வெளியிடப்பட்ட நேரம்: 20:17 (23/08/2017)

கடைசி தொடர்பு:20:17 (23/08/2017)

நீட் விவகாரம்... மிஸோரம் அமைச்சரிடமிருந்து தமிழக அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!

மிஸோரம் மாநிலத்தில் சக்மா என்கிற பழங்குடியினத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களுக்கு, எம்.பி.பி.எஸ் மருத்துவப் படிப்பில் இடம் கிடைக்கவில்லை என்பதற்காக, தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் மிஸோரம் மாநில மீன்வளத் துறை அமைச்சர் புத்த தன் சக்மா. இந்த நான்கு மாணவர்களும் மாநில இடஒதுக்கீட்டின் கீழ் தகுதிபெற்றிருந்தும், அகில இந்திய அளவில் எந்த மருத்துவக் கல்லூரியிலும் இடம் அளிக்காததைக் கண்டித்து, தமது பதவியைத் துச்சமெனத் தூக்கி கடாசியிருக்கிறார். 

நீட் விவகாரம் - மிஸோரம் அமைச்சர் ராஜினாமா

மிஸோரம் அமைச்சர், நான்கு மாணவர்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். ஆனால், தமிழ்நாட்டில் பல நூறு மாணவர்களின் மருத்துவக் கனவு கலைந்திருக்கும் இந்த வேளையில், எந்தவொரு அரசியல்வாதியும் தனது பதவியை இழக்கத் தயாராக இல்லை. தமிழ்நாட்டில் வாக்குகள் பெற்று எம்.எல்.ஏ-வாகவும் எம்.பி-யாகவும் பதவிபெற்றால் போதும். மாணவரது நலனாவது... மண்ணாங்கட்டியாவது என, சொந்த நலனைத் தவிர மற்ற அனைத்தையும் மறந்துவிடுகிறார்கள். 

நீட் சார்ந்து கேள்வியைக் கேட்பதற்கு முன்பே, தமிழக அரசின் பதவியில் இருப்பவர்கள், `நாங்கள் மத்திய அரசிடம் தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறோம். விரைவில் அவசர சட்டத்தில் மத்திய அரசின் அனுமதியைப் பெற்றுவிடுவோம்' என்று வெற்றுக் கோஷத்தைத் தவிர, எதையும் செய்யவில்லை. எதிர்க்கட்சியினர், மாவட்ட அளவில் ஆர்ப்பாட்டம், மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தியதோடு சரி. இரண்டு கட்சிகளிலும், மாநிலங்கள் அவையிலும், மக்கள் அவையிலும் உறுப்பினர்கள் இருந்தும் நாடாளுமன்றம் ஸ்தம்பிக்கும் அளவுக்குப் பெரிய அளவில் குரலும்கொடுக்கவில்லை, போராடவும் இல்லை. 

ஆறு மாதங்களுக்கு முன்பு சட்டமன்றத்தில் `நீட் தேர்விலிருந்து முழுமையாக விலக்கு பெற வேண்டும்' என்ற சட்டம் இயற்றியும் இதுவரை ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற முடியவில்லை. இதற்கிடையில் `நீட்' தேர்வுக்கு ஓர் ஆண்டு விலக்கு பெற வேண்டும் என்றால், சட்டமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களின் ஒப்புதலோடு இயற்றப்பட்ட சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை வைத்து சாதித்துக்கொண்டதாகவும் சொல்கிறார்கள். 

குஜராத்தில் சி.பி.எஸ்.இ மாணவர்களுக்கும், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் தனி ஒதுக்கீட்டை வழங்கிய அரசாணையை நீதிமன்றம் ரத்துசெய்தது தெரிந்தும், தமிழக அரசு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவிகித ஒதுக்கீடும், சி.பி.எஸ்.இ மற்றும் இதர பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 15 சதவிகித ஒதுக்கீடும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாணை பிறப்பித்தார்கள். 

இந்த அரசாணையை எதிர்த்து சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர் தொடர்ந்த வழக்கில், அரசாணை செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்துத் தாக்கல் செய்த மேல்முறையீடுகள், உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த மேல்முறையீடுகளால் ஒரு மாதகால அளவு வீணாகி, மாணவர்களின் மனதில் பதற்றத்தை உருவாக்கியதுதான் மிச்சம். 

அரசாணைகள் எல்லாம் செல்லுபடியாகாது என்றவுடன், மீண்டும் சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு ஒப்புதல் வாங்க, சென்னைக்கும் டெல்லிக்கும் விமானத்தில் பறந்தே களைத்துப்போனார்கள் தமிழக அரசின் சுகாதாரத் துறைச் செயலரும் அமைச்சரும். `தமிழகத்தில் மத்திய அரசும் மாநில அரசும் மாணவர்களின் நலனில் வஞ்சகம் செய்கிறார்கள்' என்று எதிர்க்கட்சியின் குரல், மக்களிடம் சேர ஆரம்பித்தவுடன் ``நீட் தேர்விலிருந்து ஓர் ஆண்டுக்கு மட்டும் விலக்களிக்க மத்திய அரசு ஆதரவு தெரிவிக்கும்' என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் ஒரு திரியைக் கிள்ளிப் போட்டார். மீண்டும் டெல்லியில் முகாமிட்ட தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலரும் அமைச்சரும் `ஓர் ஆண்டு விலக்கு பெறுவதற்கான அவசர சட்டத்துக்கு, உள்துறை அமைச்சகத்தில் ஒப்புதல் வாங்கிவிட்டோம், அமைச்சகத்திலும் மூன்று துறை அனுமதி கிடைத்துவிட்டது'' என்று நீட்டி முழக்கினார்கள்.

மேற்கண்ட சம்பவங்களுக்கிடையில் மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு தமிழக எம்.பி-களின் வாக்குகளையும், எம்.எல்.ஏ-க்களின் வாக்குகளையும் சிந்தாமல் சிதறாமல் வாங்கி, ஜனாதிபதி தேர்தலிலும், துணை ஜனாதிபதி தேர்தலிலும் ஜெயித்து, தனது காரியத்தைக் கச்சிதமாக முடித்துக்கொண்டது. இனி, தமிழக மாணவர்கள் மருத்துவம் படித்தால் என்ன... படிக்கவில்லை என்றால் என்ன? பிஜேபி அரசுக்கு நஷ்டம் எதுவுமில்லை. 

நீட் தேர்விலிருந்து ஓராண்டு விலக்கு பெறுவதற்கு முன்பே மூத்த வழக்குரைஞர் நளினி சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர, `நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர்கள் கலந்தாய்வை உடனடியாக நடத்திட வேண்டும்' என்றும், `செப்டம்பர் 4-ம் தேதிக்குள் சேர்க்கையை நடத்தி முடித்திருக்க வேண்டும்' என்றும் தீர்ப்பு வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம். 

மிஸோரம் சிறிய மாநிலமாக இருந்தாலும், அங்கு உள்ள மாணவருக்குப் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றதும், மீன்வளத் துறை அமைச்சராக இருந்த புத்த தன் சக்மா, தனது பதவியைத் தூக்கி வீசியிருக்கிறார். தமிழ்நாட்டில் மருத்துவக் கனவுடன் படித்த அனிதாவும் இதர மாணவர்களும் என்ன செய்யப்போகிறார்கள் தமிழக அரசியல்வாதிகளை?

தமிழக மாணவர்களின் நலனுக்காக தமிழ்நாட்டில் எத்தனை பேர் பதவி விலகத் தயாராக இருக்கிறார்கள்? இளைஞர்கள் இதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.


டிரெண்டிங் @ விகடன்