Published:Updated:

`ரிப்பேர் பண்ண சைக்கிள் கொடுத்தேன்; இன்னும் வரல..!’- காவல் நிலையத்துக்குச் சென்ற 10 வயது சிறுவன்

கேரளாவைச் சேர்ந்த 10 வயது சிறுவன், பழுதுபார்க்கக் கொடுத்த சைக்கிளை மீட்டுத்தரக்கோரி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

சிறுவன் அளித்த புகார்
சிறுவன் அளித்த புகார்

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த 10-வயது சிறுவன், அபின். இவர், அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். மேப்பையூர் காவல் நிலையத்துக்குக் கடந்த 25-ம் தேதி சென்ற அபின், தன்னுடைய சைக்கிளை மீட்டுத்தாருங்கள் எனக் காவலர்களிடம் புகார் தெரிவித்துள்ளார். நோட்டுத் தாளில், தன் கைப்பட மலையாளத்தில் எழுதி புகார் அளித்தார்.

Representation Image
Representation Image

அந்தப் புகாரில், `செப்டம்பர் 5-ம் தேதி பழுதுபார்ப்பதற்காக சைக்கிள் கடையில் என்னுடைய மற்றும் என் சகோதரனின் சைக்கிள்களைக் கொடுத்தோம். ரிப்பேர் செலவுக்காக ரூ.200 வாங்கிக்கொண்டார். ஆனால், இதுவரை சைக்கிளைத் திருப்பித்தரவில்லை. சைக்கிள் குறித்து கேட்பதற்காக போன் செய்தால் எடுப்பதில்லை. எத்தனை முறை போன் செய்தாலும் எடுப்பதில்லை. நேரில் சென்றால் கடை பூட்டியே இருக்கிறது. அவரது வீட்டுக்குச் சென்றால் அங்கும் யாரும் இல்லை. தயவு செய்து எங்களுடைய சைக்கிளை மீட்டுத்தாருங்கள்' என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்துப் பேசிய மேப்பையூர் காவல் நிலைய அதிகாரிகள், ``பள்ளி மாணவர்களிடமிருந்து அடிக்கடி ஏதாவது புகார்கள் வரும். ஆனால், இந்த பத்து வயது சிறுவனின் புகார் எங்களை வெகுவாக ஈர்த்தது. அவர், தனியாகக் காவல் நிலையம் வந்து, நோட்டுப் புத்தகத் தாளில் புகாரை அளித்தார். மாணவனின் புகாரையடுத்து, அந்த சைக்கிள் கடைக்காரரைத் தொடர்புகொண்டோம்.

புகார் கடிதம்
புகார் கடிதம்

அவருக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தால், சில நாள்களாக கடையைத் திறக்கவில்லை என்றும் இதற்கிடையில் மகனின் திருமணம் நடந்ததால் அந்தப் பணிக்கே நேரம் சரியாக இருந்தது. விரைவில் சைக்கிளை சரிசெய்து கொடுத்துவிடுகிறேன் என்றார். சிறுவனிடம் இதுதொடர்பான தகவலை தெரிவித்துவிட்டோம்” என்றனர்.

`காவல்நிலையங்களுக்குச் சென்றாலும் பிரச்னைகள் தீர்க்கப்படுவதில்லை' என்ற குற்றச்சாட்டு காலம்காலமாக முன்வைக்கப்படுகிறது. இதுபோன்ற பிரச்னைகளை நீங்களும் சந்தித்திருக்கிறீர்களா?