Published:Updated:

குளிர்-மழைக்கால நோய்கள்... ஆரோக்கிய நடவடிக்கைகள்! - குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...

மழைக்காலம் முடிந்து அடுத்து வரும் குளிர்காலத்தில் காற்றின் ஈரப்பதத்தின் வழியாகப் பன்றிக் காய்ச்சல் பரவும் அபாயம் இருக்கிறது.

பிரீமியம் ஸ்டோரி

மழையும் குளிரும் நமக்கெல்லாம் மிகவும் பிடிக்கும்தான். ஆனால், மழை மற்றும் குளிர்காலங்களில் ஏற்படும் உடல் உபாதைகள் பலரையும் அவதிக்குள்ளாக்கிவிடும். சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால், மருத்துவ ஆலோசனைகளைப் பின்பற்றினால் மழை யையும் குளிரையும் ஜம்மென்று கடக்கலாம் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். அவர்கள் தரும் ஏ டு இஸட் மழைக்கால, குளிர்கால மருத்துவ ஆலோசனைகள் உங்களுக்காக.

சுரேஷ் குமார்
சுரேஷ் குமார்

கொரோனாவா, டெங்குவா..?

‘`கடந்த இரண்டு வருடங்களாக நாம் கொரோனாவைப் பற்றி மட்டுமே அதிகம் சிந்தித்துக்கொண்டிருக்கிறோம். கொரோனா குறித்து நாம் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை. அதேசமயம், கொரோனாவினும் கொடிய பல்வேறு நோய்கள் குறித்தும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, மழை மற்றும் குளிர்காலங்களில் மனிதர்களைக் குறிவைக்கும் கொடும் நோய்கள் சில கொஞ்சம் ஏமாந்தாலும் நம்மை பலிகொண்டுவிடும்’’ என்கிற சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் சுரேஷ் குமார், டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முதல் தடுப்பூசி வரை மழை மற்றும் குளிர்காலங்களில் நோய்த் தொற்று ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள உதவும் வழிகளைப் பகிர்கிறார்.

‘`மழைக்காலத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகம் இருப்பதால் இதுகுறித்த விழிப்புணர்வு மிக அவசியம். குறிப்பாக, குழந்தைகளைப் பொறுத்தவரையில் கொரோனாவின் தாக்கத்தைவிட டெங்கு காய்ச்சலின் தாக்கம் அவர்களுக்கு அதிகம் இருக்கும் என்பதால் இந்த விஷயத்தில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

குளிர்-மழைக்கால நோய்கள்... ஆரோக்கிய நடவடிக்கைகள்! - குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...

கொசுக்களே முதல் எதிரி!

மழைக்காலத்தில் கொசுக்கள் அதிகம் இருக்கும். சுத்தமான தண்ணீரில் பெருக்கம் செய்யக்கூடிய, பகல் நேரங்களில் கடிக்கும் கொசுக்களால்தான் டெங்கு பரவுகிறது. எனவே, கொசுக்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மிகமிக அவசியம்.

கொசுக்கடியிலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களில் வலை போடுவது பாதுகாப்பானது. உறங்குவதற்குக் கொசுவலையைப் பயன்படுத்தலாம். அதேபோல கொசுக் கடிக்காமல் இருக்க க்ரீம்களையும் சருமத்தில் தடவிக்கொள்ளலாம்.

சுத்தமான தண்ணீரில்தான் டெங்கு கொசுக்கள் வளரும் என்பதால் வீட்டைச் சுற்றி மழைத்தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, வீட்டின் கொல்லைப்புறங்களில் கிடக்கும் தேங்காய் மட்டை, டயர், தொட்டி போன்றவற்றில் தண்ணீர் தேங்கினால் அவற்றில் டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்துவிடும். எனவே, ஒருபோதும் வீட்டைச் சுற்றி எங்கும் தண்ணீர் தேங்க விடாதீர்கள்.

குளிர்-மழைக்கால நோய்கள்... ஆரோக்கிய நடவடிக்கைகள்! - குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...

பிற நோய்கள்..!

மழைக்காலம் முடிந்து அடுத்து வரும் குளிர்காலத்தில் காற்றின் ஈரப்பதத்தின் வழியாகப் பன்றிக் காய்ச்சல் பரவும் அபாயம் இருக்கிறது. இது தவிர, `Common Cold' எனப்படும் சாதாரண சளியுடன்கூடிய வைரஸ் காய்ச்சலும் குளிர்காலத்தில் பெருமளவில் பரவும்.

மழைக்காலத்தில் தண்ணீர் மாசுபாடடைவது நாம் சந்திக்கின்ற மிக முக்கியப் பிரச்னையாக உள்ளது. நாம் குடிக்கும் குடிநீருடன் மழைத் தண்ணீர் மற்றும் சாக்கடைத் தண்ணீர் கலக்கும்போது தண்ணீர் அசுத்தமாகிவிடும். இந்தத் தண்ணீரைக் குடிக்கும்போது வயிற்றுப்போக்கு, டைபாய்டு, ஹெபடைடிஸ்-ஏ, காலரா போன்ற நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

அசுத்தமான தண்ணீரைப் போலவே அசுத்தமான உணவின் வழியாகவும் ஹெபடைடிஸ்-ஏ, டைபாய்டு, காலரா போன்ற வைரஸ் தொற்றுகள் பரவுகின்றன. அதுமட்டுமல்லாமல் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்தும் இது மற்றொருவருக்குப் பரவலாம்.

ஹெபடைடிஸ்-ஏ, டைபாய்டு போன்றவற்றின் தாக்கத்திலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?

மழைக்காலத்திலும் சரி, குளிர்காலத்திலும் சரி தண்ணீரை நன்கு காய்ச்சி வெதுவெதுப்பாகப் பருக வேண்டும். உணவைச் சூடுபடுத்தி உண்ண வேண்டும். குறிப்பாக, காய்கறிகள் சாலட், பழ சாலட், ஐஸ்க்ரீம், பானிபூரி போன்ற சூடாக்கப்படாத உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது சாலச்சிறந்தது.

உயிர்காக்கும் தடுப்பூசி!

எப்படி கொரோனாவை வெல்லும் பேராயுதமாகத் தடுப்பூசி பார்க்கப்படுகிறதோ அதேபோல மழை மற்றும் குளிர்காலத்தில் உண்டாகும் நோய்த் தொற்றுகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ளவும் பிரத்யேகத் தடுப்பூசிகள் இருக்கின்றன.

டைபாய்டு நோய்த்தொற்று சிறுவயதினரை அதிகம் தாக்கக்கூடியது. எனவே, அவர்களுக்கு டைபாய்டு தடுப்பூசியை அவசியம் போட வேண்டும்.

அதேபோல ஹெபடைடிஸ்-ஏ வைரஸ் தொற்றுப் பரவாமல் தடுக்க, தடுப்பூசி இருப்பதால் மருத்துவரின் ஆலோசனையுடன் இதையும் உரிய நேரத்தில் போட்டுக்கொள்வது பாதுகாப்பானது.

பன்றிக்காய்ச்சல் வராமல் தடுக்கவும் தடுப்பூசி உண்டு. பனிக்காலத்தில் இந்த `ஸ்வைன் ஃப்ளூ' பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால் மருத்துவரின் ஆலோசனையின்படி இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம். குறிப்பாக, ஸ்வைன் ஃப்ளூ எனப்படும் பன்றிக்காய்ச்சல் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களில் ஒன்றால் ஏற்படுவது என்பதால் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டாலே அது பன்றிக் காய்ச்சலை உண்டாக்கும் H1N1 வைரஸ் மற்றும் H3N2 போன்ற மற்ற இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களிலிருந்தும் நம்மைப் பாதுகாத்துவிடும்.

எலிக்காய்ச்சலுக்குத் தடுப்பூசி இல்லை!

எலிக்காய்ச்சல் வராமல் தடுப்பதற்கென்று தனியாகத் தடுப்பூசி எதுவும் இல்லை. சிகிச்சை மட்டுமே உண்டு. ஆனால், மழைக்காலத்தில் செருப்புப் போட்டு நடப்பது, வெளியில் போய்விட்டு வீடு திரும்பியதும் காலை நன்கு கழுவி சுத்தம் செய்வது போன்றவற்றின் மூலம் இந்த நோய்த்தொற்றிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடியும்” என்கிறார் தொற்றுநோய் சிகிச்சை மருத்துவர் சுரேஷ் குமார்.

ஃபரூக் அப்துல்லா
ஃபரூக் அப்துல்லா

குழந்தை, முதியோர்... குளிர்காலம்!

குழந்தைகள், வயது வந்தோர் மற்றும் முதியோர் என எல்லா வயதினரும் இந்த மழை மற்றும் குளிர்காலத்தைப் பாதுகாப்புடன் கடப்பதற்கு சிவகங்கையைச் சேர்ந்த பொது மருத்துவர் ஃபரூக் அப்துல்லா தரும் மிக முக்கிய ஆலோசனைகள் இதோ உங்களுக்காக.

‘`மழையும் குளிரும் வயது வேறுபாடின்றி உடல் உபாதைகளைக் கொடுத்தாலும் இவற்றால் முதியோர் பாதிக்கப்படும் வாய்ப்புகள் மிக அதிகம். குளிர்காலத்தில் உண்டாகும் அதிக குளிர் காரணமாக அவர்களின் கால் விறைத்துவிடும். குறிப்பாக, மழை மற்றும் குளிர்காலத்தில் கால் கையைப் பிடித்துச் சுண்டி இழுப்பதாக முதியோர் சொல்வதுண்டு. கை கால்களுக்கு ரத்த ஓட்டம் சரியாகச் செல்லாமல் ரத்த நாளங்கள் சுருங்குவதால் மேற்சொன்ன பிரச்னை உண்டாக வாய்ப்புள்ளது.

இக்காலகட்டங்களில் முதியோருக்கு மூச்சு விடுவதில் சிரமம், இளைப்பு, மூக்கடைப்பு போன்ற பிரச்னைகள் உண்டாகலாம். அதேபோல ஆஸ்துமா போன்ற நுரையீரல் சார்ந்த பிரச்னை உள்ளவர்களுக்கு இந்நோயின் தீவிரம் அதிகமாகவும் வாய்ப்புள்ளது.

இளையவர்களுடன் ஒப்பிடுகையில் முதியோரின் நோய் எதிர்ப்புத் திறன் குறைவாகவே இருக்கும். எனவே, வீட்டிலுள்ள மற்ற உறுப்பினர்கள் வெளியில் சென்று அதன் மூலம் நோய்த்தொற்றுக்கு ஆளானால் அவர்களிட மிருந்து முதியோருக்கு எளிதில் நோய்த்தொற்று பரவும் அபாயம் இருக்கிறது.

குளிர்-மழைக்கால நோய்கள்... ஆரோக்கிய நடவடிக்கைகள்! - குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...

முதியோரைப் பாதுகாக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

முதியோருக்குக் காற்றோட்டமான அறை வழங்கப்பட வேண்டும். அந்த அறைக்குள் மற்ற குடும்ப உறுப்பினர்கள் அடிக்கடி பிரவேசிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதையும் மீறி அவர்களைப் பார்க்க விரும்பினால் சுகாதாரம் பேணி அறைக்குள் செல்ல வேண்டும். குறிப்பாக, வெளியில் சென்றுவிட்டு திரும்பிய பின்னர், அப்படியே முதியோரைச் சென்று பார்க்கக் கூடாது.

தரையில் கால்கள் நேரடியாகப் படும்படி முதியோர் நடப்பதைத் தவிர்ப்பது நல்லது. வீட்டுக்குள்ளேயே செருப்பு அணிவது நல்லது. முடிந்தால் சாக்ஸ் அணிந்து அதன் மேல் செருப்புப் போட்டு நடக்கலாம்.

இக்காலங்களில் முதியோர் உண்ணும் உணவுகள் எளிதில் ஜீரணமாகும்படி இருப்பது மிக அவசியம். எண்ணெயில் பொரித்த அல்லது வறுத்த உணவு களையும் அதிக மசாலா சேர்க்கப்பட்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.

உடல் உபாதைகளைச் சமாளிக்கத் திட்டமிடுதல் அவசியம்!

முதியோர் என்றில்லை, யாராக இருந்தாலும் மழை மற்றும் குளிர்காலத்தில் மருந்து, மாத்திரைகள் வாங்குவதிலும் சாப்பிடுவதிலும் கவனம் காட்டுங்கள்.

ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் போன்ற நோய்களுக்கு எப்போதும் சாப்பிடும் மருந்தைத் தேவைக்கும் சற்று அதிகமாக வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

மழை மற்றும் குளிர்காலம் வந்துவிட்டாலே சிலருக்கு ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் அடிக்கடி தலைதூக்கும். இன்னும் சிலருக்கு திடீரென்று மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகும். இந்தப் பிரச்னைகளுக்கு நிவாரணம் அளிக்கும் ஸ்பிரே போன்ற அத்தியாவசிய மருந்துகளை வாங்கி இருப்பு வைத்துக்கொள்வது சிறந்தது. அதேபோல வலிப்பு நோய் உள்ள முதியோர், வயது வந்தோர் மற்றும் குழந்தைகள் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம் இது. நமக்குத்தான் சமீபகாலமாக வலிப்பு வரவில்லையே என்று நினைத்து சிலர் வலிப்பு நோய்க்கான மருந்துகளைத் தினமும் உட்கொள்ளாமல் விட்டுவிடுவர். ஆனால், குளிர்காலம் வலிப்பு நோயைத் தூண்டிவிடும் தன்மை கொண்டது என்பதால் இதற்கான மருந்துகளை மழை மற்றும் குளிர்காலத்தில் தவறாமல் முறையாக எடுக்க வேண்டும்.

வீட்டில் இருக்க வேண்டிய முதலுதவிப் பெட்டி!

மழை, குளிர் என்று பருவநிலை மாற்றங்கள் வருகிறபோது அவற்றின் மூலம் உண்டாகும் உடல் உபாதைகளைச் சமாளிக்க வீட்டில் முதலுதவிப் பெட்டி ஒன்று இருப்பது நல்லது. பெரியவர்களுக்குப் பயன்படும் பாரசிட்டமால் மாத்திரை, குழந்தைகளுக்கான பாரசிட்டமால் சிரப் போன்றவை முதலுதவிப் பெட்டியில் இடம்பெறுவது நல்லது.

மூக்கடைப்பு ஏற்பட்டால் அதைச் சரிசெய்ய உதவும் சொட்டு மருந்து போன்ற வையும் முதலுதவிப் பெட்டியில் இடம்பெறலாம்.

வீட்டில் குழந்தைகள் இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு போன்றவை வந்தால் கொடுப்பதற்கான மருந்துகளுக்கும் முதலுதவிப் பெட்டியில் இடம் கொடுங்கள். ஆனால், இவை போன்ற மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே பெற வேண்டும். இம்மருந்துகளைத் தேவைப்படும்போது மருத்துவரிடம் கேட்டுப் பயன்படுத்துவது பாதுகாப்பானது.

யூகலிப்டஸ் தைலம், கை கால் வலிக்கான ஜெல், தைலம் போன்றவை அவசரத்துக்குக் கைகொடுக்கும் என்பதால் இவையும் முதலுதவிப் பெட்டியில் இருக்க வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக மருந்துகள் அனைத்தின் எக்ஸ்பயரி தேதியையும் கவனமுடன் பார்த்து முதலுதவிப் பெட்டியில் வையுங்கள். இதுதான் எல்லா வற்றிலும் மிகமிக முக்கியமானது.

ஆவிபிடிப்பதில் கவனம் தேவை!

ஆவிபிடிக்கும் பழக்கத்தை சமீபகாலமாகப் பலரும் பின்பற்றி வருகிறார்கள். அதிலும் மழை மற்றும் குளிர்காலத்தில் ஆவிபிடிக்கும் பழக்கம் மக்களிடையே அதிகம் இருக்கிறது. ஆனால், சளி பிடித்தாலே ஆவிபிடிக்க வேண்டும் என்று எந்தவோர் அவசியமுமில்லை. சைனஸ் மற்றும் மூக்கடைப்பு உள்ளவர்களுக்கு இது பலன் கொடுக்கும். அனைவரும் ஆவிபிடிக்கத் தேவை இல்லை. குறிப்பாக, மருத்துவரின் அறிவுரையின்படி ஆவிபிடிப்பதே முறையானது, பாதுகாப்பானது.

கொதிக்கும் தண்ணீரில் ஆவிபிடிக்கிறேன் என்று பலரும் முகத்தைக் காயமாக்கிக்கொள்ளும் சம்பவம் நிறைய நடக்கிறது. குறிப்பாகக் குழந்தைகள் இப்படி அதிகம் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ஆவிபிடிக்கும்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

அதேபோல ஆவிபிடிப்பதற்கு வெறும் வெந்நீரே போதுமானது. கொதிக்கும் தண்ணீரில் யூகலிப்டஸ் எண்ணெய், தலைவலி பாம் போன்றவற்றைக் கலந்து ஆவிபிடிப்பதைத் தவிர்ப்பது நல்லது. அதிலும், குறிப்பாக சிலர் வெந்நீரில் யூகலிப்டஸ் எண்ணெயை கலந்து அதில் குழந்தைகளை ஆவிபிடிக்க வைப்பர். இப்படிச் செய்வதால் குழந்தைகளுக்கு வலிப்பு வரும் அபாயம் உண்டு. எனவே, இவ்விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்படுவது பாதுகாப்பானது.

போர்வை, ஸ்வெட்டர், ஷால் கைகொடுக்கும்!

மழை மற்றும் குளிர்காலத்தில் குழந்தைகள் மற்றும் வயது வந்தோரைவிட முதியோருக்கு குளிர் அதிகம் இருக்கும். அவர்களது உடலில் கொழுப்பின் அளவு குறைவாக இருப்பதே இதற்கு காரணம். எனவே, இவர்கள் குளிரைத் தாக்குப்பிடிக்க ஸ்வெட்டர், ஷால் போன்றவற்றை அணியலாம். தேவையெனில் கம்பளிப் போர்வையையும் உறங்கும்போது பயன்படுத்தலாம்.

குளிர்-மழைக்கால நோய்கள்... ஆரோக்கிய நடவடிக்கைகள்! - குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...

குளிரை அதிகமாக்கும் ஹைப்போ தைராய்டு!

ஹைப்போ தைராய்டு பிரச்னை உள்ளவர்களால் குளிரைத் தாங்க முடியாது என்றாலும் தைராய்டு அளவினை சீராக வைத்துக்கொள்ள உதவும் மருந்துகளை சரியாக எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு மழை மற்றும் குளிர்காலத்தில் பிரச்னை ஏற்படாது.

சைனஸ், மூக்கடைப்பு மற்றும் பருவநிலை சார்ந்த ஒவ்வாமை (Seasonal Allergy) போன்ற பிரச்னைகளைக் கொண்டுள்ளவர்கள் குளிர்காலம் மற்றும் மழைக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்பே மருத்துவரிடம் சென்று தங்களது பிரச்னைகளுக்கான மருத்துவ ஆலோசனைகளைப் பெறலாம். மருத்துவர் பரிந்துரைக்கும் சிகிச்சைகளை முன்கூட்டியே எடுக்க ஆரம்பித்தால் சிக்கல்கள் ஏதுமின்றி மழை மற்றும் குளிர்காலத்தை இவர்களால் கடக்க முடியும்.

சைனஸ் தொல்லை உள்ளவர்களுக்கு குளிர்காலம் கொஞ்சம் சவால் நிறைந்ததாகத்தான் இருக்கும். இவர்கள் வெறும் தண்ணீரில் ஆவிபிடித்தால் மூச்சுப் பாதையில் உள்ள அடைப்புகள் சரியாகி தலைவலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

பனிக்காலத்தில் வெளியே செல்லும்போது குளிர்ந்த காற்று காதுகளை பாதிக்காத வண்ணம் இரண்டு காதுகளிலும் பஞ்சை வைத்துக்கொள்ளலாம். சிலர் பஞ்சை சிறிய உருண்டைகளாக உருட்டி காதுகளுக்குள் வைப்பர். இப்படிச் செய்யும்போது பஞ்சு காதுக்குள் சென்றுவிட வாய்ப்பிருக்கிறது. எனவே, பஞ்சைப் பெரிதாக உருட்டி இரண்டு காதுகளிலும் வைத்துக்கொள்ளலாம். அதேபோல இரண்டு காதுகளையும் மூடும்படியான `Ear Muffs' கடைகளில் கிடைக்கிறது. இதை அணிந்துகொண்டும் வெளியே செல்லலாம்.

பிடிவாதப் பழக்கம் வேண்டாம்!

சிலர் காலையில் சீக்கிரம் எழுந்து பச்சைத் தண்ணீரில் குளிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பர். வெந்நீரில் குளிப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல என்பது போன்ற தவறான நம்பிக்கையையும் சிலர் கொண்டிருப்பர். சீதோஷ்ண நிலையைப் பொறுத்து தினசரிப் பழக்கங்களை மாற்றிக்கொள்ளலாம். குளிர்காலத்தில் வெந்நீரில் குளிக்கலாம். அதில் எந்தத் தவறும் கிடையாது'' என்கிறார் பொது மருத்துவர் ஃபரூக் அப்துல்லா.

அருள் அமுதன்
அருள் அமுதன்

கைகொடுக்கும் சித்த மருத்துவம்!

மழை மற்றும் குளிர்காலங்களில் சளி, மூக்கடைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல், தலை பாரம், காய்ச்சல் போன்ற தொல்லைகள் வருவது இயல்பே. இந்தப் பிரச்னை களுக்கு நம் வீட்டுச் சமையலறையில் உள்ள அஞ்சறைப் பெட்டியிலேயே மருந்து இருக்கிறது என்கிறார் கன்னியா குமரியைச் சேர்ந்தவரும் மணிப்பால் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியருமான சித்த மருத்துவர் அருள் அமுதன். குழந்தைகள், வயது வந்தோர், முதியோர் என்று ஒவ்வொரு வயதினருக்கும் பயன்படும்படியாக அவர் தரும் கை வைத்தியக் குறிப்புகள் இங்கே.

``சித்தர்கள் ஒரு வருடத்தை கார்காலம், கூதிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனில்காலம், முதுவேனில்காலம் என்று 6 பருவங்களாகப் (Seasons) பிரித்துள்ளனர். இயற்கையின் இந்தக் காலமாற்றத்துக்கு ஏற்ப நம்மைப் பாதுகாக்கும் வழிமுறைகளையும் அவர்கள் விரிவாகச் சொல்லிச் சென்றுள்ளனர். இந்த வழிமுறைகளை நாம் பின்பற்ற ஆரம்பித்தால் மழையோ, குளிரோ, வெயிலோ நம்மை எதுவும் செய்துவிடாது.

மாயம் செய்யும் மூன்று!

வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று உயிர்த்தாதுகளும் மனித உடலுக்குள் உண்டு. இந்த மூன்றும் தன் அளவை விட மிகுந்தாலோ, குறைந்தாலோ நோய் வரும். இதைப் போலவே பூமிக்கும் வாதம், பித்தம், கபம் என்னும் மூன்றும் உண்டு. குறிப்பாக, மழைக்காலங்களில் (கார்காலம், கூதிர்காலம்), பூமியின் கபம் அதிகரிக்கும், பித்தம் குறையும். மழைக்காலத்தைத் தொடர்ந்து வரும் குளிர் அல்லது பனிக்காலத்தில், (முன்பனிக்காலம், பின் பனிக்காலம்) கபத்துடன், வாதமும் சேர்ந்து அதிகரிக்கும். இந்த அதிகரிப்புதான் மனிதனுக்குள்ளும் கபத்தன்மை யையும் வாதத்தன்மையையும் அதிகரித்து இந்தக் காலகட்டங்களில் குறிப்பிட்ட நோய்களைத் தருகின்றன. குறிப்பாக, பூமியின் கபத்தன்மை அதிகரிப்பதால், பல கிருமிகள் பெருகி வாழும். இவை நமக்கு நோய்களை ஏற்படுத்தும். இந்தக் காலம் மாறிவிட்டால் இந்நோய்களும் தானாகக் காணாமல் போய்விடும். இந்தக் காலகட்டத்தில், நம்மை எப்படி நாம் பாதுகாத்துக்கொள்கிறோம் என்பதுதான் நம் கண்முன் இருக்கும் சவாலே.

கபமா, வாதமா? உடல் அறிகுறிகளே காட்டிக்கொடுத்துவிடும்!

மழை மற்றும் குளிர்காலங்களில் கபம் அதிகரிக்கும்போது சளி, மூக்கடைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல், தலைபாரம், காய்ச்சல், ஆஸ்துமா போன்ற தொல்லைகள் வரும். வாதம் அதிகரிக்கும்போது சிலருக்குக் கை கால்வலி, தோல் வறட்சி, நரம்பு - எலும்பு வலிகளும் உண்டாகும். மேற்சொன்ன இந்த அறிகுறிகளிலிருந்து நமக்கு வந்திருக்கும் பிரச்னை கபத்தினாலா, வாதத்தினாலா என்பதைப் பகுத்தறிய முடியும்.

கபத்தை அதிகரிக்கும் உணவுகளுக்கு `நோ' சொல்லுங்கள்!

வெளியிலிருந்து, அதாவது பூமியிலிருந்து நம்மை தாக்கும் கபத்திலிருந்து நம்மை பாதுகாக்க கபத்தை குறைக்கும் உணவு, மூலிகைகள் மற்றும் வாழ்வுமுறைகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். உடலைக் குளிர்வித்து கபத்தை அதிகரிக்கும் நீர்ச்சத்து அதிகமாக உள்ள வெள்ளரிக்காய், பூசணிக்காய், சுரைக்காய், இளநீர் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். மிகக் குறிப்பாக, ஐஸ்க்ரீம் போன்ற உணவுப் பண்டங்களை இந்தக் காலத்தில் சாப்பிடாமல் இருப்பது நல்லது. அதேபோல இனிப்புச் சுவையுள்ள உணவுப் பண்டங்கள் கபத்தை மேலும் அதிகரிக்கும் என்பதால் இவற்றையும் தவிர்ப்பது சாலச் சிறந்தது.

கபத்தைக் குறைக்க எவற்றை உண்ணலாம்?

உடலின் வெப்பத்தை அதிகரித்து, கபத்தைக் குறைக்கக்கூடிய கத்திரிக்காய், வழுதனங்காய் (நீண்ட பச்சை கத்திரிக்காய்), சுண்டைக்காய், மணத்தக்காளி, நார்த்தங்காய், வெற்றிலை, தூதுவளை போன்ற வெப்பத்தை அதிகரிக்கும் காய்கறிகளை உணவில் தினமும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

குளிர்-மழைக்கால நோய்கள்... ஆரோக்கிய நடவடிக்கைகள்! - குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...

ரசம் என்னும் பேரமுதம்!

இந்த மழை மற்றும் குளிர்காலத்தில் தினமும் கண்டிப்பாக ரசம் வைத்து உண்ண வேண்டும்.

குறுமிளகு (நல்ல மிளகு), மஞ்சள், சோம்பு, பெருங்காயம், சுக்கு, ஏலக்காய், வெந்தயம், சின்ன வெங்காயம் போன்றவை ரசத்தில் கட்டாயம் இடம்பெற வேண்டும். நம் வீட்டின் சமையலறையிலும், அஞ்சறைப் பெட்டியிலும் இருக்கும் இந்த மருந்துப் பொருள்கள் மூலம் செய்யப்படும் ரசம் நிச்சயம் மனதையும் உடலையும் இதமாக்கும்.

ரசத்தில் வெரைட்டி காட்டுங்கள்!

ஒரே மாதிரியாக ரசம் செய்து சாப்பிடுவதற்குப் பதிலாக அதில் சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்து அதன் மூலம் ருசியையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்திக்கொள்ளுங்கள்.

சட்டென்று வைக்கலாம் வெற்றிலை ரசம்...

நீங்கள் எப்போதும் வைக்கும் ரசத்தில் வெற்றிலையை நறுக்கிச் சேர்த்தால் அது வெற்றிலை ரசமாகிவிடும். இந்த வெற்றிலை ஒரு நல்ல மருந்து. சளி சுரப்பதைக் கட்டுப்படுத்துவதில் வெற்றிலைக்கு நிகர் வெற்றிலைதான்.

துளசி ரசமும் சூப்பர்தான்!

எப்படி வெற்றிலை சளி சுரப்பைக் கட்டுப்படுத்துமோ அதேபோல, உருவாகும் சளியை வெளியே தள்ளுவதில் துளசி சிறந்தது. எனவே, சளிப்பிடித்தவர்கள் வெற்றிலை ரசத்தைச் சாப்பிடுவது போலவே துளசியையும் ரசமாகச் செய்து பருகலாம். அல்லது சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். ரசமாகப் பருக விருப்ப மில்லை எனில், தேநீர் தயாரிக்கும்போது துளசியையும் சேர்த்துத் தேநீர் தயாரித்துப் பருகலாம்.

சளியை அண்டவிடாமல் செய்யும் காயகல்ப மூலிகை!

மழைக்காலத்தில் நீங்கள் கட்டாயம் பயன்படுத்த வேண்டிய ஒரு மூலிகை தூதுவளை. இந்தத் தூதுவளைக் கீரையைச் சட்னி செய்து சாப்பிடலாம். அல்லது தூதுவளையைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடிநீராகவும் பயன்படுத்தலாம். இதை நீங்கள் உணவில் சேர்த்து வரவர சளி உங்கள் பக்கம் வரவே வராது. சித்த மருத்துவ மூலிகைகளான தூதுவளை, கண்டங்கத்திரியால் செய்யப்பட்ட பொடிகள், லேகியங்கள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். இவையும் மழை மற்றும் குளிர் காலங்களில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

நொச்சி இலையை மறக்காதீங்க!

மழை மற்றும் குளிர்காலம் வந்துவிட்டாலே சளி, மூக்கில் நீர் ஒழுகுதல், தலை பாரம் போன்றவையும் கூடவே வந்துவிடும். இவற்றைச் சரிசெய்யவும் ஓர் இயற்கை வழி இருக்கிறது. நாட்டுமருந்துக் கடைகளில் நொச்சி இலை கிடைக்கும். இதை வாங்கி நீரில் போட்டுக் கொதிக்க வைத்து, ஆவி (வேது) பிடிக்க வேண்டும். இந்த நொச்சி இலை கிடைக்கவில்லையென்றாலும்

கவலை வேண்டாம். வெறும் நீரில் உப்புபோட்டுக் கொதிக்க வைத்து அதில் ஆவிபிடிக்கலாம். இது நுரையீரல் மற்றும் மூக்கின் பக்கத்திலுள்ள சைனஸ் அறைகளில் உள்ள சளியைக் கரைத்து வெளியேற்றும். அங்கே நுழைந்துள்ள கிருமிகளையும் கொல்லும்.

மூக்கடைப்பை விரட்டும் மஞ்சள், மிளகு வைத்தியம்!

மழை மற்றும் குளிர்காலங்களில் மூக்கடைப்பு ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். இதை விரட்டவும் எளிமையான ஒரு வழி இருக்கிறது. உலர்ந்த மஞ்சள் கொம்பு ஒன்றை எடுத்து அதை அடுப்பில் காட்டி எரியவிடுங்கள். பின்னர், அதிலுள்ள தீயை அணைத்தால் ஏற்படும் புகையை சுவாசியுங்கள். இவ்வாறு செய்யும்போது மூக்கடைப்பு அகலும். அதுமட்டுமல்லாமல் கிருமிகளை அழித்து மூக்கு, சைனஸ் அறைகள் மற்றும் நுரையீரலைச் சுத்தமாக வைத்திருக்கவும் இது உதவும்.

மூக்கு முற்றிலும் அடைத்துவிட்டாலும் கவலை வேண்டாம். குறுமிளகு என்று சொல்லக்கூடிய நல்ல மிளகை ஊசியில்குத்தி, நெருப்பில்காட்டி, பின்னர் அதிலிருந்து எழும் புகையை சுவாசிக்க சளியால் அடைத்த மூக்கை உடனே திறக்கும்.

காய்ச்சல் வராமல் இருக்க உதவும் தடுப்பு மருந்து!

நிலவேம்புக் குடிநீர் உடலின் நோய் எதிர்ப்புத் திறனை அதிகப்படுத்துவதோடு காய்ச்சலைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. அதுமட்டுமல்லாமல் காய்ச்சல் வராமல் தடுக்க உதவும் தடுப்பு மருந்தாகவும் இது திறம்படச் செயலாற்றும் தன்மை கொண்டது.

குளிர்-மழைக்கால நோய்கள்... ஆரோக்கிய நடவடிக்கைகள்! - குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...

காய்ச்சலுக்குக் கைவைத்தியம் என்ன?

காய்ச்சல் வந்துவிட்டால் சுக்கு, குறுமிளகு, மல்லி (தனியா), துளசி, வெற்றிலை போன்றவற்றை நீர் சேர்த்துக் காய்ச்சி கஷாயமாக்கி குடித்தால் வியர்வை வெளியேறி காய்ச்சல் மற்றும் சளி தீரும்.

குழந்தைகளுக்கு சளித்தொல்லை இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

குளிர்-மழைக்கால நோய்கள்... ஆரோக்கிய நடவடிக்கைகள்! - குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...

கைக்குழந்தைகளுக்கு...

10 துளசி இலைகளை எடுத்து இட்லிப் பாத்திரம் அல்லது புட்டு செய்யும் பாத்திரத்தில் வைத்து நீராவியில் வேகவைக்கவும். பின்னர், இதன் சாற்றைப் பிழிந்து, அதனுடன் சிறிது தேன் சேர்த்துக் கொடுக்கலாம். இதைப் போலவே, கற்பூரவல்லி இலையையும் செய்யலாம்.

குளிர்-மழைக்கால நோய்கள்... ஆரோக்கிய நடவடிக்கைகள்! - குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...

சிறு குழந்தைகளுக்கு...

இரண்டு தூதுவளை இலையில் (முள்ளை நீக்கிவிட்டு) 10 சொட்டுத் தேன் விட்டு அதை அப்படியே கடித்துத் தின்னச் சொல்லலாம். துளசி இலையையும் அப்படியே மென்று தின்னப் பழக்கலாம். கற்பூரவல்லி இலையின் சாற்றை எடுத்து 5 மில்லி அளவில் குடிக்கச் செய்யலாம். கற்பூரவல்லி இலையில் பஜ்ஜி செய்து கொடுக்கலாம். பருப்புவடை செய்யும்போது, அதனுடன் தூது வளை இலைகளை நறுக்கிச் சேர்த்துக் கலந்து வடை செய்தும் கொடுக்கலாம்.

குளிர்-மழைக்கால நோய்கள்... ஆரோக்கிய நடவடிக்கைகள்! - குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...

நோய் எதிர்ப்புத் திறனை வளர்க்கும் உரை மாத்திரை!

`உரை மாத்திரை' என்ற உளுந்தளவு மாத்திரை சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும். இதைப் பிறந்த குழந்தை முதல் 14 வயதுவரை உள்ள குழந்தைகள் வரை தரலாம். பிறந்த குழந்தைக்கும், ஒரு வயதுவரையிலும், காலையில் குழந்தை குளித்த பின்னர், வெந்நீரில் அல்லது தேனில் இந்த மாத்திரையை உரசி, நாக்கில் தடவிவிட வேண்டும். ஒரு வயதுக்குப் பின்னர் 14 வயதுவரையிலும் தினமும் ஒரு உரை மாத்திரை எனக் காலை குளித்த பின்னர், உணவுக்கு முன்னர் சாப்பிட்டு வந்தால் 80 சதவிகிதம் நோய்களை வராமலே தடுத்துவிடலாம். இந்த உரை மாத்திரை குழந்தைகளின் நோய் எதிர்ப்புத் திறனை வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது.

குளிர்-மழைக்கால நோய்கள்... ஆரோக்கிய நடவடிக்கைகள்! - குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...
Muenz

மூலிகைத் தோட்டம் அவசியம்!

ஒவ்வோர் ஆண்டும் மழையும் குளிரும், அவை சார்ந்த நோய்களும் வந்து வந்துதான் போகிறது. எனவே, நோய்களிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள ஒவ்வொரு வீட்டிலும் பள்ளியிலும், ஊர்ப் பொதுவிடங்களிலும் கண்டிப்பாக மழைக்கால மூலிகைத்தோட்டம் அமைக்க முயற்சி எடுக்க வேண்டும். அதில் ஆடாதோடை, நொச்சி, தூதுவளை, கண்டங்கத்தரி, துளசி, கருந்துளசி, கற்பூரவல்லி, வெற்றிலை, திப்பிலி போன்ற மூலிகைகளை நட்டு வளர்த்து வந்தால் இவற்றைக்கொண்டு சின்னச் சின்ன உடல் உபாதைகளுக்கு செலவேயில்லாமல், பக்கவிளைவுகள் இல்லாமல் கை வைத்தியம் பார்த்துக்கொள்ளலாம்” என்கிறார் சித்த மருத்துவர் முனைவர் அருள் அமுதன்.

மழை, குளிரைக் கடப்போம் ஆரோக்கியத்துடன்!

*******

குளிர்-மழைக்கால நோய்கள்... ஆரோக்கிய நடவடிக்கைகள்! - குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...

எலிக்காய்ச்சல்... உஷார்!

டெங்கு காய்ச்சலைப் போலவே மழைக்காலத்தில் எலிக் காய்ச்சலும் மனிதர்களைத் தாக்க வாய்ப்பிருக்கிறது. ஆங்காங்கே தேங்கியிருக்கும் மழைத்தண்ணீரில் எலியின் சிறுநீர் கலந்திருக்கும் பட்சத்தில், காலில் உள்ள வெடிப்புகள் வழியாக எலியின் சிறுநீரில் உள்ள பாக்டீரியாக்கள் நம் உடலுக்குள்ளே செல்வதற்கு வாய்ப் பிருக்கிறது. இதன் காரணமாகக் காய்ச்சல் உண்டாகும். எனவே, நடக்கும்போது உஷாராக இருக்க வேண்டும்.

குளிர்-மழைக்கால நோய்கள்... ஆரோக்கிய நடவடிக்கைகள்! - குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...

எந்தெந்த வயதுகளில், யார் யார், என்னென்ன தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்?

இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசியை ஆறு மாதக் குழந்தை முதல் எந்த வயதினரும் போட்டுக்கொள்ளலாம்.

டைபாய்டு தடுப்பூசி இரண்டு வயதுக்கு மேலிருந்து போடப்படுகிறது. இதற்கும் அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. என்றாலும் பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகளுக்கே இந்த டைபாய்டு தடுப்பூசி இலக்காகக் கொள்ளப்படுகிறது.

ஹெபடைடிஸ்-ஏ தொற்றுக்கான தடுப்பூசி ஒரு வயதுக்கு மேலுள்ள குழந்தைகளுக்குப் போடப்படுகிறது.

குளிர்-மழைக்கால நோய்கள்... ஆரோக்கிய நடவடிக்கைகள்! - குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...

மழையிலும் குளித்தே ஆக வேண்டுமா?

கொட்டும் மழையிலும் முதியோர் குளித்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் எதுவும் கிடையாது. சீதோஷண நிலையை வைத்தே அது முடிவு செய்யப்பட வேண்டும். வெயில் காலத்தில் உடல் சூடாக இருக்கும்போது தானாகவே குளிக்கத் தோன்றும். ஆனால், குளிர்காலத்தில் உடலும் குளிராக இருக்கும் என்பதால் அப்போது குளிக்கத் தோன்றாது. எனவே, முதியோர் தங்களது தேவைக்கேற்ப குளிக்கும் முடிவை எடுக்கலாம். ‘குளிக்க வேண்டும் போல இருக்கிறது’ என்று தோன்றினால் தாராளமாகக் குளிக்கலாம். ‘இன்று வேண்டாம்’ என்று நினைத் தால் குளிக்காமல் இருக்கலாம். அதிலொன்றும் தவறில்லை.

குளிர்-மழைக்கால நோய்கள்... ஆரோக்கிய நடவடிக்கைகள்! - குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...

ஆன்ட்டிபயாடிக் அலர்ட்!

ஒருபோதும் ஆன்ட்டிபயாடிக் மருந்துகளை முதலுதவிப் பெட்டியில் வைக்காதீர்கள். நோயின் தன்மையைப் பொறுத்து ஆன்ட்டிபயாடிக் மருந்துகளை மருத்துவர்தான் பரிந்துரைக்க வேண்டுமே தவிர நீங்களாக சுயமருத்துவம் செய்துகொள்ளக் கூடாது.

குளிர்-மழைக்கால நோய்கள்... ஆரோக்கிய நடவடிக்கைகள்! - குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...

அவசர எண்கள் அவசியம் வேண்டும்!

நம் உடலுக்கு எப்போது என்ன பிரச்னை வரும் என்பது தெரியாது. அதிலும் கொட்டும் மழையில் மருத்துவமனைக்குச் செல்வது என்பது எளிதான காரியமல்ல. குறிப்பாக, வீட்டில் முதியோர், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் இருந்தால் அவசரகால சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையின் எண்கள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவை எண்கள் போன்றவற்றை வீட்டில் உள்ள எல்லோருக்கும் தெரியும்படி குறித்து வைக்க வேண்டும். அதிலும் குறிப்பாக, குறுகலான சந்தில் வசிப்பவர்கள் சந்தின் உள்ளே வரும்படியாக உள்ள மினி ஆம்புலன்ஸ் சேவை எண் களைத் தெரிந்து வைத்துக்கொள்வது மிகமிக அவசியம்.

குளிர்-மழைக்கால நோய்கள்... ஆரோக்கிய நடவடிக்கைகள்! - குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...

சுகம் தரும் சுக்குமல்லி காபி...

சுக்கு, மல்லி விதை (தனியா) ஆகியவற்றுடன் கருப்பட்டி அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து சுக்குமல்லி காபியைத் தயாரிக்கலாம். நீங்கள் வழக்கமாகப் பருகும் டீ, காபிக்கு பதிலாக இந்தச் சுக்குமல்லி காபியை எத்தனை முறை வேண்டு மானாலும் குடிக்கலாம். குறிப்பாக, காலையில் எழுந்து பல் துலக்கிய உடனே வெந்நீர் அல்லது மேலே சொன்ன சுக்கு மல்லி காபியை அருந்தி சுகம் பெறலாம்.

பிராணாயாமம் என்னும் தற்காப்பு சிகிச்சை!

மழை மற்றும் குளிர்காலங்களில் நோய்த் தொற்று வராமல் தடுக்கவும், நோய் ஏற்பட்டால் அதைச் சரிசெய்யவும் உணவுப் பொருள்களும் உணவுகளும் உதவுவதைப்போல பிராணாயாமம் என்னும் யோகப் பயிற்சி முறையும் உங்கள் உடம்பில் நோய் குடிபுகவிடாமல் கவசம் போலப் பாதுகாக்கும். தினமும் காலையில் அல்லது மாலையில் ஒரு 20 நிமிடங்கள், வெறும் வயிற்றில் பிராணாயாமம் செய்து வந்தால் மூக்கடைப்பு, சளித்தொந்தரவு போன்றவை வருவதற்கு வாய்ப்பே இல்லை. அதுமட்டுமல்லாமல் உங்களது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பிராணாயாமம் உதவும்.

குளிர்-மழைக்கால நோய்கள்... ஆரோக்கிய நடவடிக்கைகள்! - குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...

நாடி - ஷோதனா பிராணாயாமம்!

நுரையீரல் ஆரோக்கியம் பேணும் `நாடி - ஷோதனா பிராணாயாமம்' செய்யும் முறையை விளக்குகிறார், பெங்களூரைச் சேர்ந்த யோகா ஆசிரியர் அனுசுயா.எம்.எஸ்.

குளிர்-மழைக்கால நோய்கள்... ஆரோக்கிய நடவடிக்கைகள்! - குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...

நிலை 1

தரையில் சுகாசனத்தில் நேராக அமர்ந்து கண்களை மூடவும்.

கட்டை விரல் வலது நாசியின் மீதும், மோதிர விரல் இடது நாசியின் மீதும் வைக்கவும்.

வலது நாசியை வலது கட்டை விரலால் மூடியபடி இடது நாசித் துவாரத்தின் வழியாக மெதுவாக சீராக மூச்சை இழுத்து, மீண்டும் இடது நாசித் துவாரத்தின் வழியாகவே மூச்சை வெளியேற்றவும்.

தொடர்ந்து இப்படி 5 முறை செய்து முடித்ததும், இடது நாசியை மோதிர விரலால் மூடி வலது நாசித் துவாரத்தின் வழியாக மெதுவாக, சீராக மூச்சை இழுத்து மீண்டும் அதே நாசித் துவாரத்தின் வழியாகவே மூச்சை வெளியேற்றவும்.

தொடர்ந்து 3 முதல் 5 நிமிடங்கள் வரையிலும் இந்தப் பயிற்சியை செய்யலாம்.

நிலை 2

மேலே கொடுக்கப்பட்டிருக்கும் அதே செய்முறைகள்தான். நிலை 2-ல் அதில், மூச்சை உள் இழுக்கும் கால அளவு மற்றும் மூச்சை வெளியேற்றும் கால அளவை 1, 2, 3 என மனதுக்குள் எண்ண வேண்டும். முழு கவனத் தையும் மூச்சில் வைத்து 1... 2... 3... என எண்ணியபடியே மூச்சை உள்ளிழுப்பதையும் மூச்சை வெளியிடுவதையும் தொடர வேண்டும்.

தொடர்ந்து 3 முதல் 5 நிமிடங்கள் வரையிலும் இந்தப் பயிற்சியை செய்யலாம். இதைச் சரியாகச் செய்யும் பட்சத்தில் காலப்போக்கில் மூச்சை உள் இழுக்கும் நேரமும் மூச்சை வெளியிட ஆகும் கால இடைவெளியும் ஒன்றாக ஆகும்.

குளிர்-மழைக்கால நோய்கள்... ஆரோக்கிய நடவடிக்கைகள்! - குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...

நிலை 3

மாற்று நாசித் துவார மூச்சுப் பயிற்சி (ALTERNATIVE NOSTRIL BREATHING) வலது நாசித் துவாரத்தை வலது கட்டை விரலால் மூடியபடி இடது நாசித் துவாரத்தின் வழியாக மெது வாக, சீராக மூச்சை இழுத்து, பின் மோதிர விரலால் இடது நாசியை மூடி வலது நாசித் துவாரத்தின் வழியாக மெதுவாக வெளியேற்றவும். இது ஒரு சுற்று.

இதுபோல 5 முதல் 10 சுற்று வரை இந்தப் பயிற்சியை மேற் கொள்ளலாம்.

குளிர்-மழைக்கால நோய்கள்... ஆரோக்கிய நடவடிக்கைகள்! - குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...

மூன்று நாள்களுக்கு மேல் கைவைத்தியம் வேண்டாம்!

பொதுவாக எந்த மிதமான நோய்களுக்கும் மூன்று நாள்கள் கைவைத்தியம் பார்க்கலாம். அதற்குப் பிறகும் காய்ச்சல், சளி குறையாவிட்டால், உடனே மருத்துவரை அணுகிவிட வேண்டும். ஏனென்றால் இந்தக் காலகட்டத்தில் டெங்கு, சிக்கன்குனியா, டைபாய்டு, மலேரியா, கோவிட் தொற்று மற்றும் வைரல் காய்ச் சல்கள் எனப் பல வகையான நோய்கள் நம்மை அச்சுறுத்தி வருவதால் நோயைச் சரியாகக் கண்டறிந்து அதற்கான சிகிச்சையை எடுக்க வேண்டியது மிகமிக அவசியம்.

குளிர்-மழைக்கால நோய்கள்... ஆரோக்கிய நடவடிக்கைகள்! - குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை...
Paul Bradbury

கவனம்: உரை மாத்திரை குழந்தைகளின் ஆரோக்கியம் காக்கும் அருமருந்து என்பதை விவரிக்கவே மேற்சொன்ன விளக்கம் பொதுவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி நீங்கள் உங்கள் குழந்தைக்கு உரை மாத்திரை கொடுக்க விரும்பினால் ஒரு சித்த மருத்துவரைக் கலந்தாலோசித்த பிறகு அவரது வழிகாட்டுதலின்படி உரை மாத்திரையைக் கொடுங்கள். இதில் சுய மருத்துவம் வேண்டாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு