Published:Updated:

`கொரோனா பணி... மருத்துவத்துறை, காவல்துறை, தூய்மைப் பணியாளர்கள்... குடும்பத்தின் ஒத்துழைப்பு தேவை!’ - மனநல மருத்துவர்

தூய்மைப் பணியாளர்கள்
தூய்மைப் பணியாளர்கள்

இதுபோன்ற செயல்கள், தற்போது உழைத்துக்கொண்டிருக்கும் மருத்துவர்களுக்கு எவ்வளவு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதை ஒருநொடி யோசிக்கக்கூட யாருக்கும் நேரமில்லை.

ஊரே கொரோனா லாக் டௌனில் அடங்கிப்போயிருக்கும் வேளையில், மருத்துவத் துறையினரும் காவல் துறையினரும் கண்ணிமைக்காமல் பணிபுரிந்து வருகின்றனர். வீட்டில் முடங்கிக்கிடப்பவர்கள் பலவித மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர் என்றால் தினமும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொண்டும், மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க வேண்டும் என்பதற்காக ஊரைப் பாதுகாத்துக்கொண்டும் இருப்பவர்களின் மனநிலை நிச்சயம் சோர்ந்துபோயிருக்கும். இதுபோன்ற சூழ்நிலைகளில் அயராது உழைக்கும் அவர்களின் மனநிலை பற்றியும் அவர்களின் தேவைகள் குறித்தும் நம்மோடு பகிர்ந்துகொண்டார் மனநல மருத்துவர் அசோகன்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

``கடுமையான இந்தியா-பாகிஸ்தான் போர்க்கால நேரத்தில், நாட்டு எல்லையில் பணிபுரியும் தன் மகனை நினைத்து வேதனைப்படுகிற தாயின் மனநிலைதான் தற்போதைய மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் மற்றும் காவல் துறையினர்களின் வீட்டு நபர்களின் நிலையும். போர்க்களத்தில்கூட நம்முடைய எதிரி யார், எந்தப் பக்கத்திலிருந்து அவர்கள் தாக்குவார்கள் என்பதை ஓரளவுக்குக் கணித்துவிட முடியும்.

ஆனால், கொரோனா வார்டில் பணிபுரிபவர்களாகட்டும் அல்லது அவர்களுடைய குடும்பத்தினராகட்டும்... அவர்களுக்குக் கொரோனா தாக்கம் பற்றிய எந்தவித அறிகுறியும் முன்கூட்டியே தெரிவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. இந்நிலை அவர்களுக்கு அதிகப்படியான மனஅழுத்தத்தை ஏற்படுத்தும்.

Corona safety measures
Corona safety measures

கண்முன்னே குடும்பம் இருந்தும், அவர்களை நெருங்க முடியாமல் தவிக்கும் நிலை இவர்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது. மனதை இறுக்கும் இந்தச் சூழலில், சிறிது காலம் குடும்பத்தைவிட்டுத் தள்ளி இருப்பது நோயின் தாக்கத்திலிருந்து தள்ளி இருப்பது போன்றுதான். இந்த நிதர்சனத்தை மருத்துவத்துறையினர், காவல் துறையினர், துப்புரவுத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் என இரண்டு தரப்பும் புரிந்துகொள்ள வேண்டும். பணிபுரிபவர்களுக்கு உறுதுணையாக இருப்பது சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தின் கடமையும்கூட.

இந்தச் சூழ்நிலையில், அவசியமாகப் பணிபுரிய வேண்டிய துறையைச் சேர்ந்த அனைவரும் வணங்குதலுக்கு உரியவர்கள். ஆனால், இவர்களில் பலருக்கு சரியான பாதுகாப்புக் கவசங்கள், சாதனங்கள் இல்லை என்பது வருத்தத்துக்குரியது. போருக்கு வெறும் கைகளோடு வீரர்களை அனுப்பி வைத்தால் எப்படி இருக்கும்? அதுபோன்றதுதானே இதுபோன்ற செயல்கள். `நாம் பாதுகாப்பாக இருக்கிறோம்' என்ற மனநிலையே அவர்களுக்கு அதிக தைரியம் கொடுக்கும்.

கொரோனாவால் இறந்த டாக்டர் உடல் அடக்கம் செய்ய எதிர்ப்பு
கொரோனாவால் இறந்த டாக்டர் உடல் அடக்கம் செய்ய எதிர்ப்பு

ஆனால், அது அவர்களுக்குக் கிடைக்காத பட்சத்தில் மனதளவில் மிகவும் பயந்து சோர்வடைகின்றனர். ஸ்டார் ஹோட்டல் வசதிகள் வேண்டுமென்றெல்லாம் அவர்கள் கேட்கவில்லை. அவர்கள் கேட்பதெல்லாம் மாஸ்க், கையுறை போன்ற அடிப்படை பாதுகாப்புப் பொருள்களைத்தான். அவை கிடைக்காமல் மனதளவில் பாதிக்கப்பட்ட ஏராளமானோருக்கு நாங்கள் ஆலோசனை கொடுத்து வருகிறோம். இந்நிலை மாறுவதற்கு நிச்சயம் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும், ஏராளமான சொத்து சேர்க்க வேண்டும் என்று தெய்வத்திடம் வேண்டிய காலம் போய், தற்போது `பக்கத்து வீட்டுக்காரங்க, எதிர் வீட்டுக்காரங்க எல்லோரும் நல்லா இருக்கணும்' என வேண்டிக்கொள்கின்றனர். அப்போதுதானே நோய் அவர்களுக்குப் பரவாமல் இருக்கும்! இப்படிப் பொதுநலத்திலும் சுயநலமாக யோசிக்கக்கூடிய மனநிலையில்தான் மனிதன் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கிறான்.

Psychiatrist Asokan
Psychiatrist Asokan

இந்த மனநிலை மிகவும் மோசமானது. எத்தனையோ உயிர்களை அழிவிலிருந்து காப்பாற்றிய மருத்துவரின் உடலைத் தகனம் செய்ய மறுத்த மக்கள் இந்த மண்ணில்தான் இருக்கின்றனர். இதுபோன்ற செயல்கள், தற்போது உழைத்துக்கொண்டிருக்கும் மருத்துவர்களுக்கு எவ்வளவு மனஅழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதை ஒருநொடி யோசிக்கக்கூட யாருக்கும் நேரமில்லை. மக்களின் முழு ஒத்துழைப்பும் இவர்களுக்கு இப்போது மிகவும் அவசியம்.

ஒரு மருத்துவருக்கு ஒரு டியூட்டி போட்டால் போதுமானது. சில மருத்துவமனைகளில் குறிப்பிட்ட சில மருத்துவர்களே தினமும் பணிக்குச் செல்கின்றனர். `எந்த மருத்துவரை கொரோனா வார்டில் பணியமர்த்தலாம், யாரை அங்கு அனுப்ப வேண்டாம் என்பதிலும் பாரபட்சம் இருக்கிறது' என்ற குரல்களும் கேட்கின்றன. இதுபோன்ற பாகுபாடுகளைத் தவிர்க்க வேண்டும். சுழற்சி முறையில் எல்லா மருத்துவர்களையும் பணிக்கு அமர்த்த வேண்டும். ஒரே மருத்துவருக்கு அடுத்தடுத்து டியூட்டி போடுவதால் அவர்கள் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் உழைக்கும் கரங்களுக்கு நம் எல்லோருடைய அன்பும் கருணையும் அவசியம். அவர்களுக்குள் உருவாகும் பயத்தையும் பதற்றத்தையும் போக்குவதற்குக் கட்டாயம் மனநல ஆலோசனை வழங்க வேண்டும். அவர்களின் குடும்பத்தினருக்கும் மனநல ஆலோசனை கொடுத்தால் கூடுதல் பலம்."

பாராட்டுகள் போதும்... பணி நிரந்தரமும் பாதுகாப்பு உபகரணங்களும் தேவை - தூய்மைப்பணியாளர்களின் துயரம்!
அடுத்த கட்டுரைக்கு