Published:Updated:

கோவிட்-19 சிகிச்சையிலிருந்து நீக்கப்பட்ட பிளாஸ்மா தெரபி... பின்னணி என்ன?

பிளாஸ்மா தெரபி
பிளாஸ்மா தெரபி

பிளாஸ்மா தெரபி சிகிச்சை குறித்து இந்தியாவிலும் பெரிய அளவில் சோதனையை ஐ.சி.எம்.ஆர் நடத்தியது. அதன்முடிவுகளை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்டது.

இந்தியாவில் கோவிட்-19 தொற்றுக்கான சிகிச்சை நெறிமுறைகளிலிருந்து பிளாஸ்மா தெரபி நீக்கப்பட்டுள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்) தேசிய பணிக்குழு மற்றும் மத்திய சுகாதாரத்துறை ஆகியவை இணைந்து இந்த முடிவை அறிவித்துள்ளன.

பிளாஸ்மா தெரபி நோயாளிகளிடத்தில் செயல்படும் தன்மை குறித்த ஆராய்ச்சி முடிவு லேன்செட் மருத்துவ இதழில் மே 14-ம் தேதி வெளியானது. உலகளவில் அதிக எண்ணிக்கையிலானோர் மத்தியில் நடைபெற்ற இந்த ஆராய்ச்சியின் முடிவில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை எந்த நன்மைகளையும் அளிக்காது. வழக்கமான சிகிச்சைகளோடு ஒப்பிடும்போது பிளாஸ்மா சிகிச்சை, நோயாளிகளின் இறப்பைக் குறைக்கவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்மா தானம்
பிளாஸ்மா தானம்

பிளாஸ்மா தெரபி சிகிச்சை குறித்து இந்தியாவிலும் பெரிய அளவில் சோதனையை ஐ.சி.எம்.ஆர் நடத்தியது. அதன் முடிவுகளை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்டது. அதில் தானம் பெறும் பிளாஸ்மாவில் குறைந்த செறிவுடைய கோவிட்-19 தொற்றுக்கு எதிரான ஆன்டிபாடிகள் இருந்தால் அது சிகிச்சையில் அதிக பயனளிக்காது என்று தெரிவித்திருந்தது. சீனா மற்றும் நெதர்லாந்தில் நடைபெற்ற ஆய்விலும் பிளாஸ்மா தெரபி பயனளிக்கவில்லை என்று முடிவு பெறப்பட்டது.

பிளாஸ்மா தெரபி

ரத்தத்தில் சிவப்பு, வெள்ளை அணுக்கள், பிளேட்லட்டுகள் மற்றும் பிற கூறுகளைப் பிரித்த பிறகு கிடைக்கும் தெளிவான திரவமே பிளாஸ்மா. கோவிட் தொற்றிலிருந்து குணமான நோயாளிகளிடமிருந்து பிளாஸ்மா தானம் பெற்று சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குச் செலுத்தப்படும். கோவிட் குணமான நோயாளிகளின் பிளாஸ்மாவில் தொற்றுக்கு எதிரான ஆன்டிபாடிகள் இருப்பதால் அவை சிகிச்சைபெறும் நோயாளிகளை விரைவில் குணமாக்கும் என்ற அடிப்படையில் முதல் அலையின்போது இந்தச் சிகிச்சை அதிகமானோருக்குப் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Plasma treatment (Representational Image)
Plasma treatment (Representational Image)

இந்நிலையில் லான்செட் ஆய்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, அதன் அடிப்படையில் இந்தியாவின் சிகிச்சை நெறிமுறைகளிலிருந்து பிளாஸ்மா தெரபி நீக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகம் உட்பட பிற மாநிலங்களில் தட்டுப்பாடு நிலவும் ரெம்டெசிவிர் மருந்தை கோவிட்-19 சிகிச்சைக்கான மருந்துகள் பட்டியலிலிருந்து உலக சுகாதார நிறுவனம் கடந்த ஆண்டே நீக்கியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு