"ஆன்லைன் சூதாட்டத்தால் கூலி தொழிலாளி பலி", "ஆன்லைன் சூதாட்டத்தால் வங்கி ஊழியர் பலி" போன்ற செய்திகளை நாம் தினமும் படித்தும் வருகிறோம், கடந்தும் வருகிறோம். தற்போது மத்திய அரசு, சீனா உள்ளிட்ட பிற வெளிநாடுகளின் 138 சூதாட்ட செயலிகளை முடக்கியுள்ளது.

பெரும்பாலும் சூதாட்டம் செயலி என்றவுடன் ரம்மி விளையாட்டு செயலியை மட்டும்தான் நாம் நினைக்கிறோம். ஆனால் ஆன்லைன் கடன் செயலிகள்கூட ஒரு வகை சூதாட்ட செயலிதான். இந்த செயலிகளால்கூட பல்வேறு தற்கொலைகள் நிகழ்கின்றன.
தற்போது இந்தியாவில் சீன சூதாட்ட செயலிகள்தான் அதிக புழக்கத்தில் இருந்து வருகின்றன. இந்த செயலிகள் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதோடு, உயிர்பலிகளுக்கும் காரணமாகி வருகிறது.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் சூதாட்ட செயலிகளை முடக்குமாறு மத்திய தகவல் தொழில்நுட்பம் அமைச்சகத்திற்கு அறிவுறுத்தியது. இதையடுத்து மத்திய தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம் 232 செயலிகளை முடக்கியது. இதில் 138 செயலிகள் சூதாட்ட செயலிகள் மற்றும் 94 செயலிகள் அங்கீகரிக்கப்படாத கடன் வழங்கும் செயலிகள் ஆகும். இந்த செயலிகள் அனைத்தும் சீனா உள்ளிட்ட பிற வெளிநாடுகளை சேர்ந்த செயலிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
சூதாட்ட பொதுச் சட்டம் 1867-ன்படி, இந்தியாவில் சூதாடுவது சட்டப்படி குற்றம் ஆகும். இந்த சட்டத்திற்கு சிக்கிம், கோவா, டாமன் ஆகிய மூன்று இந்திய மாநிலங்கள் மட்டும் விதிவிலக்கு. இந்த மாநிலங்களிலுமே சுற்றுலா பயணிகளை கவர்வதற்காகத்தான் தனிசட்டம் இயற்றி சூதாட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த சட்டத்தினால் இந்தியாவில் பொதுவெளிகளில் சூதாடுவதை காணமுடிவதில்லையே தவிர, சூதாட்டமே நடப்பத்தில்லை என்று கூறமுடியாது. தற்போது இந்த சூதாட்ட செயலிகள் இந்த சட்டத்தை எளிதாக உடைத்து, பெரும்பாலனவர்களின் வீடுகளில் சூதாட்டத்தை கொண்டு சேர்த்துவிட்டது. இந்த செயலி முதலில் பொழுதுபோக்காக தொடங்கி, பிறகு உயிர்கொல்லியாக மாறியது. இந்த செயலிக்கு கூலி தொழிலாளி, வங்கி ஊழியர்கள் என யாரும் விதிவிலக்கு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு சூதாட்ட செயலிகளை மட்டும் முடக்கிவிட்டால், இந்திய பொருளாதாரத்தையும், உயிர்களையும் காப்பாற்றிவிட முடியாது. முற்றிலுமாக இந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்தால்தான் தனி நபரின் வீடு தொடங்கி மொத்த நாட்டையும் காப்பாற்ற முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.