வெளியிடப்பட்ட நேரம்: 20:15 (23/08/2017)

கடைசி தொடர்பு:20:15 (23/08/2017)

லால் பகதூர் சாஸ்திரி முதல் சுரேஷ் பிரபு வரை! - 'தார்மீகம்' சாத்தியமாகும் ரயில்வே துறை

ரு தவறுக்கான தார்மீகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு பதவி விலகுவதாக அறிவிப்பது எல்லாம் இக்கால அரசியல் சூழலில் யாராலும் எதிர்பார்க்க முடியாது. ஆனால், உத்தரப்பிரதேசத்தில் நடந்த ஒரு ரயில் விபத்துக்கு தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு.

ரயில்வே அமைச்சர்கள்

உத்தரப்பிரதேசத்தில் கடந்த 19-ம் தேதி பூரி - ஹரித்வார் - கலிங்கா உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில், அன்று மாலை முசாபர் நகர் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ரயிலின் 13 பெட்டிகள் தடம் புரண்டன. 20-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 80-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். முசாபர் நகர் அருகே தண்டவாளத்தைச் சீரமைக்கும் பணி நடந்ததை, உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் ஓட்டுநருக்கு தெரிவிக்காததே விபத்துக்கான காரணம் எனத் தகவல் வெளியானது. இந்த விபத்து பற்றி ட்விட்டரில் எழுதிய சுரேஷ் பிரபு, 'இந்த விபத்து என் மனதுக்குள் மிகப் பெரிய வலியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, என்னுடைய பதவியில் இருந்து விலகுகிறேன்' என உருக்கமாகப் பதிவிட்டிருந்தார். 'ஒரு ரயில் விபத்துக்குத் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகுவது என்பது, ரயில்வே அமைச்சகத்துக்கு புதிய செய்தி அல்ல. காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் இதுபோன்று பல சம்பவங்கள் நடந்துள்ளன. ரயில்வே அதிகாரிகளின் தவறைத் தன்னுடைய நிர்வாகத்தின் கோளாறு என எண்ணும் அமைச்சர்கள் இதற்கு முன்பும் இருந்துள்ளனர்' என்கின்றனர் ரயில்வே அதிகாரிகள். இதுகுறித்த பட்டியலையும் நம்மிடம் விவரித்தனர். 

இந்திய ரயில்வே துறை வரலாற்றிலேயே தார்மீகப் பொறுப்பேற்கும் கலாசாரத்தை முதலில் தொடங்கி வைத்தவர் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி. 1956-ம் ஆண்டு அரியலூர் ரயில் விபத்து தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த விபத்தில்
142 பேர் பலியானார்கள். இந்த விபத்து ஏற்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் மெஹ்பூப் நகரில் (தற்போதைய தெலுங்கானாவில் இந்நகரம் அமைந்துள்ளது) ஏற்பட்ட ஒரு ரயில் விபத்தில் 112 பேர் பலியானார்கள். இந்த விபத்தின் பாதிப்பில் இருந்த சாஸ்திரிக்கு, அரியலூர் விபத்து கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சற்றும் தாமதிக்காமல், தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அப்போதைய பிரதமர் நேருவிடம் வழங்கினார். சாஸ்திரியைப் போன்ற நேர்மையாளரை இழக்க விரும்பாத நேரு, 'பொறுத்திருங்கள்’ எனக் கூறியபோது, ‘இந்தத் தவறை நான்தான் ஈடுகட்ட வேண்டும். என்னைப் போக விடுங்கள்’ என்றார் சாஸ்திரி உறுதியாக. இறுதியின் சாஸ்திரியின் பிடிவாதமே வென்றது. இதே சாஸ்திரி, பின்னாளில் இந்தியாவின் பிரதமராக உயர்ந்தார். 

இதன் பின்னர், 43 ஆண்டுகளுக்குப் பின்னர் 1999-ம் ஆண்டு 290 பேரைப் பலிகொண்ட அஸ்ஸாம் மாநில, கெய்சல் ரயில் விபத்துக்குத் தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகுவதாக அறிவித்தார் ரயில்வே அமைச்சராக இருந்த நிதிஷ் குமார். அவரது இந்தச் செயல் அரசியல் மட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பின்னாளில், பீகார் முதல்வராக மக்களின் உள்ளத்தில் இடம்பிடித்தார் நிதிஷ். 

அதேபோல், 2000-ம் ஆண்டு அன்றைய ரயில்வே அமைச்சராக இருந்த மம்தா பானர்ஜி, தன்னுடைய பதவிக்காலத்தில் நிகழ்ந்த இரண்டு ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று அன்றைய பிரதமர் வாஜ்பாயிடம் ராஜினாமா கடிதத்தை அளித்தபோது அக்கடிதத்தை ஏற்க மறுத்துவிட்டார் வாஜ்பாய். இதே மம்தா கம்யூனிஸ்ட்டுகளின் கோட்டையாக இருந்த மேற்கு வங்கத்தின் முதல்வர் பதவியில் அமர்ந்தார். இந்தியா முழுவதும் 16 ரயில்வே மண்டலங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். எங்கோ நடக்கும் தவறு, தன்னுடைய துறையில் ஏற்பட்ட நிர்வாகக் குளறுபடி என நினைக்கும் அளவுக்கு அமைச்சர்கள் வேதனைப்படுவது ரயில்வே துறையில்தான் அதிகம் நிகழ்ந்திருக்கிறது. லால் பகதூர் சாஸ்திரி, நிதிஷ், மம்தா வரிசையில் சுரேஷ் பிரபுவும் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்திருக்கிறார். அவருடைய ராஜினாமா முடிவை பிரதமர் அலுவலகம் ஏற்றுக்கொள்ளவில்லை. 'காத்திருங்கள்' என ஒற்றை வரியில் கூறிவிட்டார் பிரதமர். சுரேஷ் பிரபு ராஜினாமா ஏற்கப்படுமா என ரயில்வே அதிகாரிகள் மத்தியில் தீவிர விவாதமே நடந்து வருகிறது" என்கின்றனர் ரயில்வே அதிகாரிகள்.