Published:Updated:

கேரளாவில் போடப்பட்டுள்ள ட்ரிபிள் லாக்டௌன்... தமிழகத்திற்கும் தேவைப்படுமா?

முழு ஊரடங்கு
முழு ஊரடங்கு

``ஒவ்வொரு முறையும் காரணமில்லாமல் வெளியில் சுற்றிவிட்டு வீட்டுக்குச் செல்லும்போது, தெருக்களிலிருந்து உங்கள் வீட்டுக்குள் வைரஸைக் கொண்டு செல்கிறீர்கள்.''

கேரளாவில் லாக்டெளன் நடைமுறையில் இருந்தும் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் இருப்பதால், தொற்று அதிகமாக இருக்கிற மாவட்டங்களில் ட்ரிபிள் லாக்டெளன் அறிவித்திருக்கிறது கேரள அரசு.

ட்ரிபிள் லாக்டெளன்
ட்ரிபிள் லாக்டெளன்

உலகின் பல நாடுகளில் கொரோனா முதல் அலையின்போதே, லட்சக்கணக்கில் உயிர்கள் பலியாகின. இந்தியாவிலோ, மற்ற நாடுகள் அளவுக்கு கொரோனா முதல் அலை உயிர்களைப் பறிக்கவில்லை. என்றாலும், அதிகபட்ச பாதிப்புகளை சில மாநிலங்கள் சந்தித்தன. அதில் ஒன்று கேரளா. இதனால், வழக்கமான லாக்டெளனுடன் ட்ரிபிள் லாக்டெளனையும் சென்ற வருடமே (2020) அறிவித்திருந்தது கேரளா. இதோ, கொரோனா இரண்டாவது அலையிலும் கேரளா கட்டுக்கடங்காத தொற்றுப் பரவல், அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் என்று தவித்துக்கொண்டிருக்கிறது. குறிப்பாக திரு­வ­னந்­த­பு­ரம், எர்­ணா­குளம், திருச்­சூர், மலப்­பு­ரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் தொற்றுப் பரவல் மோசமாகிக் கொண்டிருப்பதால், வரும் மே 23-ம் தேதி வரை ட்ரிபிள் லாக்டெளன் அறிவித்திருக்கிறது கேரள அரசு. மற்ற மாவட்டங்களில் வழக்கமான லாக்டெளனே தொடரும். ட்ரிபிள் லாக்டெளன் எந்தளவுக்கு மக்களை கொரோனா விடமிருந்து காப்பாற்றும் என்று தெரிந்துகொள்வதற்காக பொது மருத்துவர் அருணாச்சலத்திடம் பேசினோம்.

``தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு வீட்டுக்குள் இருந்து யாரும் வெளியே வராமலும், தொற்றுகள் அதிகமாக இருக்கிற ஒரு பகுதிக்குள் இருந்து யாரும் மற்ற பகுதிக்குச் செல்லாமலும், கொரோனா தொற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்ட ஓர் ஊரிலிருந்து மற்ற ஊர்களுக்கு யாரும் செல்லாமலும் இருப்பது என மூன்றடுக்குத் தடுப்பை ஏற்படுத்துவதுதான் ட்ரிபிள் லாக்டெளன். இந்த வகை லாக்டெளனை 14 அல்லது 21 நாள்கள் கடைப்பிடித்தால், எத்தனை மோசமான தொற்றுப் பரவலையும் கட்டுப்படுத்த முடியும்.

டாக்டர் அருணாச்சலம்
டாக்டர் அருணாச்சலம்
கொரோனா ஆய்வுக்குழுவிலிருந்து விலகிய மூத்த விஞ்ஞானி ஷாஹித் ஜமீல்! - அரசின் அழுத்தம் காரணமா?!

தற்போது, தமிழ்நாட்டில் ஒரே குடும்பத்தில் மூன்று, நான்கு பேர் கொரோனா தொற்றால் நம்மைவிட்டுப் பிரிந்து கொண்டிருக்கிறார்கள். அல்லது இரண்டு பேர் மருத்துவமனையில் இருந்தால், இரண்டு பேர் ஹோம் க்வாரன்ட்டீனில் இருக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் காரணமில்லாமல் வெளியில் சுற்றிவிட்டு வீட்டுக்குச் செல்லும்போது, தெருக்களிலிருந்து உங்கள் வீட்டுக்குள் வைரஸைக் கொண்டு செல்கிறீர்கள்; உங்களுக்குப் பிரியமானவர்களுக்கு வைரஸ் லோடையும் ஏற்றிக் கொண்டிருக்கிறீர்கள். வாரத்துக்கு ஒருநாள், உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற கடைகளில், கூட்டம் இல்லாத நேரத்தில் சென்று பொருள்களை வாங்கிக்கொள்வதுதான் பாதுகாப்பு. எல்லா நேரமும் வெளியில் செல்லலாம் என்பது தவறு. நிலைமை கைமீறிச் சென்றால், தமிழக மக்களையும் ட்ரிபிள் லாக்டெளன் மூலம் பாதுகாக்க வேண்டிய நிலை வரலாம்’’ என்றார் டாக்டர் அருணாச்சலம்.

அடுத்த கட்டுரைக்கு