Published:Updated:

`மனம் தளர்ந்துவிடாதீர்கள்; நிச்சயம் நிலவைத் தொடுவோம்!' - இஸ்ரோவுக்கு சிறுவனின் உணர்ச்சிபூர்வ கடிதம்

சத்யா கோபாலன்

`நாம் நிச்சயம் நிலவைத் தொடுவோம்' என 10 வயதுச் சிறுவன், இஸ்ரோவுக்கு எழுதியுள்ள கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

chandrayaan
chandrayaan

ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட்டில் சந்திரயான்-2 விண்கலம் கடந்த ஜூலை 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இது இஸ்ரோவின் பெரிய சாதனையாகப் பார்க்கப்பட்டது. சந்திரயான் 2 விண்கலத்தின் மூலம் உலக நாடுகளின் கவனமும் இந்தியா பக்கம் திரும்பியது. காரணம் இதுவரை எந்த நாடும் கால் பதிக்காத நிலவின் தென் துருவத்துக்கு சந்திரயான் 2 ஏவப்பட்டதுதான்.

ISRO
ISRO
DD

`விக்ரம் லேண்டர் உடனான தகவல் துண்டிக்கப்பட்டாலும், ஆர்பிட்டரை நாம் தொடர்ந்து கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்க முடியும். விக்ரம் லேண்டர் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது என்பது வெறும் 5 சதவிகித தோல்வியே. நிலவில் கால்பதிக்கும் திட்டத்தில் 95 சதவிகிதம் வெற்றிபெற்றுவிட்டோம்’ என இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்தனர்.

ISRO
ISRO
DD

சந்திரயான் நிலவில் நிலைநிறுத்தப்படவில்லை என்றாலும் விஞ்ஞானிகளின் கடுமையான உழைப்பை பிரதமர் மோடி உட்பட அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இதையடுத்து விக்ரம் லேண்டர் நிலவின் எந்தப் பகுதியில் உள்ளது என்று தெரியாமல் தவித்துவந்த நிலையில் நேற்று ஆர்பிட்டரின் உதவியுடன் லேண்டர் இருக்கும் பகுதியை இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். மேலும், விக்ரம் லேண்டரின் தெர்மல் இமேஜை, ஆர்பிட்டர் படம் பிடித்துள்ளது.

தொடர்ந்து இன்று விக்ரம் லேண்டரை துல்லியமாகக் கண்டுபிடிக்க ஆர்பிட்டரை நிலவுக்கு மிக அருகில் கொண்டு செல்ல இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு உணர்ச்சிகரமான ஒரு கடிதத்தை எழுதியுள்ளார், 10 வயதான ஆஞ்சநேய கவுல் என்ற சிறுவன். இந்தக் கடிதத்தை அவரின் தாய் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தற்போது அது வைரலாகி வருகிறது.

சிறுவன் எழுதியுள்ள கடிதத்தில், “ ஒரு நன்றியுள்ள இந்தியரின் உணர்வுகள். அவ்வளவு சீக்கிரம் மனம் தளர்ந்துவிடாதீர்கள். நாம் நிச்சயம் நிலவைத் தொடுவோம். ஆர்பிட்டர் இன்னும் அங்கேதான் உள்ளது என்பதை மறந்துவிட வேண்டாம். அது நமக்கு புகைப்படங்களை அனுப்பும்.

அடுத்தபடியாக நாம் எங்கு செல்ல வேண்டும் என்பன போன்ற அனைத்து விஷயங்களையும் அது காட்டும். விக்ரம் லேண்டர் ஒருவேளை நிலவில் தரையிறங்கியிருக்கலாம் மற்றும் பிரக்யான் ஆர்பிட்டர் இன்னும் உயிர்ப்புடன்தான் உள்ளது. இனி அதிலிருந்து வரும் கிராஃபிக்கல் விவரங்களைப் பெறத் தயாராக இருப்போம். அப்படி நடந்துவிட்டால் வெற்றி நமது கைகளில்தான் உள்ளது.

அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் சந்திரயான் 3 நிலவைத் தொடும். அதில் கவனம் செலுத்துங்கள்.
சிறுவன் ஆஞ்சநேய கவுல்

இந்தியாவின் அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு இஸ்ரோ தான் உத்வேகம். இஸ்ரோ நீங்கள் எங்கள் பெருமை, நன்றியுள்ள தேசத்தின் இதயபூர்வமான நன்றிகள். ஜெய்ஹிந்த்” எனக் குறிப்பிட்டுள்ளார். சிறுவனின் இந்தக் கடிதத்தைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.