்பு குறைவாக உள்ளதால் தொற்று பாதிப்பு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டாலே மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி நிர்வாகத்தினர் அறிவுறுத்துகின்றனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளைத் தொடர்புகொண்டும் விசாரிக்கின்றனர். இந்நிலையில் அவ்வாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறவர்களின் உடன் வரும் குடும்பத்தினரிடம் ஓர் உறுதிப்படிவம் கையெழுத்திட்டு வாங்கப்படுகிறது. அதில் உறவினரின் பெயர் மற்றும் நோயாளியுடனான உறவுமுறையைக் குறிப்பிட்டு, ``மிகவும் ஆபத்தான நிலையில்தான் அனுமதிக்கிறேன்" என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. அதில் அறிகுறிகள் இல்லாத நோயாளியாக இருந்தாலும், அவரின் உறவினர்களிடம் இந்தப் படிவத்தில் மருத்துவமனை நிர்வாகத்தால் கையெழுத்து பெறப்படுகிறது.

சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணி ராஜன்
சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணி ராஜன்

இதுபற்றி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த சிலர் கூறியபோது, ``வீட்டிலுள்ள வயதானவர்களுக்கு கோவிட் தொற்று என்று தெரிந்ததுமே பயம் வந்துவிடுகிறது. இருந்தாலும் அறிகுறிகள் இல்லை என்பதால் சற்று மனதைத் தேற்றிக்கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்க அழைத்துச் செல்கிறோம். அப்போது இந்தப் படிவத்தில் கையெழுத்திடச் சொல்லிக் கேட்கும்போது மிகுந்த பதற்றம் ஏற்படுகிறது. ஏதோ அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்ற பயமும் ஏற்படுகிறது. உறவினர்கள் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும்வரை எங்களுக்கு ஏற்படும் மனஉளைச்சல் சொல்லிமாளாது" என்று வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அறிகுறிகளற்றவர்களின் உறவினர்களிடமும் எதற்கு இதுபோன்று நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்று சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜனிடம் கேட்டோம்:

``அந்தப் படிவத்துக்கு DIL (Dangerously ill List) பெயர். அதாவது, ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள், சிக்கலான அறுவைசிகிச்சை செய்பவர்களின் குடும்பத்தினரிடம் முன்கூட்டியே ஒப்புதல் வாங்குவது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் அனைவரும் குணமாகி வீடு திரும்புவார்கள் என்று கூற முடியாது. மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களில் 2% பேர் உயிரிழப்பதற்கும் வாய்ப்புள்ளது.

Representational Image
Representational Image

மேலும், உலகுக்கே புதுமையான நோய் கோவிட்-19. இன்று நன்றாக இருக்கும் நபர், இரண்டு நாள்கள் கழித்து அதே நிலையில் இருப்பாரா என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஒரு சில துக்க நிகழ்வுகளும் நிகழக்கூடும். இறந்த பின்னர், இதை ஏன் முன்கூட்டியே எங்களுக்குத் தெரிவிக்கவில்லை என்று கேள்வி எழுப்புவார்கள். மருத்துவர்கள், மருத்துவமனைகளைத் தாக்கும் நிகழ்வுகள்கூட நடைபெறுகின்றன. அதனால்தான் முன்னெச்சரிக்கையாக இதில் ஒப்புதல் பெறுகிறோம். இது ஒரு நடைமுறைதான். ஒப்புதல் பெறும் அனைவரும் ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள் என்று அர்த்தமல்ல" என்றார்.

மருத்துவக் கல்வி இயக்குநர் மருத்துவர் நாராயணபாபு, ``எல்லா மருத்துவமனையிலும் பின்பற்றப்படும் நடைமுறைதான் இது. இதை Informed Concern என்பார்கள். முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்றாலும், உறவினர்கள் பிரச்னை செய்வார்கள். உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுபவர்களுக்கான வெறும் நடைமுறைதான் இது. இதனால் ஆபத்து எதுவும் இல்லை" என்றார்.

சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, ``எந்த மருத்துவமனையில் இதுபோன்று நடைபெறுகிறது என்று பெயர் குறிப்பிட்டுச் சொல்லுங்கள். அங்கு விசாரித்த பிறகு பதில் அளிக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

DME Dr. Narayanababu
DME Dr. Narayanababu

மருத்துவமனைக்கு இது வெறும் நடைமுறையாக இருக்கலாம். ஆனால், நோயாளியோடு உடன் வருபவர்களுக்கு அது உணர்வுபூர்வமான விஷயம். தன்னுடைய உறவினர்களுக்கு ஏதும் ஆகிவிடுமோ என்று தேவையற்ற பதற்றத்தை இதுபோன்ற நடைமுறைகள் ஏற்படுத்துகின்றன. ஆபத்தான நிலையில் அல்லது சிக்கலான அறுவைசிகிச்சை, சிசேரியன் போன்றவற்றுக்கு இந்தப் படிவத்தில் ஒப்புதல் பெறுவதை யாரும் தவறு சொல்லவில்லை. ஆனால், நோய்க்கான அறிகுறியே இல்லாமல் மருத்துவமனைக்கு வருபவர்களிடம் பீதியை ஏற்படுத்தும் இதுபோன்ற நடைமுறைகள் அவசியமா என்பதை மருத்துவத் துறையினர் சிந்திக்க வேண்டும்.