வெளியிடப்பட்ட நேரம்: 20:44 (23/08/2017)

கடைசி தொடர்பு:20:44 (23/08/2017)

பந்தளம் வெற்றிலை, காடை முட்டை, நண்டு கருவாடு… களைகட்டும் கட்டப்பனை மார்க்கெட்!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ளது கட்டப்பனை நகராட்சி. 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ள இந்த நகரத்தின் மிக முக்கிய சிறப்புகளில் ஒன்று, ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய வளைவு அணையான `இடுக்கி அணை'. மற்றொரு சிறப்பு, அணைக்கு இணையான கட்டப்பனை மார்க்கெட். எப்போதுமே பரபரப்பாகச் செயல்படும் இந்த மார்க்கெட், வாரம்தோறும் சனிக்கிழமைகளில் தன்னை விரிவுப்படுத்திக்கொள்ளும். இதனால், சனிக்கிழமைகளில் மட்டும் இரண்டு இடங்களில் மார்க்கெட் செயல்படுகிறது. இடுக்கி மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள், இங்குதான் காய்கறி, பழங்கள், வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்குகிறார்கள். இவ்வளவு சிறப்பம்சங்கள்கொண்ட கட்டப்பனை மார்க்கெட்டுக்குள் ஒரு ரவுண்டு வருவோமா..?

கட்டப்பனை

பந்தளம் வெற்றிலையும் பச்சைப் பாக்கும்:

கட்டப்பனை மார்க்கெட்

கும்பகோணம் கொழுந்து வெற்றிலை எப்படி தமிழ்நாட்டில் பிரபலமோ, அதேபோல கேரளாவில் பிரபலமானது பந்தளம் வெற்றிலை. பார்க்க பிரமாண்டமாகக் காட்சியளிக்கும் இந்த வெற்றிலையில் காரம் இருக்காது. சாதாரணமாகவே கடித்துச் சாப்பிடலாம். ஒரு வெற்றிலை ஒரு ரூபாய்க்கு விற்கப்படும். பந்தளம் வெற்றிலைக்கு அருகிலேயே பச்சைப் பாக்கு வைக்கப்பட்டிருக்கிறது. வெற்றிலை வாங்கிய கையோடு பாக்கையும் வாங்கிச் செல்லலாம்.

காடை முட்டை:

கட்டப்பனை மார்க்கெட்

பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் காடை முட்டை, கட்டப்பனை மார்க்கெட்டின் தனி அடையாளம். 20 முட்டைகள்கொண்ட பாக்கெட், ஐம்பது ரூபாய். கோழி முட்டைகளைவிட காடை முட்டைகளையே பெரும்பாலான கடைகளில் பார்க்க முடிந்தது.

மீன் முதல் கருவாடு வரை:

கட்டப்பனை மார்க்கெட்

மார்க்கெட்டின் ஒரு பகுதியை, மீன் உணவுகள் ஆக்கிரமித்திருந்தன. கடல் உணவுகள் அதில் ஏராளம். சுறா முதல் இறால் வரை அனைத்தையும் பார்க்க முடிந்தது. இவற்றில் வித்தியாசமாக இருந்தது சிப்பிதான். அதுவும் நன்னீர் சிப்பியின் உள்ளே இருக்கும் உயிரினத்தைத் தனியாக எடுத்து மலைபோல் குவித்துவைத்திருந்தார்கள். கிலோ 250 ரூபாய். கோழிக்கறியை வறுப்பதுபோல அதை வறுத்துச் சாப்பிடலாமாம். அடுத்ததாக கருவாட்டுக்கடை. மீன் கடையில் என்னவெல்லாம் உயிரோடு இருந்தனவோ அவை அனைத்தும் இங்கே கருவாடாக இருந்தன. ஆச்சர்யப்படத்தக்க வகையில் நண்டு கருவாடு இருந்தது. நண்டை உப்பில் போட்டு உரியமுறையில் பக்குவப்படுத்தி, கருவாடாக மாற்றியிருக்கிறார்கள். சிறிது முதல் பெரியது வரை துண்டு துண்டுகளாகக் கருவாடு அழகாக கடை முழுவதும் அடுக்கப்பட்டிருந்தது.

கொடம் புளியும் தாகமுக்தியும்:

பழம்புளி என்றழைக்கப்படும் கொடம்புளி, ஒரு வகைப் பழம். அதைக் காயவைத்தால் கருமையாக மாறும். இதை `கொடம்புளி' என்பார்கள். கேரளாவில் சமையலில் புளிக்குப் பதிலாகக் கொடம்புளியைத்தான் பயன்படுத்துவார்கள். இதனால் ரத்த அழுத்தம், இதயநோய், பித்தக்கோளாறுகள் நீங்கும். அதேபோல் `தாகமுக்தி' என்ற பொடியை, அனைத்து கடைகளிலும் விற்பனை செய்கிறார்கள். சுக்கு, மிளகு, ஏலம், நன்னாரி, கருங்காலி போன்ற பல வகையான மூலிகைகள் கலந்த பொடி அது. கேரளாவில் சுடுநீரில் இந்தத் தாகமுக்திப் பொடியைச் சிறிதளவு சேர்த்துக் கொதிக்கவைத்து குடிக்க வேண்டும். ஹோட்டல்கள் முதல் வீடுகள் வரை நிச்சயம் தாகமுக்திப் பொடி கலந்த தண்ணீரைத்தான் குடிக்கிறார்கள். இதன் மூலம் சிறுநீரகப் பிரச்னைகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

மேலும், ரோஸ்வுட், மகாகனி போன்ற மரங்களின் கன்றுகளை மார்க்கெட்டில் பார்க்க முடிந்தது. ஒரு கன்று மூன்று ரூபாய் முதல் ஐந்து ரூபாய் வரை விற்கப்படுகிறது. கேரள மக்களுக்கே உரிய சிவப்பரிசி, தாகமுக்தி, கப்பக்கிழங்கு, நேந்தரம்பழம், கொடம்புளி என மார்க்கெட் முழுவதும் பல வண்ண காட்சிகள்தான். நம்ம ஊர் மார்க்கெட்போல் அல்லாமல் சுத்தமாக இருந்தது. அந்தப் பகுதியில் அடிக்கடி மழை பெய்தாலும், மார்க்கெட்டுக்குள் தண்ணீர் தேங்குவதில்லை. சுத்தமாகவும் சுகாதாரமாகவும் காட்சியளிக்கிறது கட்டப்பனை மார்க்கெட். இடுக்கி மாவட்டத்துக்குச் சென்றால் அப்படியே கட்டப்பனை மார்க்கெட் பக்கமும் போய் வாருங்கள். ஷாப்பிங் பேக் மறக்காமல் கொண்டுசெல்லுங்கள்!


டிரெண்டிங் @ விகடன்