Published:Updated:

`48 மணி நேரத்தில் 10 கைக்குழந்தைகள் இறப்பு!’ - மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தொகுதியின் துயரநிலை

டிசம்பர் மாதத்தில் மட்டும் இந்த மருத்துவமனையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 91ஆக அதிகரித்துள்ளது.

ஜே.கே.லோன் குழந்தைகள்  மருத்துவமனை
ஜே.கே.லோன் குழந்தைகள் மருத்துவமனை ( twitter )

ஜே.கே.லோன் மகப்பேறு மற்றும் குழந்தைகள் அரசு மருத்துவமனை, ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள கோட்டா எனும் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அம்மாநிலத்திலுள்ள மிகப்பெரிய மருத்துவமனைகளில் இதுவும் ஒன்று. கடந்த சில நாள்களில் மருத்துவ வசதிகள் குறைபாட்டினால் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்துள்ளதாகக் கூறுகின்றனர்.

`டிசம்பர் மாதத்தில் மட்டும் இந்த மருத்துவமனையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 91' என வெளியான தகவலால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் பொதுமக்கள்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனையிலுள்ள பிரச்னைகள் குறித்து இந்தியா டுடே ஊடகத்திடம் பேசுகையில், ``மருத்துவமனையில் ஊழியர்கள் மிகவும் குறைவாகவே உள்ளனர். மருத்துவ உபகரணங்களும் தேவையான அளவுக்கு இல்லை. மருத்துவர்கள் சரியான நேரத்துக்கு வருவது இல்லை. சுத்தமான சூழல் இல்லாததால், தொற்றுநோய்கள் ஏற்படுகின்றன” என்று தெரிவித்துள்ளனர்.

அதிகமான நோயாளிகள் இதுபோன்ற காரணங்களால் இறந்தபோதிலும் எந்தவிதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

தாய் - சேய் மரணம்; மருத்துவர்கள், செவிலியர்கள் அலட்சியம்? - ராமநாதபுரம் அரசு மருத்துவமனை சர்ச்சை

இதுதொடர்பாக ஜே.கே.லோன் மருத்துவமனையின் கண்காணிப்பளர் சுரேஷ் சந்த் துலாரா பேசுகையில், ``மருத்துவமனையில் அதிகமான இடப்பற்றாக்குறை உள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். இதனால், நோயாளிகளைக் காப்பாற்றுவது மிகவும் கடினமாக உள்ளது” என்றார்.

மேலும், தீவிர சிகிச்சைப் பிரிவின் ஒவ்வொரு படுக்கையிலும் இரண்டு முதல் மூன்று குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

om birla
om birla
twitter

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ் இந்த மருத்துவமனை அமைந்துள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில் அவர், ``48 மணி நேரத்தில் பிறந்த 10 கைக்குழந்தைகள் மரணமடைந்திருப்பது வேதனையளிக்கிறது. அடுத்த 15 நாள்களில் மக்களின் உதவியுடன் மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில் தேவையான மருத்துவ உபகரணங்கள் கிடைக்க வழிவகை செய்யப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், ``ஜே.கே.லோன் மருத்துவமனை முழுவதும் நவீனமயமாக்கப்பட வேண்டும். மாநில அரசு இவற்றைக் கருத்தில்கொண்டு செயல்பட வேண்டும். மேலும், உடனடியாக நடவடிக்கையும் எடுக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

`மருத்துவமனை பில் ரூ. 5,700; போலி பில் ரூ. 2,00,000!’- விபத்தில் சிக்கிய நபரைப் பதறவைத்த நண்பன்