Published:Updated:

கொரோனா: `முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.1 லட்சம் அபராதம்!’ - ஜார்க்கண்டில் அவசர சட்டம்

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்
ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்

``ஜார்க்கண்டில் இதுவரை சுமார் 6,485 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பாதிப்படைந்தவர்களில் சுமார் 3,397 பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சுமார் 3,024 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.”

கொரோனா வைரஸ் இந்தியாவில் தொடர்ந்து அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்று நோயைக் குணப்படுத்த அதிகாரபூர்வமாக மருந்துகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்பதால் தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் மற்றும் முகக்கவசம் அணிதல் போன்ற வழிகாட்டுதல்கள் ஒன்றே பரவலைத் இருந்து தடுக்க மருந்தாக இருந்து வருகிறது. இதற்காக ஊரடங்கு உத்தரவுகளையும் அரசுகள் அறிவித்தன.

தற்போது பொருளாதாரம் தொடர்பான நடவடிக்கைகளைத் தொடங்க சில தளர்வுகளை அரசுகள் அறிவித்து வருவதால் பாதிப்புகள் அதிகமாகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. பலரும் தனிமனித இடைவெளியைப் பின்பற்றுதல் மற்றும் முகக்கவம் அணிதல் போன்ற விதிமுறைகளைப் பின்பற்றாமல் இருந்து வருவதாக அரசுகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றன.

கொரோனா தொற்று நோய்
கொரோனா தொற்று நோய்
Pixabay

மக்கள் இந்த விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காக மாநில அரசுகள் பல்வேறு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அவ்வகையில், ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் மாநில அரசானது கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றுதல் தொடர்பான அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்துள்ளது. அம்மாநிலத்தில் தொற்றுநோய் அவசரச் சட்டம் 2020 என்ற பெயரில் அமைச்சரவையில் இந்தச் சட்டத்தை நிறைவேற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்டில் வைரஸ் தொடர்ந்து அதிக பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கு மத்தியில் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தின்படி, கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு தொடர்பான நடவடிக்கைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஜார்க்கண்ட் மாநில அரசின் விதிமுறைகளை மீறி வெளியே சுற்றினால் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூபாய் 1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முகக்கவசம்
முகக்கவசம்

ஜார்க்கண்டில் இதுவரை சுமார் 6,485 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். பாதிப்படைந்தவர்களில் 3,397 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுமார் 3,024 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வைரஸால் பாதிப்படைந்தவர்களில் 64 பேர் உயிரிழந்துள்ளனர். அம்மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் சிலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதனால், சட்டமன்ற அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் வரும் ஜூலை 31-ம் தேதி வரை எந்தக் கூட்டங்களும் நடைபெறப்போவதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், அம்மாநில அரசின் அபராதம் மற்றும் தண்டனை தொடர்பான அறிவிப்புகள் மக்கள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா: `எப்போதும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்!’ - விளக்கும் சி.எஸ்.ஐ.ஆர் தலைமை அதிகாரி
அடுத்த கட்டுரைக்கு