Published:Updated:

`கலங்க ஒன்றுமில்லை; பாசிட்டிவாகவே கடக்கலாம்!' - கல்கி கவியரசுவின் கொரோனா அனுபவம் #SpreadPositivity

கல்கி கவியரசு
கல்கி கவியரசு

கொரோனாவிலிருந்து மீண்ட அனுபவம் பகிர்கிறார் எழுத்தாளரும், சமூகச் செயற்பாட்டாளருமான கல்கி கவியரசு.

கொரோனாவிலிருந்து மீண்ட அனுபவம் பகிர்கிறார் எழுத்தாளரும் சமூகச் செயற்பாட்டாளருமான கல்கி கவியரசு.

கொரோனா எப்படி வேண்டுமானாலும் வரலாம். எனக்கு முதுகுப்பகுதியில் முதலில் வலி ஆரம்பித்தது. எதிர்பாராத வலிதான். ஆனால், முழுவதுமாகத் தயாராக இருந்தேன். இது கொரோனாவாக இருக்காது என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையை என்மீது நான் வைக்கவில்லை. மருத்துவரை அணுகினேன். அவர், `எப்போதும் காய்ச்சலுக்குப் பரிந்துரைக்கும் பாராசிட்டமால் எடுத்துக் கொள்ளுங்கள் போதும். ஒருவேளை உங்கள் இருக்கையின் பொசிஷன் சரியாக இல்லாவிட்டாலும் இப்படி வலி வரும்' என்றார்.

#SpreadPositivity
#SpreadPositivity

இரண்டு நாள்கள் கடந்ததும் முன் நெற்றியில் இடைவிடாத வலி நிரந்தரமானது. அன்று மாலை முதல் என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டேன். வீட்டில் கூட `இதெல்லாம் ஒன்னும் இல்ல பார்த்துக்கலா'ம் என்றார்கள். எனக்கு நன்றாகவே தெரிந்தது இந்த வலி மாத்திரையின் பேச்சைக் கேட்காது, மருத்துவரின் பேச்சைத்தான் கேட்கும் என்று. அடுத்த நாள் காலை எழவே முடியாத அளவுக்கு உடம்புவலி, கத்தியால் கீறுவது போல்; கூடவே உடல் வெப்பநிலையும் அதிகமாகவே இருந்தது. மருத்துவரை போனில் அழைத்தேன். `எதுவுமே இல்லை பயப்படாதீங்க... நான் வாட்ஸ்அப் பண்ணுற மாத்திரையை அப்படியே உணவு வேளைக்கு முன்னும் பின்னும் எடுத்துக்கோங்க... சரி மாத்திரை வாங்கித்தர ஆள் இருக்காங்களா...' என்று பேசத் தொடங்கியவர் `நான் பரிந்துரை செய்த மாத்திரைகளை மட்டும் எடுத்துக்கோங்க. இன்னும் கொஞ்ச நேரத்தில் உங்களுக்கு கொரோனா பரிசோதனை மாதிரி எடுக்க லேபில் இருந்து ஆள் வருவார்' என்று சொல்லி செல்போன் இணைப்பைத் துண்டித்தார்.

நான் மாத்திரையால் குணம் அடைந்தேன் என்று சொல்வதைவிட மருத்துவரின் அன்பான ஆலோசனைகளால் மட்டுமே குணம் அடைந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். கொரோனா பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்ததும் என்னை அழைத்து என்னிடம் பேசியது, பயப்பட வேண்டாம் கொரோனா என்பது மிகச் சாதாரணமான ஒரு காய்ச்சல் மட்டுமே. பொது சுகாதாரம் மற்றும் சில விழிப்புணர்வு விஷயங்களை நீங்கள் சரிவர கடைப்பிடித்தால் இந்த நோய் நாம் நினைப்பதை விடவும் சீக்கிரமாகவே உங்கள் உடலை விட்டு வெளியேறி விடும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தார். மேலும் அவசர காலத்தில் இன்று மருத்துவமனைகளில் இடமில்லாமல் இருப்பதாலும் மேலும் நீங்கள் மிகவும் ஆரோக்கியமாகவே இருப்பதாலும் நீங்கள் வீட்டில் இருந்தே சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். நோய் உள்ள ஒருவருக்கு பயம் ஏற்படுவதன் காரணமாக நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட செல்கள் நம் உடலில் அழியத் தொடங்கி நோய்க்கான இருப்பிடமாக நமது உடல் மாற்றம் பெற்றுவிடும் என்ற உண்மையை வெளிப்படையாகக் கூறினார்.

corona test
corona test
`கொரோனாவை விரட்ட தன்னம்பிக்கைதான் ரொம்ப முக்கியம்!' - அவள் வாசகியின் அனுபவ பகிர்வு #SpreadPositivity

எந்த நோயாக இருந்தாலும் அதற்கு எதிர்ப்பு சக்தி என்பது இன்றியமையாதது. அத்தகைய எதிர்ப்பு சக்தி உங்கள் உடம்பில் இருக்கும் போது எந்த வகை நோயாக இருந்தாலும் அது உங்களை அணுகாது, ஆபத்தையும் ஏற்படுத்தாது என்றார். மேலும், நீங்கள் நான் கூறும் சில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும் உங்கள் வீட்டில் யார் இருந்தாலும் நீங்கள் அனுமதிக்காமல் உங்களிடமிருந்து அவர்களுக்கு நோய் பரவுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. மேலும் சிறு குழந்தைகள் யாராவது இருப்பினும் கூட அவர்களுக்கு உங்களிடமிருந்து நோய்த்தொற்று முற்றிலும் அவர்களுக்குப் பரவாது. அப்படியே நோய் வாய்ப்பட்டாலும் அவர்களது உடல் மிக எளிதாக தனது உடலை சமன் செய்து கொண்டு காய்ச்சலில் இருந்து சரியாகி விடுவார்கள் இரண்டு தினங்களில் என்றார். இவ்வளவு பாசிட்டிவ் ஆன விஷயங்கள் கொரோனாவில் இருக்கும்போது அச்சம் தேவையற்றது‌ என்பது தெளிவானது.

இந்த நாள்களை உங்கள் ஓய்வுக்காக ஒதுக்கி விடுங்கள். இப்போது நீங்கள் கட்டாய ஓய்வில் இருப்பதாக நினைத்துக்கொண்டு உங்ளுக்கென்ற அறையில் நீங்கள் மட்டுமே வாழுங்கள். இருக்கும் இடத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்ளுங்கள். அடிக்கடி சுடுதண்ணீர் பருகுங்கள். அதிகமாக சிறுநீர் கழிக்க முயற்சி செய்யுங்கள். பிடித்த பழங்கள், பிடித்த இசை என்று உங்களைச் சுற்றி ஓர் உலகத்தை தயார்படுத்துங்கள். டிவி பார்ப்பது, செய்தி சேனல்கள் பார்ப்பதைத் தவிருங்கள். உங்களுக்கு கொரோனா எனத் தெரிந்ததும் நிறைய வாட்ஸ்அப் ஃபார்வேர்டு குறுஞ்செய்திகள் வரும். ஒருவேளை அவற்றில் சில நோயில் இருந்து உங்களை குணப்படுத்துவதாக இருந்தாலும் இதுபோன்ற ஆபத்தான நேரங்களில் உங்களை நீங்களே சோதனை எலிகளாக மாற்றுவது தவறு.

Isolation
Isolation
``நான் ரெண்டு தடவை கொரோனா வந்து மீண்டிருக்கேன்!" - `குக் வித் கோமாளி' அஷ்வின் #SpreadPositivity

எனவே, எந்த மருத்துவமுறையும் முயற்சிசெய்து பார்ப்பது தவறு. ஒரு மருந்தின் மீது நம்பிக்கை வைத்து விட்டால் அது நம்மை குணப்படுத்தும் என்ற நம்பிக்கையை நாம் 100% வைத்தால் மட்டுமே நம்மை அந்த நோயில் இருந்து குணப்படுத்த முடியும். எனவே, நீங்கள் உட்கொள்ளும் மருத்துவமுறை மீது நம்பிக்கை வையுங்கள். ஒவ்வொரு முறை மருந்து எடுத்துக்கொள்ளும் போதும் நோய் என் உடலை விட்டுச் செல்கிறது என்ற ஒரு பாசிட்டிவ்வான செய்தியை உங்கள் மூளையில் பதிய வையுங்கள். நோயின் தாக்கம் என் உடலில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறுகிறது என்றும் நினைத்துக் கொள்ளுங்கள். முடிந்த அளவுக்கு புரோட்டின் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். நீர்ச்சத்து நிறைந்த பழங்கள் உடல் அசதியை சரிசெய்யும். உங்கள் உடல் தொடர்ந்து இயங்க அது எரிபொருள் போலச் செயல்படும்.

மேலும், சில தினங்களுக்கு உங்களை நீங்களே ஓர் அறையில் தனிமைப்படுத்திக் கொண்டு மற்றவர்களுடன் பொது தொடர்பில் இருப்பதைத் தவிருங்கள். இது போதும் வேறு எந்தவிதமான பயமும் தேவையற்றது. அவ்வளவுதான் வேறு ஒன்றும் இல்லை என்பதை நானே எனக்கு சொல்லிக் கொண்டேன். நான் மட்டும் இருந்த அறையாக இருந்ததால் மாஸ்க் அணியவில்லை.

மாத்திரை சாப்பிடுவது, ஓய்வு எடுப்பது, பிடித்த பாடல் கேட்பது என்று அப்படியே நிமிடங்களைக் கடந்துகொண்டே இருந்தேன். இடையிடையே நண்பர்களும், மருத்துவரும் போன் செய்து என் உடல்நிலை குறித்த தகவலை உறுதிப்படுத்திக்கொண்டே இருந்தார்கள். என் உடல்நிலை எப்படி இருக்கிறது என்பதை வெளிப்படையாகவே நானும் கூறினேன். வாட்ஸ்அப் மற்றும் முகநூலில் எனக்கு கொரோனா பாசிட்டிவ் என்று ஸ்டேட்டஸ் வைத்தேன். கொரோனா என்பது வெளியே சொல்லிக்கொள்ள முடியாத நோய் என்பதைப்போல்தான் பலரும் சுய மருத்துவம் செய்து கொண்டு நோயைப் பெரிதுபடுத்திக் கொள்கிறார்கள். நான் என் மீது முன்பை விடவும் அதிக நம்பிக்கை கொண்டேன் என்னால் இந்த நோயில் இருந்து மீண்டு வரமுடியும் என்று. நான்கு தினங்களில் நோயில் இருந்து நெகட்டிவ் ஆனேன்.

இந்த நோயின் வீரியம் எப்படி இருக்கும்? அது நம்மை என்ன செய்யும் என்றெல்லாம் தேவையற்ற இணையதள தேடல்களில் தேடித் தேடிப் படிப்பதை அறவே ஒதுக்குங்கள். உங்களுக்கு சுவாசப் பிரச்னை இருந்து ஒருவேளை மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் மருத்துவரிடம் தெரிவியுங்கள். அவர்கள் சில ஆலோசனைகளை வழங்குவார்கள்; உங்களுக்கு ஆக்சிஜன் தேவை என்பதையும், தேவையில்லை என்பதையும் மருத்துவர்தான் முடிவு செய்வார். நீங்கள் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை.

Spread Positivity
Spread Positivity

பரப்பப்படும் செய்திகளையெல்லாம் பார்த்துவிட்டு நாளை நமக்கும் இப்படித்தான் நடக்கும் என்ற பயத்தில் செத்துகொண்டே வாழ்வதைவிட, நாம் வாழும் இடம் சொர்க்கம் என்பதை மனதில் நிறுத்தி உங்களைச் சுற்றி இருக்கக்கூடிய நிறைய நினைவுகளை மனதில் அசை போடுங்கள். நீண்ட நாள்களாக நீங்கள் பேச மறந்த உங்களின் நண்பர்கள், உறவினர்களுக்கு போன் செய்து பேசுங்கள். யாரிடமாவது மனஸ்தாபமோ, பகையோ ஏதாவது ஒரு கட்டத்தில் ஏற்பட்டு அவர்களை விட்டு நீங்கள் விலகியிருந்தால் அவர்களை போனில் அழைத்து மனம்விட்டுப் பேசுங்கள். நிறைய சங்கடங்கள் இந்த கொரோனாவோடு முடிந்துவிடும். நோய் உங்களது உடம்பை விட்டுச் செல்லும் வேளையில் உங்கள் உலகத்தில் புதிதான உறவுகளும் நிறைய கூடி இருப்பார்கள். உங்களைச் சூழ்ந்து இருக்கும் ஒவ்வொருவரின் வேண்டுதலும், பிரார்த்தனைகளும் உங்களை இந்த நோயில் இருந்து வெளியே கொண்டு வரும். அன்பானவர்களின் பிரார்த்தனைகளும் நேசங்களும் மிகவும் வலிமை மிகுந்தவை.

காலம்காலமாக நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் இருமல், சளி, காய்ச்சல் போன்று இதுவும் ஒரு நோய்தான்; பயத்தை விடுத்து பாசிட்டிவ்வாக உங்களுக்கென்ற அறையில் சிலதினங்கள் வாழ்ந்து பாருங்கள். நீங்கள் கொரோனாவில் மட்டும் பாசிட்டிவ் அல்ல. வாழ்க்கையிலும் ஆல்வேஸ் பாசிட்டிவ்வாகவே வாழப் பழகுவீர்கள்.

- கல்கி கவியரசு

அடுத்த கட்டுரைக்கு