வெளியிடப்பட்ட நேரம்: 17:57 (23/08/2017)

கடைசி தொடர்பு:17:57 (23/08/2017)

சரியும் இந்தியத் தொலைத்தொடர்பு சந்தை!

சில நாள்களாக உச்சத்திலேயே நிலைத்து நின்று வரும் இந்தியப் பங்குச்சந்தையால் பல தொழில் துறைகளும் உச்சத்தில் வருவாய் ஈட்டி வரும் நிலையில் டெலிகாம் துறை மட்டும் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித வளர்ச்சியும் காணவில்லை.

டெலிகாம் துறை

உலகச் சந்தைகளில் நிலவிவரும் நிச்சயமற்ற தன்மை, சர்வதேச அரசியல் சூழல், அமெரிக்கா-வடகொரியா இடையே நிலவிவரும் போர் பதற்றம், சந்தை நிலவரத்தின் முக்கியக் காரணியான கச்சா எண்ணெய் விலையேற்றம், இவையனைத்தையும் கடந்து, இன்றைய இந்தியப் பங்குச்சந்தை உச்சத்தில் தொடங்கியுள்ளது. தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், 132.75 புள்ளிகள் உயர்ந்து 31,424 புள்ளிகளாக உள்ளது. அதே வேளையில், தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 31.70 புள்ளிகள் உயர்ந்து, 9,797 புள்ளிகளாக உள்ளது.

தேசியப் பங்குச்சந்தையின் உயர்வு காரணமாக உருக்கு, பார்மா, ரியல் எஸ்டேட் போன்ற துறைகளின் வர்த்தகம் உச்சத்தில் ஏறியுள்ளது. பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்களால் பல துறைகளிலும் இதுவரையில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், எவ்வித மாற்றங்களும், வளர்ச்சியும் இல்லாமல் இருக்கும் ஒரே துறையாக உள்ளது, டெலிகாம் என்னும் தொலைதொடர்பு துறை.

டெலிகாம் சந்தாதாரர்களின் எண்ணிக்கை கடந்த 2008-ம் ஆண்டு நிலவரப்படி 300 மில்லியன். தற்போதைய நிலவரப்படி 2017-ம் ஆண்டில் 1.2 பில்லியன் சந்தாதரர்களாக உயர்ந்துள்ளனர். முதலீட்டாளர்களுக்கு இந்த எண்ணிக்கை மகிழ்ச்சியை அளித்த போதும், சென்செக்ஸ் நிலவரம் கடந்த பத்து ஆண்டுகளில் 3.25 மடங்கு அதிகரித்த போதும், டெலிகாம் துறையின் பங்குகள் ஒரு சதவிகித வளர்ச்சியைக் கூடக் காணவில்லை. அதிகரித்த கடன் நிலுவைகள், அசாதாரமான போட்டி, விலை இல்லா நிலைமை, ஒழுங்குமுறை பிரச்னை எனப் பல சிக்கல்களால் தொலைதொடர்பு துறை மட்டும் எவ்வித வளர்ச்சியையும் இந்த பத்தாண்டுகளில் காணாத ஒரே துறையாக உள்ளது.