Published:Updated:

100 குழந்தைகள் பலி... முதல்வரின் அலட்சிய பதில்... ரண வேதனையில் ராஜஸ்தான்!

100 குழந்தைகள் பலியான ராஜஸ்தான் மருத்துவமனை
100 குழந்தைகள் பலியான ராஜஸ்தான் மருத்துவமனை

ராஜஸ்தான் கோட்டா நகரில் ஒரே மாதத்தில் 100 குழந்தைகள் அலட்சியம் காரணமாக பலியாகியுள்ளன. பல வருடமாக குழந்தை இல்லாமல் இருந்த பெண்ணும் குழந்தையை பறி கொடுத்துக் கதறுகிறார்!

புத்தாண்டு தினத்தில் மட்டும் 67,385 குழந்தைகள் இந்தியாவில் பிறந்துள்ளன. சீனாவில் 42,299 குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த விஷயத்தில், சீனாவை நாம் முந்திவிட்டோம் என்று பெருமை பேசிக்கொள்கிறோம். குழந்தைகள் பெற்றுக்கொள்வதைக் காட்டிலும், அவர்களை நல்ல ஆரோக்கியமான குடிமகனாக மாற்றித்தருவதில் பெற்றோர் மற்றும் அரசுகளின் கவனம் இருக்க வேண்டும். ஆனால், இந்தியாவில் அப்படி நடக்கிறதா ?

குழந்தை பிறப்பில் இந்தியா முதலிடம்
குழந்தை பிறப்பில் இந்தியா முதலிடம்

ஏனென்றால், ஒரே மாதத்தில் 100 குழந்தைகள் இறந்து போயிருக்கின்றன. வடமாநிலங்களில் குழந்தைகள் வளர்ப்பில் காட்டப்படும் அலட்சியம் அதிகம். அந்த வகையில், உத்தரப்பிரதேசத்தைத் தொடர்ந்து இப்போது ராஜஸ்தானின் கோட்டா அரசு மருத்துவமனையில் ஒரே மாதத்தில் 100 குழந்தைகள் இறந்துள்ளன. சீனாவில் புத்தாண்டு தினத்தில் பிறந்த 42,299 குழந்தைகளையும் நல்ல உடல் வலுவுள்ள சிறந்த குடிமகனாக அந்த நாடு கண்டிப்பாக உருவாக்கிக் காட்டிவிடும். மக்கள் நலன் சார்ந்த அரசும், அரசு ஊழியர்களையும் கொண்டுள்ள நாடு அது. ஆனால், நம் நாடோ பாதி குழந்தைகளை பறிகொடுத்துவிட்டு அரசியல் செய்துகொண்டிருக்கிறது.

நீட் பயிற்சி மையங்களுக்குப் பெயர் போன கோட்டாவில், ஜே.கே. லான் அரசு மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து இன்றுவரை 104 குழந்தைகள் இறந்துள்ளன. ஆனாலும் அரசின் அஜாக்கிரதையும் அலட்சியமும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ராஜஸ்தான் அமைச்சர்கள் சிலர் இன்று ஆய்வுக்காக இந்த மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது, அமைச்சர்களுக்கு கார்பெட் விரித்து மருத்துவமனை நிர்வாகம் வரவேற்பு கொடுத்துள்ளது. இது எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போலிருப்பதாக ராஜஸ்தான் மக்கள் கொதிக்கின்றனர். அமைச்சர்கள் வந்த தினத்திலும் இரு குழந்தைகள் இறந்தன. 23, 24 ஆகிய தேதிகளில் மட்டும் 48 மணி நேரத்துக்குள் 10 குழந்தைகள் இறந்துள்ளன.

அமைச்சர்களுக்காக விரிக்கப்பட்ட கார்பெட்
அமைச்சர்களுக்காக விரிக்கப்பட்ட கார்பெட்
`பரம எதிரிக்குத் தக்க பதிலடி காத்திருக்கிறது!’ -அமெரிக்க தாக்குதலால் கொதிக்கும் இரான் தலைவர்

பல ஆண்டு காலமாக குழந்தை இல்லாமல் தவித்த பத்மா ராவால் என்ற பெண்ணின் ஐந்து மாதக்குழந்தையும் நிமோனியாவால் 23- ம் தேதி இறந்துபோனது. குழந்தையைப் பறிகொடுத்த பத்மா கதறி அழுதது காண்போரைக் கலங்கடித்துள்ளது. பத்மாவைத் தேற்ற முடியாமல் உறவினர்கள் உடன் சேர்ந்து கதறினர். பத்மாவின் உறவினர் ஒருவர் கூறுகையில், `வார்டில் இரவு நேரத்தில் ஒரு நர்ஸ் கூட பணியில் இல்லை. ஆக்ஸிஜன் சிலிண்டர்களைக் கூட எங்களை இயக்கச் சொல்கின்றனர்.. எங்களுக்கு அதைப்பற்றி தெரியுமா?' என்று குமுறினார்.

மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மாநில அரசின் பொறுப்பற்ற தன்மையால் குழந்தைகள் இறந்ததாகவும் முதல்வராக உள்ள அசோக் கெலாட் பதவி விலக வேண்டுமென்றும் உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி கடுமையாகச் சாடியுள்ளார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் "எங்கள் ஆட்சியில் இதுவரை 100 குழந்தைகள்தான் இறந்துள்ளனர். இதற்கு முன் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் 1000 குழந்தைகள் இறந்தார்களே அதையெல்லாம் மறந்துவிட்டீர்களா? மீடியாக்கள் இந்த விஷயத்தில் அரசியல் செய்கின்றன'' என்று மாயாவதிக்கு அலட்சியமாகப் பதில் கூறியுள்ளார். லான் மருத்துவமனையில் ஒவ்வோர் ஆண்டும் குழந்தைகள் இறப்பு அதிகரித்துக் கொண்டேதான் உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டில் 1,198 குழந்தைகளும் 2015-ம் ஆண்டு 1,260 குழந்தைகளும் 2016-ம் ஆண்டில் 1,193 குழந்தைகளும் 2017- ம் ஆண்டு 1,027 குழந்தைகளும் 2018-ம் ஆண்டு 1,005 குழந்தைகளும் 2019-ம் ஆண்டு 963 குழந்தைகளும் இறந்து போயுள்ளன. மாதம் சரசாரியாக 90 குழந்தைகள் இறக்கின்றன.

"மிஸ்டர் ஹர்ஷ்வர்த்தன்! நீங்களே ஒரு டாக்டர்தானே... நீங்கள் மருத்துவமனைக்கு விசிட் அடியுங்களேன். இங்கே சிலர் தெரிந்தும் தெரியாமலும் புரிந்தும் புரியாமலும் பேசி வருகின்றனர்!"
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்
புத்தாண்டு அன்று பிறந்த குழந்தைகள்... சீனாவை முந்திய இந்தியா..! #VikatanInfographics

"பிற மருத்துவமனைகளுக்கு குழந்தைகளை சிகிச்சைக்காக கொண்டு சேர்க்கின்றனர். அங்கு முடியாதபட்சத்தில், கடைசி நேரத்தில் இங்கு சிகிச்சைக்கு குழந்தைகளைக் கொண்டு வருகின்றனர். அதற்குள் குழந்தைகளின் உடல் நிலை மோசமடைந்து விடுகிறது. அதனால்தான் எங்களால் காப்பாற்ற முடியாமல் போகிறது'' என்று லான் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் சொல்லப்படுகிறது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் இந்த விஷயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி ராஜஸ்தான் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். ஹர்ஷவர்த்தனுக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள அசோக் கெலாட், "மிஸ்டர் ஹர்ஷ்வர்த்தன்! நீங்களே ஒரு டாக்டர்தானே... நீங்கள் மருத்துவமனைக்கு விசிட் அடியுங்களேன். இங்கே சிலர் தெரிந்தும் தெரியாமலும் புரிந்தும் புரியாமலும் பேசி வருகின்றனர்'' என்று கூறியுள்ளார்.

நங்கனா குருத்வாரா விவகாரம்... பாகிஸ்தான் தரும் விளக்கம் என்ன?

பச்சிளம் குழந்தைகள் பரிதாபமாகப் பலியாவதைத் தடுப்பதற்கு ஒருங்கிணைந்து பணி செய்வதை விடுத்து, வெட்கமே இன்றி அரசியல் செய்யும் அசிங்கத்தை வேறெந்த தேசத்திலும் பார்க்க முடியாது.

அடுத்த கட்டுரைக்கு