Published:Updated:

Doctor Vikatan: கொரோனா மூன்றாவது அலை வருமா?

Covid
News
Covid ( AP Illustration/Peter Hamlin )

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Published:Updated:

Doctor Vikatan: கொரோனா மூன்றாவது அலை வருமா?

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Covid
News
Covid ( AP Illustration/Peter Hamlin )

கொரோனா தொற்று பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டதாகவே தெரிகிறது. ஆனாலும் மூன்றாவது அலை குறித்த அச்சம் மக்களிடம் நீங்கவில்லை. மூன்றாவது அலை வருமா, வராதா?

- ஷெரிஃப் (விகடன் இணையத்திலிருந்து)

மருத்துவர் விஜயலட்சுமி
மருத்துவர் விஜயலட்சுமி

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் விஜயலட்சுமி.

``கொரோனாவின் இரண்டாவது அலை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. ஆனாலும் இன்னமும் தினமும் கோவிட் தொற்றுக்குள்ளாகும் நபர்களைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இந்நிலையில் பலரது கேள்வியும், மூன்றாவது அலை வருமா என்பதாகவே இருக்கிறது.

கோவிட் தொற்று உச்சத்தை எட்டி, பிறகு இறங்கும்போது அந்த வைரஸ் மொத்தமாக உருமாறும்போது மூன்றாவது அலை நிச்சயம் வரும். அப்படியில்லாமல், இந்த வைரஸ் கொஞ்சம் கொஞ்சமாக மாறி, நம்முடனேயே வாழத் தொடங்கினால் அதை `எண்டெமிசிட்டி' ( Endemicity) என்று சொல்வோம். உதாரணத்துக்கு டைபாயிடு, டெங்குவை ஏற்படுத்தும் கிருமிகள் எல்லாம் நம்முடனேயே வாழ்பவை. வரும், போகும். ஓரளவில் நின்றுவிடும். பெரிய அளவில் பாதிக்காது. எனவே, கோவிட் வைரஸை பொறுத்தவரை நாம் எண்டெமிக் நிலையில் இருக்கிறோமா அல்லது அது மீண்டும் உருமாறிப் பரவுமா என்பது இப்போதைக்குத் தெரியாது.

ஆனாலும் நாம் கவனமாக இருக்க வேண்டியது முக்கியம். பாதுகாப்பு நடவடிக்கைகளை எப்போதும்போல பின்பற்ற வேண்டும். மருத்துவர்களாக நாங்கள் வைரஸ் ஆய்வுகளில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதைத் தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருப்போம். அப்படி கவனிக்கும்போது ஏதோ ஒரு வைரஸ் வித்தியாசமான அளவில் பெரிதாகத் தெரிந்தால் உடனே அலர்ட் ஆவோம். அப்படி சமீபத்தில் கவனத்துக்குள்ளானதுதான் ஏ.ஒய் 4.2. ( AY.4.2).

இது டெல்டா வைரஸின் ஒருவகை வேரியன்ட். உருமாறும் வைரஸ் வேரியன்ட்டுகள் குறித்த தகவல்களை இங்கிலாந்து அரசு தொடர்ந்து வெளியிட்டுக்கொண்டே இருக்கும். அப்படி அது கடைசியாக வெளியிட்டதில், 10 சதவிகிதம் குறிப்பிட்ட இந்த வேரியன்ட் இருப்பதைப் பதிவு செய்திருக்கிறது. இதன் பரவும் விகிதமும் சற்று அதிகமாக இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இது இந்தியாவிலும் பெரிய அளவில் வருமா என்பது தெரியாது. ஆனால் இந்த வேரியன்ட் ஏப்ரல் மாதத்திலேயே இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் பரவினால் அதன் தாக்கம் எப்படியிருக்கும், மூன்றாவது அலையை ஏற்படுத்துமா என்ற கேள்விகளுக்கெல்லாம் இப்போது பதிலில்லை. இப்போதைக்கு நாம் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டியது மூன்றாம் அலை வரலாம். அதனால் முகக்கவசம் அணிவதை எக்காரணம் கொண்டும் தவிர்க்கக்கூடாது. காய்ச்சலோ, சளி, இருமலோ இருந்தால் வெளியில் நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும்.

People queue up for COVID-19 vaccine
People queue up for COVID-19 vaccine
AP Photo / Rafiq Maqbool

ஒருவேளை இந்த வைரஸ் எண்டெமிக் நிலையை அடைந்துவிட்டால், அதற்கேற்ப நம் பொறுப்புகளை நாம் உணர்ந்து கவனமாகச் செயல்பட வேண்டும். நம் வீட்டிலுள்ள வயதானவர்கள், நீரிழிவு, இதயநோய், புற்றுநோய் உள்ளவர்களை எல்லாம் இந்த வைரஸ் தாக்கினால் உயிர்ச்சேதம் ஏற்படலாம்.

எனவே எல்லோரும் மறக்காமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். அறிகுறிகள் இருந்தால் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். வெளியில் சென்று மற்றவர்களுக்குப் பரப்புவதைத் தடுக்க வேண்டும்."

உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்; வழக்கம்போல கமென்ட் பகுதிகளில் உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும். இந்தப் புதிய பகுதி உங்கள் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும்கூட நிச்சயம் பயன்படும். ஆகவே, அவர்களிடமும் இந்தச் செய்தியைப் பகிர்ந்துகொள்ளுங்கள்! உங்கள் கேள்வி என்ன?