Published:Updated:

`யார் அந்த ரெட் டி ஷர்ட், ப்ளூ ஜீன்ஸ்?' - ஜாமியா வன்முறையில் சிக்கிய 10 ரவுடிகள்! #CAA

`ஜாமியா பல்கலைக்கழகப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை நோக்கி போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை. கைது செய்யப்பட்ட பத்து நபர்களும் குற்றப்பின்னணி உடையவர்கள்' என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

CAA Protest
CAA Protest ( Twitter )

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்களும் இந்தச் சட்டத்தை எதிர்த்து கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்களத்தில் ஏற்பட்ட வன்முறையில் பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. காவல்துறையினர் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

Delhi Police
Delhi Police
Twitter

மாணவர்கள் மீதான தாக்குதல் குறித்து காவல்துறையினர், ``போராட்டக்காரர்கள்தான் வன்முறையைத்தொடங்கினர். அவர்கள், யாரென்று அடையாளம் தெரியவில்லை. மாணவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் எந்தவித பிரச்னையும் இல்லை" என விளக்கமளித்திருந்தனர்.

டெல்லியின் துணைமுதல்வர் மனீஷ் சிசோடியா தனது ட்விட்டர் பக்கத்தில் வன்முறை தொடர்பான புகைப்படங்களைப் பகிர்ந்து, ``காவலர் சீருடையில் இல்லாத ஒருவர் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்" என்று பதிவிட்டிருந்தார். ரெட் டி ஷர்ட் மற்றும் ப்ளூ ஜீன்ஸ் அணிந்து மாணவர்களைத் தாக்கும் நபரின் புகைப்படத்தை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து தங்களது கண்டனங்களைத் தெரிவித்ததோடு 'யார் இவர்கள்' என்ற கேள்வியையும் சமூக வலைதளங்களில் எழுப்பியிருந்தனர்.

red shirt person
red shirt person
Twitter

இந்நிலையில், டெல்லி காவல்துறையினர் போராட்டத்துடன் சம்பந்தப்பட்ட பத்து நபர்களை இன்று காலை கைது செய்துள்ளனர். சமூக வலைதளங்களில் வைரலான சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் `ஜாமியா நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர்கள்; குற்றப் பின்னணி உடையவர்கள்; அவர்கள் மாணவர்கள் அல்ல' என்றும் அறிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளனர்.

இதற்கிடையே, `ஜாமியா பல்கலைக்கழகப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை நோக்கி போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை. கைது செய்யப்பட்ட பத்து நபர்களும் குற்றப்பின்னணி உடையவர்கள்" என உள்துறை அமைச்சகமும் விளக்கமளித்துள்ளது.