இந்தியாவில் கேரளா, தமிழகம், கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரப்பிரதேசம் ஆகிய ஆறு மாநிலங்களில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுவருவதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார். மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
கேரளாவில் கொரோனா தொற்று வேகமாகப் புதிய உச்சத்தை நோக்கி நகர்கிறது. அங்கு தினசரி பாதிப்பு எண்ணிக்கை நாற்பதாயிரத்தைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படும் சதவிகிதம் 37.17-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்தபோதிலும், 3.2 சதவிகித அளவுக்கே மருத்துவமனையில் சிகிச்சைக்காக மக்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரள அரசு கடுமையாக முயன்றுகொண்டிருக்கிறது.

கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்துவருவதால், கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த, கேரள அரசு முடிவு செய்துள்ளது. மேலும், கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், ``கேரளாவில் கொரோனாவின் 3-வது அலை பரவல் மிக வேகமாக உள்ளது. இதனால் அடுத்த மூன்று வாரங்களில் இதன் வேகம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே, மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் மருத்துவமனைகளுக்கு வருவோர் எண்ணிக்கை மேலும் உயரும்'' என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பதிவில், ``கேரளா மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 100 சதவிகிதம் ( 2,67,09,000) முதல் தவணை தடுப்பூசியும், 83 சதவிகிதம் ( 2,21,77,950) பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மேலும் 33 சதவிகிதம் (2,91,271) பேருக்கு முன்னெச்சரிக்கை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 15 முதல் 17 வயதுக்குட்பட்டோரில் 61 சதவிகிதம் (9,25,722) பேருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை கேரளாவில் ஐந்து கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.