Published:Updated:

கொரோனா: 93 வயதில் நம்பிக்கையால் மீண்ட முன்னாள் குடியரசுத் தலைவரின் மனைவி

விமலா ஷர்மா
விமலா ஷர்மா ( Twitter )

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டாலே எல்லாம் முடிந்தது என நினைத்துவிடக் கூடாது. குறிப்பாக முதியவர்கள். நம்பிக்கையுடன் இருந்தால் கொரோனாவை வீழ்த்தலாம்!

இந்தியாவில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா தொடர்பான பல கசப்பான சம்பவங்கள் தொடர்ந்து நமக்கு எட்டினாலும், அவ்வப்போது சில நம்பிக்கை கதைகள் நம்மை சோர்ந்துவிடாதபடி செய்கிறது. கொரோனா வைரஸ் இளைஞர்களைவிட முதியவர்களைதான் அதிகம் பாதிக்கிறது என்பதை நாம் தொடர்ச்சியாக பார்த்து வருகிறோம்.

கொரோனா
கொரோனா

இந்தச் சூழலில் சில நாடுகளில் 100 வயதைக் கடந்த முதியவர்கள் கூட நம்பிக்கை நடைபோட்டு கொரோனாவை வீழ்த்தி வீடு திரும்பும் தகவல்கள், மக்களுக்கு பூஸ்ட் அளிக்கக்கூடியவை. இந்தியாவிலும் பல முதியவர்கள் கொரோனா என்னும் கொடிய வைரஸுக்கு எதிராகப் போராடி வெற்றி பெற்றுள்ளனர். அந்த வரிசையில் இணைந்திருக்கிறார் முன்னாள் குடியரசுத் தலைவர் ஷங்கர் தயால் ஷர்மாவின் மனைவி விமலா ஷர்மா.

ஷங்கர் தயால் ஷர்மா இந்தியாவின் 9 -வது குடியரசுத் தலைவராவார். அவர் 1992 முதல் 1997-ம் ஆண்டு வரை இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர்.

93 வயதாகும் விமலா ஷர்மா, 19 நாள் போராட்டத்துக்குப் பின்னர் தற்போது நலமுடன் வீடு திரும்பியுள்ளார். ஜூன் மாதம் 5-ம் தேதி அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால், அவருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அடுத்த நாள் வந்த பரிசோதனை முடிவில் பாசிட்டிவ் என வர, எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்துக்கு பேசிய விமலா ஷர்மாவின் மகன் அஷுடோஷ் தயால் ஷர்மா, ``எனது தாய் வீட்டை விட்டு எங்கும் செல்வதில்லை. என்றாலும் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என முடிவுகள் வந்தது, முதலில் எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. என்றாலும் உடனடியாக அவரை எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தோம். முதல் நான்கு நாள்கள் அவரது உடல்நிலை சற்று மோசமாகதான் இருந்தது. அவரது வயது 93. வைரஸ் காரணமாக அவரை நாங்கள் இழந்து விடக்கூடாது என்று நினைத்தோம்” என்றார்.

மருத்துவமனையில் 18 நாள்கள் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும் அவருக்கு வென்டிலேட்டர் உதவி தேவைப்படவில்லை. அவரது வீட்டில் இருக்கும் நபர்கள் தினமும் இருமுறை அவருடன் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள். நம்பிக்கையுடன் இருக்கும்படி வலியுறுத்தியுள்ளர்கள். `மருத்துவமனையில் தெரிந்த முகம் யாரும் அருகில் இல்லை. இருப்பவர்களின் முகங்களும் முக கவசத்தால் மூடப்பட்டு இருந்தது. என்றாலும் பயப்படாமல் நம்பிக்கையுடன் மட்டும் இருங்கள்’ என்று தொடர்ந்து வலியுறுத்தினோம்’ என்கிறார் அஷுடோஷ்.

கொரோனா | Covid-19
கொரோனா | Covid-19

தொடர்ந்து பேசிய அஷுடோஷ் , ``மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 15 நாள்களுக்குப் பிறகு மீண்டும் பரிசோதனைகள் மேற்கொண்டார்கள். அப்போது முடிவு நெகட்டிவ் என வந்தது. கடந்த செவ்வாய்கிழமை அன்று முதலே அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்ல முயற்சிகள் மேற்கொண்டோம் என்றாலும் வியாழன் அன்றுதான் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார்” என்றார்.

``கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டாலே எல்லாம் முடிந்தது என நினைத்துவிடக் கூடாது. குறிப்பாக முதியவர்கள். நம்பிக்கையுடன் இருந்தால் கொரோனாவை வீழ்த்தலாம்” என்கிறார் எய்ம்ஸ் மருத்துவர் ஒருவர்.

அடுத்த கட்டுரைக்கு