Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கேரளா முழுவதும் நாளை முதல் திருவோணம்

கேரளா முழுவதும் நாளை முதல் திருவோணம் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. 

முன்பு கேரள மண்ணை ஆண்ட மகாபலி மன்னன் ஆட்சியின்போது மக்கள் எல்லா வளமும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.
அந்த மன்னன் சிறந்த கொடை வள்ளலாகவும் திகழ்ந்துள்ளார். அவரது கொடை தன்மையை சோதிக்க எண்ணிய மகாவிஷ்ணு குள்ளமான வாமன அவதாரம் எடுத்து அவரிடம் சென்று தனக்கு 3 அடி நிலம் கேட்டார். மகாபலி மன்னனும் அதற்கு சம்மதித்தார். உடனே மகா விஷ்ணு விஸ்வரூபம் எடுத்து 3 உலகங்களையும் 2 அடியால் அளந்துவிட்டு 3–வது அடிக்கு இடம் கேட்டார். அதற்கு மகாபலி மன்னன் தனது தலையை காட்டினார்.

மகாவிஷ்ணு அந்த மன்னன் தலைமீது காலை வைத்து பூமிக்குள் அமிழ்ந்து போகச் செய்து முக்தி வழங்கினார். அப்போது மகாபலி மன்னன் தான் ஆட்சிபுரிந்து வந்த நாட்டு மக்களை ஆண்டுக்கு ஒருமுறை வந்து பார்க்கும் வரத்தை தனக்கு அளிக்கும்படி கேட்டார். மகாவிஷ்ணுவும் திருவோண நாளன்று அவர் வந்து மக்களை பார்க்க வரம் வழங்கினார். அதன்படி ஒவ்வொரு திருவோண நாளன்றும் மகாபலி மன்னர் நாட்டு மக்களை பார்க்க வருவதாக ஐதீகம். அதன்படி மன்னனை மகிழ்ச்சியுடன் வரவேற்பதற்காக அந்த நாளை ஓணப்பண்டிகையாக கேரள மக்கள் கொண்டாடுகிறார்கள். ஓணம் பண்டிகை கொல்லம் வருஷம் என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான சிங்கம் மாதத்தில் 10 நாள்கள் கொண்டாடப்படுகிறது.  

ஓணம் பண்டிகை ஆவணி மாதம் வரும் திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. கேரளாவில் ஓணக்கொண்டாட்டம் தொடங்கினால் தமிழகத்தில் இருந்து காய்கறிகளும் பூக்களும் லாரி லாரியாக செல்லும். இதனால் தமிழக விவசாயிகளும் மகிழ்ச்சி அடைவார்கள். குமரி மாவட்டத்தில் தோவாளை பூ மார்க்கெட்டில் கேரளப் பூ வியாபாரிகளின் கூட்டம் அலைமோதும். வடசேரி காய்கறி சந்தை, அப்டா மார்க்கெட்டிலும் வாழைத்தார்கள், காய்கறிகள் வாங்க ஏராளமானோர் குவிவார்கள். ஓணம் பண்டிகைக்கு முதல் 10 நாள்கள் தங்கள் வீட்டு முன்பு பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகையை வரவேற்று மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.

மேலும் ஓணம் ஊஞ்சலாட்டம், ஓணப் பந்து போட்டி, ஓணப் படகு போட்டிகளும் நடத்தப்படும். ஓண விழாவின் உச்சகட்ட சிறப்பே ஓண சத்யா என்கிற விருந்துதான். கசப்பு தவிர மற்ற சுவைகளில் 64 வகையான "ஓண சத்யா " என்ற உணவு தயாரிக்கப்படுகிறது. புது அரிசி மாவில் தயார் செய்யப்பட்ட அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், பருப்பு பாயசம், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு பப்படம், காய வறுத்தது, சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்குப் படைக்கப்படும். ஓண சத்யாவை விருந்தினருக்கும், உறவினர்களுக்கும் அளித்து வெகுவிமர்சையாக ஓணம் பண்டிகையை கொண்டாடி முடிப்பார்கள் மலையாளிகள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement