பண்டிகைக்காலத்தைத் தொடர்ந்து இப்போது நிவர் புயல்... கோவிட்-19 பாதிப்பு இனி என்னாகும்?

உஷ்ணமான நேரங்களைவிட மழை, குளிர்காலங்களில் வீசும் ஈரப்பதம் மிக்க காற்றில் கோவிட்-19 வைரஸ் மிக அதிகமான நேரம் உயிர் வாழ வாய்ப்புகள் உண்டு.
SARS-CoV-2 எனப்படும் கொரோனா வைரஸானது 2019-ம் ஆண்டு நவம்பர் முதல் நம்முடைய வாழ்வியலை முழுவதுமாக மாற்றியிருக்கிறது. பலர் கையில் கைக்குட்டை இல்லாமல் இருந்தாலும்கூட முகக்கவசம் வைத்திருக்கின்றனர். சிலர் புடவையையும் துப்பட்டாவையும், கைக்குட்டையைும் முகத்தை மறைத்திடப் பயன்படுத்துகின்றனர். ஆனால், எந்தக் கவலையும் இல்லாமல் சிலர் முகம் முழுவதும் பார்க்கும்படி சகஜமாக நடமாடுகின்றனர்.

கொரோனா இன்னும் நம்மை விட்டுச் செல்லவில்லை. இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய ஒன்று என்னவென்றால் எண்ணிக்கையில் தினமும் குறைவான தொற்றாளர்கள் இருந்தாலும், நம்மில் பலர் நோய்த்தொற்று ஏற்பட்டு அதனுடன்தான் வாழ்கின்றனர் என்பதே.
கொரோனா 85 சதவிகிதம் பேருக்கு மிகச் சாதாரண சளி, காய்ச்சலாகத் தொற்றிக் கடந்து போகலாம். மீதமுள்ள 15 சதவிகிதத்தினருக்கு நோய் தீவிரமடையலாம். அதில் 6 சதவிகிதம் பேர் மிகத் தீவிர நோய் பாதிப்புக்கு உள்ளாகலாம்.
இந்த 6 சதவிகிதம் பேருக்கும் நோய் பரவிட காரணம், மீதமுள்ள 94 சதவிகிதம் பேர்தான் என்பதை மறக்க வேண்டாம். தற்சமயம் குறைந்திருப்பது இந்த 94 சதவிகிதம் பேருக்கு வரும் தொற்றுதான். அந்த மோசமான பாதிப்புக்கு நகர்ந்து போகும் 6 சதவிகிதம் பேருடைய பாதிப்பு அப்படியேதான் இருக்கிறது.

பாதிப்புக்கு உள்ளாவோர்களில் பலருக்கும் இந்த நோய் பாதிப்பு அதிகமானதன் காரணங்கள்:
1. வைரஸ்களின் எண்ணிக்கை அதிகரிப்பு (High Viral Load)
வாய், மூக்கு, தொண்டைப் பகுதிகளில் நம் உடல் எதிர்ப்புத்திறனுக்கும் அதிகமாக நோய்க்கிருமிகள் உட்புகுவது. இதற்கு முக்கியமான காரணம் முகக்கவசம் பயன்படுத்தாதது. தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் இருப்பது. கை சுத்தம் பேணாமல் வாழ்வது.
2. இதர நோய்க் காரணிகள் (Co-Morbid Diseases)
COPD எனும் சுவாசக்குழாய் பாதிப்பு, சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், இதய மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உடலுறுப்பு மாற்று அறுவைசிகிச்சை செய்தவர்கள், புற்றுநோய் சிகிச்சையிலிருப்பவர்கள் ஆகியோருக்குத் தொற்று எதிர்வினை இல்லாத உடல்வாகு இருக்கும் என்பதால் நோய் பாதிப்பு அதிகமாகலாம்.
3. அறிகுறிகளை அலட்சியம் செய்பவர்கள்
அனைத்து நோய்கள் போலவே கோவிட்19 தொற்றும் கூட முன்னரே நமக்கு சாதாரண அறிகுறிகளைத்தான் காட்டுகிறது. அந்த அறிகுறிகளை அலட்சியம்செய்து, விஞ்ஞானத்துக்குப் புறம்பான செயல்பாடுகளால்கூட இந்த 6 சதவிகிதம் பாதிப்பாளர்கள் அதிகரிக்கின்றனர்.
இந்த மூன்று காரணங்களால் குறைந்து வரும் பாதிப்புகூட மிகவும் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.
பண்டிகைக் கொண்டாட்டங்களை எல்லாம் முடித்துவிட்டு, அனைவருடனும் சகஜமாக கூடிக் கொண்டாடிக்கொண்டு இருக்கும் மக்களுக்கு எந்த அளவில் இந்தக் கிருமி பாதித்து இருக்கிறது என்பது அடுத்த 19 நாள்களுக்குள் தெரிய வரும்.
அந்த நாள்களில் பனியும், குளிரும், மழையும் தற்போதைய நிவர் புயலுடைய தாக்கமும் இருக்க வாய்ப்பு உண்டு.
உஷ்ணமான நேரங்களைவிட மழை, குளிர்காலங்களில் வீசும் ஈரப்பதம் மிக்க காற்றில் கோவிட்-19 வைரஸ் மிக அதிகமான நேரம் உயிர் வாழ வாய்ப்புகள் உண்டு.
அதே நேரத்தில் இந்த வைரஸ் அடுத்த உடலுக்கு குறுகிய காலத்தில் பரவிவிடும் எனச் சொல்லப்படுகிறது. எனவே, இதுவரை நாம் இருந்ததைவிட மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலம் இது.

இந்தக் கொடும்தொற்றிலிருந்து உலக மக்களைப் பாதுகாத்திட சுமார் 33 தடுப்பூசி ஆய்வகங்களும், பல்லாயிரம் ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞான வல்லுநர்களுடனும், பல லட்சம் தன்னார்வலர்களின் பங்களிப்புடனும் தடுப்பூசியைக் கண்டுபிடிக்கப் போராடிக்கொண்டிருக்கின்றனர்.
இவர்களில் ஆக்ஸ்ஃபோர்டு (AZD -1222), ஃபைசர் (BNT162b2), மாடர்னா (mRNA -1273), ஸ்புட்னிக் (Gam-COVID-Vac), கோவாக்ஸின் ஆகிய 5 தடுப்பூசிகள் மிக வேகமாக முன்னேறி 3-ம் கட்ட பரிசோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தி வருகின்றன. இவை அனைத்தும் 90 சதவிகிதத்துக்கும் மேல் நோயைத் தடுத்திடும் ஆற்றல் உள்ளது தடுப்பூசிகள் என ஆய்வுகள் சொல்கின்றன.
அவசர பயன்பாட்டு அனுமதி (Emergency Use Authorisation - EUA) என்ற அடிப்படையில் உலக சுகாதார நிறுவனத்தின் அனுமதிக்காகக் காத்திருப்பதாகவும் அவை அறிவித்துள்ளன. இது நிச்சயமாக நமக்கு மிகப்பெரிய நற்செய்திதான்!

புயல், மழை, குளிர், பனி குறைந்து நமக்கான தரமான தடுப்பூசி கிடைக்கும் வரை மிக பாதுகாப்பாக இருக்க வேண்டியது கட்டாயம். ஒருவர் 85 சதவிகித சாதாரணமாக நோயைக் கையாள்பவரா இல்லை, 6 சதவிகித மிகத் தீவிர நோய் பாதிப்புக்கு செல்லப் போகிறாரா என்பது தாக்கிய நோய்க்கிருமிக்கும், தாக்கிய நபரின் உடலுக்கும் மட்டுமே தெரியும்.
நம்மைச் சுற்றியிருக்கும் அப்பாவி மக்கள் அதை அறிந்திட வாய்ப்பில்லை. நம் ஒவ்வொருவருடைய தனிமனித பொறுப்பாக இந்த உண்மையை உணர்ந்து நம் வாழ்வியலை அமைத்துக்கொள்வது சமுதாயத்துக்கும், நாட்டுக்கும் நன்மை அளிக்கும்.