Published:Updated:

மகாராஷ்டிரா: ஒமைக்ரான் பரவல் தீவிரம்! - 10 அமைச்சர்கள், 20 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா

ஒமைக்ரான்
News
ஒமைக்ரான்

மகாராஷ்டிராவில் ஒரே நேரத்தில் 10 அமைச்சர்கள், 20 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுக்க ஆரம்பித்திருக்கிறது. புதிய வகை ஒமைக்ரான் வைரஸும் நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிகமாக இருக்கிறது. சமீபத்தில் மும்பையில் சட்டமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து முடிந்தது. இந்தக் கூட்டத்தொடரில் கலந்துகொண்ட எம்.எம்.ஏ-க்கள், அமைச்சர்கள், சட்டமன்ற ஊழியர்களுக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது. அதில், ஏராளமானோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்து மாநில துணை முதல்வர் அஜித் பவார் அளித்த பேட்டியில், ``கொரோனா தொற்று காரணமாக சட்டமன்றக் கூட்டத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டோம். இதுவரை 10 அமைச்சர்கள், 20 எம்.எல்.ஏ-க்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

அஜித் பவார்
அஜித் பவார்

ஒவ்வொருவரும் புத்தாண்டு, பிறந்தநாள், இதர விழாக்களில் பங்கேற்க விரும்புகின்றனர். ஒமைக்ரான் கொரோனா தொற்று பரவுவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். மாநிலத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த வாய்ப்பிருக்கிறது. கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரிக்கும்பட்சத்தில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படும். பிரதமர் நரேந்திர மோடியும் இது தொடர்பாக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். கடுமையான கட்டுப்பாடுகளை தவிர்க்க மக்கள் கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மும்பையில் ஒரே நாளில் 5,631 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இது முந்தைய நாளைவிட 100 சதவிகிதம் அதிகம். மும்பையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த தடை உத்தரவு வரும் 15-ம் தேதி வரை அமலிலிருக்கும். மாலை 5 மணி முதல் காலை 5 மணி வரை கடற்கரை, திறந்தவெளி மைதானம், கார்டன்களுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் கொரோனா மூன்றாவது அலை போன்ற ஒரு சூழல் இருந்துவருகிறது. எனவே மக்கள் ஒரே இடத்தில் கூடுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டிருக்கிறார்.

ஒமைக்ரான்
ஒமைக்ரான்
pixa bay

இதற்கிடையே, மகாராஷ்டிரா கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், ``மகாராஷ்டிராவில் கொரோனா மூன்றாவது அலை பரவியிருக்கிறது. ஜனவரி மூன்றாவது வாரத்தில் 80 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்படக்கூடும். அதில் 10 சதவிகிதம் பேர் அதாவது 80 ஆயிரம் பேர் உயிரிழக்க வாய்ப்பிருக்கிறது. ஒமைக்ரான் கொரோனா பரவல் லேசாக இருக்கும் என்றும், உயிரிழப்புகள் அதிகமாக இருக்காது என்ற நினைப்பிலும் அதிகாரிகள் இருக்க வேண்டாம். தடுப்பூசி போடாதவர்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள். எனவே கொரோனா தடுப்பூசியை விரைவுபடுத்தி அதிகாரிகள் பொதுமக்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும்" என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.