Published:Updated:

மகாராஷ்டிரா: அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து! - கொரோனா நோயாளிகள் 10 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிராவின் அஹமத் நகரிலுள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம், அஹமத் நகரிலுள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்தில், தீ நாலாபுறமும் பரவியதால் உள்ளே சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகள் ஏராளமானோர் சிக்கிக்கொண்டனர். தீ விபத்து குறித்துத் தகவலறிந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து தீயணைப்புத்துறை வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பின்னர், பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து காரணமாக, மருத்துவமனையிலிருந்த நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டு, வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டனர். இந்தத் தீ விபத்தின்போது, அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த 20 நோயாளிகளில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். எஞ்சியவர்கள் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு வேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

தைவான்: அடுக்குமாடிக் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து... 46 பேரை பலி கொண்ட சோகம்
தீ விபத்து ஏற்பட்ட பகுதி
தீ விபத்து ஏற்பட்ட பகுதி

தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்துத் தீயணைப்புத்துறையினர் விசாரித்துவருகின்றனர். இந்த விபத்துச் சம்பவத்தில் பலர் காயம் அடைந்திருக்கின்றனர். தீ விபத்தால் மருத்துவமனை வளாகம் புகை மண்டலமாகக் காட்சியளித்தது. இந்தத் தீ விபத்து குறித்து மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர போஸ்லே கூறுகையில், ``மருத்துவமனையில் ஏற்பட்ட தீ, கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. அவசர சிகிச்சைப் பிரிவில் 17 நோயாளிகள் சிகிச்சை பெற்றுவந்தனர். அவர்களில் 10 பேர் தீவிபத்தில் சிக்கி உயிரிழந்துவிட்டனர். உயிரிழந்த அனைவரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மின்கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது" என்றார். இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரி காந்தல் கூறுகையில், ``தீ விபத்தில் ஏழு பேர் காயம் அடைந்திருக்கின்றனர். அவர்களில் இரண்டு பேர் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு