“அதெல்லாம் கிடக்கட்டும் மோடிஜி, சாமான்யனுக்கு என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?” | What will be PM Modi's plans for Indian laymen..?

வெளியிடப்பட்ட நேரம்: 16:39 (23/08/2017)

கடைசி தொடர்பு:16:39 (23/08/2017)

“அதெல்லாம் கிடக்கட்டும் மோடிஜி, சாமான்யனுக்கு என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?”

மோடி

ந்திய மக்களின் நலனும், அவர்களின் மகிழ்ச்சியுமே பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் தலையாய நோக்கம் என்ற பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும், அரசின் செயல்பாடுகளினால், நாடு எந்த நிலையை அடைய வேண்டும் என்பது குறித்தே எப்போதும் சிந்தித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் தொழில் நிறுவனங்களின் இளம் தலைமைச் செயல் அதிகாரிகள் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய மோடி, "இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும், இந்த நாடு நம்முடையது என்று கருதி நாட்டிற்காக உழைக்க வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் நாட்டின் மேம்பாட்டிற்காகப் பாடுபட வேண்டும். இந்தியாவின் மேம்பாட்டிற்காக இளம் தொழில்முனைவோர், ராணுவ வீரர்களைப் போன்று பங்காற்ற வேண்டும். நாடு முழுவதும் அடிமட்டத்தில் உள்ள ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காக என்னென்ன பணிகளைச் செய்ய முடியும் என்று சிந்திக்க வேண்டும்.

சுதந்திரப் போராட்டத்தின்போது, மகாத்மா காந்தி, எந்தளவு தீரத்துடன் செயல்பட்டாரோ அதேபோன்ற உத்வேகத்துடன் இந்தியாவின் மேம்பாட்டிற்கு மிகப்பெரிய இயக்கத்தை உருவாக்க வேண்டியது அவசியம்.

இந்தியாவில் ஏற்பட்டு வரும் பல்வேறு பிரச்னைகளுக்குச் சாத்தியமாகக்கூடிய தீர்வுகளை உருவாக்க முடியும் என்று தற்காலத் தலைமுறை கருதினால், சந்தை வாய்ப்புகளும், வேலைவாய்ப்புகளும் தானாகவே உருவாக்கப்படும். 

பணமில்லா பரிவர்த்தனைகளைப் பொறுத்தவரை, இளம் தொழில்முனைவோர், 2022-ம் ஆண்டுக்குள் அதைச் சாத்தியமாக்க முன்வர வேண்டும். தற்போதுள்ள டிஜிட்டல் இந்தியா நடைமுறைகள், கண்ணாடி இழை நெட்வொர்க்கின் அதிவேக இணைய இணைப்புகளின் உதவியுடன் 100 மடங்கு விரைவடையும். 

விவசாய நிலங்களில் அதிக மரங்களை நடுவதன் மூலம், எதிர்காலத்தில் மரம் இறக்குமதி குறைவதுடன் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகவும் உதவும். பல்வேறு சட்டங்கள் மூலம் விவசாயிகளின் நலன் உறுதிசெய்யப்பட்டுள்ளது. 

கதர் உற்பத்திப் பொருள்களை அதிக அளவில் வாங்கி, பரிசுப் பொருள்களாகப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதால், ஏழை மக்கள் மிகுந்த பயன் அடைந்து வருகிறார்கள். சிறுவணிகர்கள் பயன் அடைவதற்காக மின்னணு வர்த்தக நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் சுற்றுலாத்தலங்களை ஊக்குவித்து, மேம்படுத்தவும் அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும்" என்றார்.

modi

200-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில், 'டிஜிட்டல் இந்தியா'-வை பிரதமர் மோடி வலியுறுத்தியிருப்பதன் மூலம் எதிர்காலத்தில் பணம் இல்லா பரிவர்த்தனையே நீடிக்கும் என்பது புலனாகிறது. மேலும், எண்ணற்ற வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த பிரதமர், பல்வேறு தொழில் நிறுவனங்களின் தலைவர்களுடன் உரையாற்றினார். 

நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, இதுபோன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பதாக மோடி தெரிவித்த போதிலும், சாமான்ய மக்களின் வாழ்வாதாரம் முன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்கிறதா என்பது கேள்விக்குறியே.

பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போதும் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். ஜி.எஸ்.டி அமல்படுத்திய பின்னரும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி இருப்பதும் உண்மையே. 

சாதாரண, நடுத்தர மக்கள் உணவருந்தும் ஹோட்டல்களில் ஜி.எஸ்.டி-க்கென குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படுவதே மக்கள் மீதான மிகப்பெரும் சுமையாக உருவெடுத்துள்ளது. நாட்டின் வளர்ச்சியில் தொழில் அதிபர்கள் பங்கெடுத்துக் கொள்வது ஒருபுறம் இருக்கட்டும்; சாமான்ய மக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதற்கு மத்திய அரசு என்ன செய்யப் போகிறது என்பதை பிரதமர் அறிவிப்பாரா?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்